ரூ.2,000 கோடி மோசடியை அம்பலப்படுத்திய பாமக நிர்வாகி மீது பொய்வழக்கு போடுவதா? - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு முழுவதும் உள்ள மக்களிடம் ரூ.2000 கோடிக்கும் கூடுதலாக மை வி3 ஆட்ஸ் நிறுவனம் மோசடி செய்ததை அம்பலப்படுத்தியதற்காக பாட்டாளி மக்கள் கட்சியின் முன்னாள் மாவட்ட செயலாளர் அசோக் ஸ்ரீநிதி மீது கோவை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்திருப்பது கண்டிக்கத்தக்கது என்று, அக்கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்த அவரின் அறிக்கையில், "மக்கள் பணத்தை மோசடி செய்தவர்களை கைது செய்யாமல், மோசடி செய்தவர்களை அம்பலப்படுத்துபவர்கள் மீது பொய்வழக்கு பதிவு செய்வது தான் திராவிட மாடலின் கொள்கையா? என அரசு விளக்க வேண்டும். பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளராக பணியாற்றிய அசோக் ஸ்ரீநிதி பல்வேறு அநீதிகளுக்கு எதிராக குரல் கொடுத்தவர். 

கோவையைச் சேர்ந்த மை வி3 ஆட்ஸ் என்ற நிறுவனம் ரூ.2000 கோடிக்கும் கூடுதலாக மக்களிடம் பணம் வசூலித்து மோசடி செய்ததை அம்பலப்படுத்தும் வகையில் பல போராட்டங்களை நடத்தினார். அதன்பயனாக மை வி3 ஆட்ஸ் நிறுவனத்தின் சக்தி ஆனந்தன் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கும் போதிலும் இதுவரை அவர் கைது செய்யப்படவில்லை. 

அவரை கைது செய்ய வேண்டும் என்று அசோக் ஸ்ரீநிதி வலியுறுத்தி வந்த நிலையில் தான் அவர் சைபர் கிரைம் பிரிவிலுள்ள பெண் உதவி ஆய்வாளர் ஒருவரை பணி செய்ய விடாமல் தடுத்ததாக அவர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. அது அப்பட்டமான பொய்வழக்கு என்பதில் எள் முனையளவுக்கும் ஐயம் இல்லை.

மை வி3 ஆட்ஸ் நிறுவனத்திற்கு எதிராக அசோக் ஸ்ரீநிதி போராடத் தொடங்கிய நாளில் இருந்தே அவருக்கு எதிராக பல்வேறு வழிகளில் அந்த நிறுவனம் நெருக்கடி கொடுத்து வருகிறது. அத்தகைய நெருக்கடிகளில் ஒன்றாக யு-டியூபில் பேசிய ஒருவர், அசோக் ஸ்ரீநிதிக்கும், அவரது குடும்பத்தினருக்கும் கொலை மிரட்டல் விடுத்தது மட்டுமின்றி, அவரது தாயார் உள்ளிட்டோரை அவமரியாதையாக பேசியுள்ளார். இது தொடர்பாக கோவை சைபர் கிரைம் காவல்நிலையத்தில் அவர் புகார் அளித்துள்ளார். 

ஆனால், பல வாரங்கள் ஆகியும் அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில், விசாரணைக்காக காவல்துறை அழைத்ததன் பேரில் தான் அவர் காவல் நிலையத்துக்கு சென்றிருக்கிறார். அங்கு தமது புகார்மனு மீது இன்னும் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கேட்டிருக்கிறார். 

இதற்காகத் தான் அவர் சைபர்கிரைம் காவல் நிலைய பெண் உதவி ஆய்வாளரை பணி செய்ய விடாமல் தடுத்ததாக வழக்கு பதியப்பட்டுள்ளது. மை வி3 ஆட்ஸ் நிறுவனத்தின் மோசடியை அம்பலப்படுத்தியதற்குப் பிறகு அசோக்கிற்கு தொடர்ந்து அச்சுறுத்தல்கள் வந்தன. ஒரு கட்டத்தில் அவரை பட்டப்பகலில் கொலை செய்ய முயற்சிகள் நடந்தன. 

ஆனால், அவரைக் கொல்ல முயற்சித்தவர்கள் மீது கூட காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை. மாறாக, மக்கள் நலனுக்காக போராடும் அவர் மீது காவல்துறை பொய்வழக்கு பதிவு செய்கிறது என்றால், காவல்துறை யாருடைய நலன்களைப் பாதுகாக்கிறது என்பதை தமிழக அரசும், காவல்துறையும் விளக்க வேண்டும்.

மோசடி செய்த மை வி3 ஆட்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை; அசோக் ஸ்ரீநிதியை படுகொலை செய்ய முயன்றவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை; அசோக் ஸ்ரீநிதி மற்றும் குடும்பத்தினருக்கு கொலை மிரட்டல் விடுத்து, அவரது குடும்பப் பெண்களை அவதூறாக பேசியவர்கள் மீது எந்த நடவடிக்கையும் இல்லை. ஆனால், அதை கேள்வி கேட்டதற்காக அசோக் ஸ்ரீநிதி மீது பொய் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

மோசடி செய்தவர்களைப் பாதுகாப்பதும், மக்களுக்காக குரல் கொடுப்பவர்களை பொய்வழக்குப் பதிவு செய்வதும் தான் திராவிட மாடல் அரசின் கொள்கையா? என்பதை தமிழ்நாட்டு மக்களுக்கு ஆட்சியாளர்கள் விளக்க வேண்டும். மோசடி நிறுவனத்தைக் காப்பாற்ற காவல்துறையே அதன் அதிகாரி ஒருவரை கருவியாக பயன்படுத்துவதை அனுமதிக்க முடியாது. தமிழக காவல்துறையின் நிலைமை இந்த அளவுக்கு மோசமடைந்திருப்பது வேதனை அளிக்கிறது. 

மக்களைக் காக்க வேண்டிய அரசு, மோசடி நிறுவனத்தை பாதுகாப்பது பெரும் குற்றமாகும். குற்றவாளிகளுக்கு துணை போகும் செயலை காவல்துறை உடனடியாக கைவிட வேண்டும். அசோக் ஸ்ரீநிதி மீதான வழக்கை கோவை காவல்துறை உடனடியாக திரும்பப்பெற வேண்டும். அசோக் ஸ்ரீநிதி அளித்த புகாரின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட அனைவரையும் கைது செய்ய வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

MyV3Ads PMK Anbumani Ramadoss DMK Govt


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->