பாமக நிர்வாகிகளுக்கு 20 கட்டளைகளை பிறப்பித்த மருத்துவர் இராமதாஸ்.! - Seithipunal
Seithipunal


பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் தனது கட்சி நிர்வாகிகளுக்கு 20 கட்டளைகளை பிறப்பித்துள்ளார். இதுகுறித்த அவரின் முகநூல் பதிவில்,

"பாட்டாளி மக்கள் கட்சி அடித்தட்டு மக்களின் முன்னேற்றத்திற்காக தொடங்கப்பட்ட கட்சி. கொள்கைகளையே உயிர்மூச்சாக கொண்ட கட்சி. பாட்டாளி மக்கள் கட்சியில் நிர்வாகிகளாக இருப்பவர்கள் விதிகளுக்கு உட்பட்டு தான் செயல்பட வேண்டும். 

பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகிகள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்த எனது வழிகாட்டுதல் இவை தான்....

1.   மக்களின் பிரச்சினைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுக்க வேண்டும். மக்களின் பிரச்சினைகளை கண்டறிந்து தீர்க்க வேண்டும். தேவைப்பட்டால் அதற்காக போராட வேண்டும்.

2.  உள்ளூரில் மக்களின் குறைகளை கேட்டறிந்து  அவற்றை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்களுக்குத் தேவையான சான்றிதழ்கள், அரசின் நலத்திட்ட உதவிகள் ஆகியவற்றை பெற வழிகாட்டுவது உள்ளிட்ட உதவிகளை செய்ய வேண்டும். உள்ளூர் மக்களின் தேவைகளை அரசு நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்று நிறைவேற்ற பாடுபட வேண்டும்.

3.   பாட்டாளி மக்கள் கட்சியின் பொறுப்பாளர்களை பொதுமக்கள் சந்திக்கும் போது, பொறுப்பாளர்களை பார்த்து பொதுமக்கள் முதலில் வணக்கம் வைக்கும் நிலை உருவாக வேண்டும். அந்த அளவுக்கு பொறுப்பாளர்களின் செயல்பாடுகள் அமைய வேண்டும்.

4.  பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகிகள் மதுவை வெறுப்பவர்களாகவும், மதுவுக்கு அடிமையான  மக்களை அந்தத் தீமையிலிருந்து மீட்பவர்களாகவும் திகழ வேண்டும். மது உள்ளிட்ட தீய பழக்கங்களுக்கு அடிமையானவர்களுக்கு பா.ம.க. பொறுப்பாளர்களாக செயல்படும் தகுதி கிடையாது.

5.  பாட்டாளி மக்கள் கட்சியினர் கட்டப்பஞ்சாயத்து போன்ற செயல்களில் ஒரு போதும் ஈடுபடக் கூடாது. மக்களுக்கு உதவிகளை மட்டும் தான் செய்ய வேண்டுமே தவிர, அவர்கள் வெறுக்கும் வகையில் செயல்படக் கூடாது.

6. ஒன்றிய, நகர, பேரூர் அளவிலான செயற்குழு கூட்டங்களின் போது, நிர்வாகிகள் செய்யும் தவறுகளை துணிச்சலுடன் சுட்டிக்காட்டுபவர்களாக பா.ம.க.வினர் செயல்பட வேண்டும்.

7.   கல்வி மற்றும் வேலைவாய்ப்புகள் தொடர்பாக  சமூக முன்னேற்ற சங்கத்துடன் இணைந்து வழி காட்ட வேண்டும். தேவையான உதவிகளை வழங்க வேண்டும்.

8.  பட்டதாரிகள், சமூக முன்னேற்ற சங்கத்தின் உறுப்பினர்களுடன் இணைந்து மாணவர்களுக்கு இலவச தனிப்பயிற்சி வகுப்புகளை (டியூஷன்) கிராம அளவில் நடத்த வேண்டும்.

9.   கட்சிப் பணிக்காக வெளியூர் செல்லும் போது, உள்ளூர் பொறுப்பாளர்கள் சாப்பிட அழைக்கும் போது, எளிய சைவ உணவு விடுதிக்கு மட்டுமே நிர்வாகிகள் செல்ல வேண்டும். கூடிய வரையில்  பொறுப்பாளர்கள் வீட்டில் அவர்களுக்காக சமைத்து வைக்கப்பட்டிருக்கும் சாதாரண உணவை,  அது கஞ்சியாக இருந்தாலும், மகிழ்ச்சியுடன் சாப்பிடும் வழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.

10.   சில மாவட்டங்களில் மாவட்ட செயலாளர்களாக இருப்பவர்கள் தங்களின் மகிழுந்து ஓட்டுனர்களை  அவர்கள் பகுதிக்கான ஒன்றிய செயலாளர்களாக நியமித்துக் கொள்வதாக அறிகிறேன். நிர்வாகிகள் நியமனத்தில் தகுதிக்கு மட்டும் தான் முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும். ஓட்டுனர்களை ஒன்றிய செயலாளர்களை நியமிப்பதை மாவட்ட செயலாளர்கள் கைவிட வேண்டும். அதை செய்யத் தவறும்  மாவட்ட செயலாளர்கள் அந்தப் பதவியில் நீடிக்க முடியாது என்பது நிச்சயம்.

