மாவட்ட செயலாளர் கைது! பதற்றம்! ஆளும் திமுக அரசிற்கு வேண்டுகோள் விடுத்த கூட்டணி கட்சி!
CPIM request to dmk govt
மயிலாடுதுறை மாவட்டத்தில் நான்கு வழிச்சாலைக்கு கையகப்படுத்தப்பட்ட நிலங்கள், வீடுகளுக்கு உரிய இழப்பீடு வழங்கிட வேடனும் என்று, தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து அக்கட்சியின் மாநில செயலாளர் கே பாலகிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கையில், "மயிலாடுதுறை மாவட்டத்தில் விழுப்புரம் - தூத்துக்குடி நான்கு வழிச்சாலைக்கு கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு உரிய இழப்பீடு வழங்கிடாமல் 200க்கும் மேற்பட்ட காவல்துறையினரை குவித்து அரசு நிர்வாகம் பணிகளை துவக்கிய போது, இழப்பீடுகள் வழங்கிவிட்டு பணிகளை துவக்க வலியுறுத்திய பொதுமக்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் பி.சீனிவாசன் உள்பட பலரையும் காவல்துறையினர் வலுக்கட்டாயமாக கைது செய்துள்ளனர். இச்சம்பவத்தினால் அப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
விழுப்புரம் - தூத்துக்குடி நான்கு வழிச்சாலைக்காக மயிலாடுதுறை மாவட்டத்தில் நிலங்களையும், வீடுகளையும் அரசு கையகப்படுத்தியது. இந்நிலங்களுக்கு உரிய இழப்பீடு வழங்கிட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து போராடி வந்துள்ளது.
பட்டா நிலம், தரிசு நிலம், ஆதீன நிலம் என எந்த நிலத்தில் குடியிருந்தாலும் அதற்கான இழப்பீட்டையும், மாற்று ஏற்பாட்டையும் செய்து தர வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை வைத்து போராடி வருகிறது.
இப்போராட்டத்தின் விளைவாக சமீபத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் முன்னிலையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உரிய இழப்பீடு வழங்கிய பின்னரே பணிகள் மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சியர் உறுதியளித்துள்ளார்.
இந்நிலையில் இன்று (12.12.2022) காலையில் உரிய இழப்பீடு வழங்காமல் காவல்துறையினரை குவித்து வைத்து மிரட்டி, கைது செய்து பணிகளை மேற்கொள்ளும் நடவடிக்கை சரியான அணுகுமுறையல்ல என்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சுட்டிக்காட்ட விரும்புகிறது.
எனவே, மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் உறுதியளித்தபடி நான்கு வழிச்சாலைக்கு கையகப்படுத்தப்பட்ட நிலங்கள் வீடுகளுக்கு முழுமையான இழப்பீட்டுத் தொகை வழங்கிய பின்னரே பணிகளை துவக்கிட வேண்டுமெனவும், குத்தகை விவசாயிகளுக்கும் உரிய இழப்பீட்டை வழங்கிட வேண்டுமெனவும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழக அரசையும், மாவட்ட நிர்வாகத்தையும் வலியுறுத்துகிறது."
இவ்வாறு அந்த அறிக்கையில் கே. பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.