இந்தியா கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் யார்? மாநிலக் கட்சிகளும் முக்கியம்! எகிறும் எதிர்பார்ப்பு!
Mallikarjuna Kharge going to select as india alliance coordinator
எதிர்வரும் நாடாளுமன்ற பொது தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு எதிராக எதிர்கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியா கூட்டணியை உருவாக்கியுள்ளன. இந்தியா கூட்டணியில் தற்போது வரை மொத்தம் 28 கட்சிகள் இணைந்துள்ள நிலையில் இந்த கூட்டணியின் 3வது ஆலோசனை கூட்டம் நேற்று மும்பையில் தொடங்கியது.
அதன் தொடர்ச்சியாக இன்று நடைபெறும் இரண்டாவது நாள் ஆலோசனை கூட்டத்தில் 28 கட்சிகளைச் சேர்ந்த 63 தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். இந்த கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், பீகார் முதல்வர் நிதீஷ் குமார், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட பல தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த நிலையில் இந்தியா கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராக காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தேர்ந்தெடுக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் 11 பேர் கொண்ட ஒருங்கிணைப்பு குழுவில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டோர் இடம் பெற வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.
மேலும் ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக மத்திய அரசு அறிவித்திருப்பது குறித்து நேற்று நடைபெற்ற கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் ஆலோசனை நடத்தியுள்ளன. இன்று நடைபெறும் கூட்டத்தில் பிரச்சார யுத்தியை உருவாக்கி முறையாக கட்டமைப்பை இறுதி செய்வது குறித்து ஆலோசனை நடைபெற உள்ளது
இந்த ஆலோசனை கூட்டத்தில் ஒவ்வொரு கட்சியிலிருந்தும் ஒருவர் பெயரை கொடுக்குமாறு காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கேட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஆலோசனைக் கூட்டம் இன்று பிற்பகல் 3:30 மணி வரை நடைபெற உள்ள நிலையில் அதன் பிறகு எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் கூட்டாக செய்தியாளர்களை சந்திக்க உள்ளனர். இந்தியா கூட்டணியின் லோகோ இன்று வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் மேலும் சில கட்சிகள் இந்தியா கூட்டணியில் இணைய உள்ளதால் சில மாற்றங்களை பரிந்துரை செய்து இருப்பதாக கூறப்படுகிறது.
இதனால் இந்தியா கூட்டணியின் லோகோ இன்று வெளியிடப்படாது என தகவல் வெளியாகி உள்ளது. மாநில வாரியாக கட்சியின் பலம், கள நிலவரம் ஆகியவற்றின் அடிப்படையில் தொகுதி பங்கீடு செய்ய மாநிலக் கட்சிகளின் தங்கள் கருத்துக்களை முன்வைத்துள்ளன. அதேபோன்று தேர்தல் பிரச்சாரம், பேரணிகள் திட்டமிடல், சமூக ஊடகங்களை கையாளுவது என் தனித்தனி குழுக்கள் நியமிக்கவும் ஆலோசிக்கப்பட்டுள்ளது. எனினும் இது குறித்தான அதிகாரப்பூர்வ தகவல் இன்று பிற்பகல் 3:30 மணிக்கு மேல் செய்தியாளர்கள் சந்திப்பில் அறிவிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
English Summary
Mallikarjuna Kharge going to select as india alliance coordinator