11.  மக்கள் நலனுக்காகவும், சமூக நீதிக்காகவும்  பாட்டாளி மக்கள் கட்சி இதுவரை என்னென்ன பணிகளை செய்திருக்கிறது என்பதை அனைத்து தரப்பு மக்களிடமும் நேரில் விளக்க வேண்டும்.

12. வன்னியர்களுக்கான தனி இட ஒதுக்கீட்டுப் போராட்டம், பிற போராட்டங்கள் எந்த அளவுக்கு எழுச்சியாக நடத்தப்பட்டன? எவ்வளவு நெருக்கடிகளை சந்தித்து வெற்றிகரமாக போராட்டம் நடத்தப்பட்டது என்பதை மூத்தவர்களைக் கொண்டு இளைஞர்களுக்கு விளக்க வேண்டும். அதை வீடியோ பதிவு செய்து சமூக ஊடகங்களில் பரப்ப வேண்டும்.

13.  பா.ம.க. அரசியல் பயிலரங்கத்தில் நடைபெற்ற பயிற்சி வகுப்புகளில் கூறப்பட்டவாறு, மாதத்திற்கு ஒரு முறை கிளை, பேரூர், ஒன்றிய, மாவட்ட அளவில் செயல்வீரர்கள் கூட்டத்தை நடத்த வேண்டும். பவுர்ணமி நாளில் கிராமக் கிளை அளவிலான செயற்குழு கூட்டமும், அமாவாசை நாளில் ஒன்றிய, நகர, பேரூர் கூட்டங்களும் கூட்டப்பட வேண்டும். ஆங்கில மாதத்தின் முதல் நாள் அல்லது இரண்டாவது நாளில் மாவட்ட அளவிலான செயற்குழுக் கூட்டம் நடத்தப்பட வேண்டும்.

14. கிளை, பேரூர், ஒன்றிய, மாவட்ட அளவிலான செயல்வீரர்கள் கூட்டங்களில் எடுக்கப்படும் முடிவுகள் குறித்த காலத்தில் நிறைவேற்றப்படுவதை உறுதிப் படுத்த வேண்டும். தொடர்ந்து 2 மாதங்கள்  செயல்வீரர்கள் கூட்டத்தை நடத்தாவிட்டாலோ, அதில் எடுக்கப்படும் முடிவுகளை நிறைவேற்றத் தவறினாலோ, சம்பந்தப்பட்ட பொறுப்பாளர்கள் அந்தப் பொறுப்பில் நீடிக்க முடியாது.

15. உள்ளூரில் மக்கள் செல்வாக்கு பெற்றவர்கள், இளைஞர்கள், இளம்பெண்களை சந்தித்து பேசி பாட்டாளி மக்கள் கட்சியில் சேர்க்க வேண்டும். மாற்றுக் கட்சிகளில் மனக்குறையுடன் உள்ள நிர்வாகிகள், தொண்டர்களை சந்தித்து பேசி பாட்டாளி மக்கள் கட்சியில் சேர்க்க வேண்டும்.

16. ஒவ்வொரு ஊரிலும் கிளை அமைப்பு கண்டிப்பாக கட்டமைக்கப்பட வேண்டும். கிளை அமைப்பின் தலைவர், செயலாளர், பொருளாளர் ஆகியோர் மக்கள் மதிக்கத்தக்க பின்னணி கொண்டிருக்க வேண்டும்.

17. ஒவ்வொரு ஊரிலும் சங்க காலத்திலிருந்தும், கட்சி தொடங்கப்பட்ட நாளில் இருந்து உழைத்த மூத்தவர்களை நிர்வாகிகள் சென்று சந்திக்க வேண்டும். அவர்களின் ஆலோசனைகளை பெற்று செயல்பட வேண்டும்.

18. கட்சி அமைப்புகளில் பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும். 

19. அன்புமணி தம்பிகள் படை, தங்கைகள் படை  ஆகியவற்றை வலுப்படுத்தி அவர்கள் மூலமாகவும்  மக்கள் சந்திப்பு இயக்கங்களை நடத்த வேண்டும்.

20. மாவட்ட செயலாளர்கள் மாதத்திற்கு ஒரு நாள் ஏதேனும் ஒரு கிராமத்திற்கு சென்று அங்குள்ள  ஏழை வீட்டில் தங்க வேண்டும். அங்குள்ள மக்களுடன் கலந்துரையாடி, அவர்களுக்காக உழைத்து அவர்களின்ஆதரவைத் திரட்ட வேண்டும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

PMK Founder Dr Ramadoss 20 rules


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->