தேச விரோத வழக்கில் திமுக எம்எல்ஏ-வை கைது செய்ய வேண்டும் - பாஜக போர்க்கொடி! - Seithipunal
Seithipunal


தேச விரோத, சட்ட விரோத, இறையாண்மைக்கு விரோத கருத்துக்களை பேசிய திமுகவின் சட்டமன்ற உறுப்பினர்  பண்ருட்டி வேல்முருகனை கைது செய்ய வேண்டும் என்று, பாஜக மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்த அவரின் செய்திக்குறிப்பில், "தமிழகத்தில் தொடர்ந்து இஸ்லாமிய மத அடிப்படைவாத செயல்களை ஊக்குவித்துக் கொண்டிருக்கும் எஸ்டிபிஐ கட்சியின் பேரணிக்கு நேற்று (16/11/2024) சென்னையில் காவல்துறை அனுமதியளித்தது வன்மையாக கண்டிக்கத்தக்கது. 

மேலும், இந்த மாநாட்டில் திமுக வின் சட்டமன்ற உறுப்பினர் பண்ருட்டி வேல்முருகன் பேசும் போது இந்தியாவில் தடைசெய்யப்பட்ட இஸ்லாமிய மத அடிப்படைவாத அமைப்பான 'பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா'வை (PFI) இந்திய ராணுவத்துக்கு நிகராக புகழ்ந்து பேசியதோடு, காவல்துறை  இந்த பேரணிக்கு தடை போட்டிருந்த நிலையில், தானே முதலமைச்சர் அலுவலகத்திலும், சென்னை காவல் துறை ஆணையரிடத்திலும், நுண்ணறிவுப் பிரிவு தலைவரிடத்திலும், உளவுத்துறை பிரிவிலும் பேசி இந்த பேரணிக்கு அனுமதி பெற்று தந்ததாகவும், எஸ்டிபிஐ-யின் துணை அமைப்பான  'பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா' இந்திய ராணுவத்தின் துணைப்படை போன்றது, சட்ட ஒழுங்கை பாதுகாக்கும் அமைப்பு என்றெல்லாம் பேசியுள்ளது சட்ட விரோதம் மட்டுமல்ல, தேச விரோத கருத்தும் கூட.

மேலும், இந்த இஸ்லாமிய மத அடிப்படைவாத அமைப்புகளின் செயல்களுக்கு தானே பொறுப்பேற்பதாக கூறியுள்ளார் வேல்முருகன். ஹிந்து இயக்கங்களை சேர்ந்தவர்களின் பல படுகொலைகள், குண்டு வெடிப்புகளினால் பறிபோன அப்பாவி மக்களின் உயிர்கள், கோவை குண்டுவெடிப்பு, ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்துடனான தொடர்புகள் என தேச விரோத, சட்ட விரோத, ஹிந்து மத விரோத செயல்கள் மற்றும் 'பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா' வினால் அரங்கேற்றப்பட்ட அனைத்து செயல்களுக்கும் திமுகவின் சட்டமன்ற உறுப்பினரான பண்ருட்டி  வேல்முருகன் பொறுப்பேற்றுக் கொள்கிறாரா?

அப்படி பொறுப்பேற்பதானால் திமுக தன் சட்டமன்ற உறுப்பினரின் செயல்களை ஆதரிப்பதாக எடுத்துக்கொள்ளலாமா? இல்லையெனில் அவரை கட்சியை விட்டு நீக்குமா? சட்டமன்ற உறுப்பினர் பதவியை நீக்க பரிந்துரை செய்யுமா? மேலும், இந்தியாவின் ஒருமைப்பாடு, இறையாண்மை, பாதுகாப்புக்கு விரோதமாக செயல்பட்டதோடு, சிமி (SIMI), ஜமாஅத்-உல்-முஜாஹிதீன் மற்றும் ஐஎஸ்ஐஎஸ் போன்ற பயங்கரவாத இஸ்லாமிய மத அடிப்படைவாத அமைப்பினரோடு தொடர்பிருந்த காரணத்தினால் தடை செய்யப்பட்ட 'பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா' வை புகழ்வதோடு அதை போற்றி பாதுகாக்கிற சட்டமன்ற உறுப்பினரின் கோரிக்கையை உண்மையிலேயே தமிழக முதலமைச்சர், காவல் துறை உயர் அதிகாரிகள் ஏற்று கொண்டு பேரணிக்கு அனுமதி கொடுத்தனரா என்பதை தொடர்புடையவர்கள் விளக்க வேண்டும். 

தேசத்திற்கு எதிரான கருத்துக்களை அந்த நிகழ்ச்சியில் பேசியவர்கள் அனைவரையும் கைது செய்வதோடு, பண்ருட்டி வேல்முருகனையும் கைது செய்து சிறையிலடைக்க வேண்டும். மேலும், தடை செய்யப்பட்ட இஸ்லாமிய மத அடிப்படைவாத 'பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா' வின் உறுப்பினர்கள்/ஆதரவாளர்களோடு அவர்களின் தொடர்பு குறித்த தீவிர விசாரணையை முடுக்கிவிட வேண்டும். 

நாட்டிற்கு எதிரான பயங்கரவாத செயல்களை சற்றும் சிந்திக்காமல் அரங்கேற்றும் இயக்கங்களை/ நபர்களை கட்டுப்படுத்த வேண்டிய பொறுப்பும், கடமையும் தமிழக காவல் துறைக்கு உள்ளது என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும். 

இந்த நிகழ்ச்சியில் வேல்முருகன் பேசியதன் நோக்கம் குறித்து தீர விசாரிக்க வேண்டும். மேலும், இவர்களுக்கு தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்பிருக்குமேயானால் தேசிய புலனாய்வு முகமையின் உதவியோடு வருங்காலத்தில் இஸ்லாமிய மத அடிப்படைவாத இயக்கங்களின் செயல்பாடுகளை தடுக்க வேண்டும்" என்று நாராயணன் திருப்பதி கேள்வி எழுப்பியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

BJP Narayanan Condemn to DMK MLA and TNGovt MK Stalin


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->