மீனவர்களின் வாழ்வாதாரங்களை அழித்து "ஆன்மிக-கலாச்சார மையம்" அமைக்கும் திமுக அரசு! அன்புமணி இராமதாஸ் கடும் கண்டனம்! - Seithipunal
Seithipunal


மீனவர்களை பாதிக்கும் திருவிடந்தை ஆன்மிக- கலாச்சார மையம் அமைக்கும் திட்டத்தை  தமிழக அரசு கைவிட வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்த அவரின் அறிக்கையில், "சென்னை கிழக்குக் கடற்கரை சாலையில் திருவிடந்தைக்கு அருகில் 233 ஏக்கர் நிலப்பரப்பில் ஆன்மிகம் மற்றும் கலாச்சார மையம் அமைக்க தமிழக அரசு முடிவு செய்திருக்கிறது. இத்திட்டத்திற்கு மீனவ மக்களிடையே கடுமையான எதிர்ப்பு எழுந்தும் கூட அதைப்பற்றி சிறிதும் கவலைப்படாமல் ஆன்மிக மையம் அமைக்க இந்து சமய அறநிலையத் துறையும்,  சுற்றுலாத்துறையும் துடிப்பது கண்டிக்கத்தக்கது.

ஆன்மிக மையம் அமைக்கவோ, கலாச்சார மையம் அமைக்கவோ பாட்டாளி மக்கள் கட்சி எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. மாறாக, தமிழ்நாட்டின் பூர்வகுடி மக்களான மீனவர்களின் வாழ்வாதாரங்களை அழித்து விட்டு, அந்த மையங்களை அமைக்க வேண்டுமா? என்பது தான் எனது வினா.  ஆன்மிக மற்றும் கலாச்சார மையம் அமைப்பதற்காக  தேர்வு செய்யப்பட்டிருக்கும் இடத்தை தான் மீனவர்கள் அவர்களின் படகுகளை நிறுத்துவது, வலைகள் மற்றும் மீன்களை காய வைப்பது போன்றவற்றுக்காக பயன்படுத்தி வந்தனர். இப்போது அங்கு ஆன்மிக மையம் அமைக்கப்பட்டால் மீனவர்களின் முற்றிலும் பாதிக்கப்படும்.

திருவிடந்தையில் ஆன்மிக மற்றும் கலாச்சார மையம் அமைக்கும் திட்டம்  மீனவர்களை மட்டுமின்றி, பேரிடர்களுக்கும் வழிவகுக்கும். ஆன்மிக மையம் அமைக்கப்படுவதற்கு அருகில் உள்ள ஆளவந்தார் அறக்கட்டளைக்கு சொந்தமான நிலங்களில் இயற்கையான மணல் மேடுகள் உள்ளன. அவை சுனாமி அலைகளைக் கூட தடுக்கும் வல்லமை பெற்றவை. 

இந்தத் திட்டத்திற்காக அவை அகற்றப்படும் என்று கூறப்படும் நிலையில், சுனாமியிலிருந்து திருவிடந்தை உள்ளிட்ட பகுதிகளுக்கு பாதுகாப்பு கிடைக்காது. அந்தப் பகுதி தான் நிலத்தடி நீர்வளத்தை சேமிக்கும் தளங்களைக் கொண்டிருக்கிறது. இயற்கையையும், மீனவ மக்களின் வாழ்வாதாரத்தையும் சிதைத்து விட்டு ஆன்மிக , கலாச்சார மையம் அமைக்க வேண்டுமா? என தமிழக அரசு சிந்திக்க வேண்டும்.

ஆன்மிக, கலாச்சார மையம் அமைப்பதற்கு சுற்றுச்சூழல் அனுமதி அளிப்பதில் காட்டப்பட்ட அசாத்திய வேகம் பல்வேறு ஐயங்களை ஏற்படுத்தியுள்ளது.  இத்திட்டத்திற்கான மாநில அளவிலான சுற்றுச்சூழல் ஒரே நாளில் வழங்கப்பட்டதாகவும்,  அதுகுறித்த கூட்டத்தில் மீனவ சமுதாய பிரதிநிதிகள் ஒருவர் கூட அழைக்கப்படவில்லை என்றும் மீனவ அமைப்புகள் குற்றஞ்சாட்டியுள்ளன. 

எந்த ஒரு திட்டமாக இருந்தாலும் மக்களை பாதிக்கும் வகையில் இருக்கக் கூடாது; உள்ளூர் மக்களால் வரவேற்கப்படும் வகையில் இருக்க வேண்டும். இந்த இரு தகுதிகளையும் பெறாத  ஆன்மிக, கலாச்சார மையத்தை திருவிடந்தை பகுதியில் அமைக்கும் திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும்" என்று அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

PMK Anbumani Ramadoss Condemn to DMK Govt MK Stalin


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->