மதக்கலவரத்தை தூண்டும்.. பொன்முடியின் பேச்சை கண்டித்த நீதிமன்றம்! ஆதாரமில்லை என்ற தமிழக அரசு!
Ponmudi case DMK Chennai HC
அமைச்சர் பொன்முடி சைவம், வைணவம் மற்றும் பெண்களை குறித்து அவமதிக்கும் வகையில் பேசியதாக எழுந்த சர்ச்சையைத் தொடர்ந்து, அவருக்கு எதிராக தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்ய சென்னை உயர்நீதிமன்றம் பதிவுத்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.
பொன்முடி மீது முன்பு சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை நடைபெற்றபோது, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், அவரின் சர்ச்சைக்குரிய பேச்சு குறித்து கேள்வி எழுப்பினார். இதுபற்றி ஐந்து புகார்கள் பதிவாகியுள்ளன என்று அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து, விசாரணையை 23 ஏப்ரலுக்குத் தள்ளி வைத்த நீதிமன்றம், இன்று இந்த வழக்கை மீண்டும் விசாரணை செய்தது.
அப்போது, மதுரை உயர்நீதிமன்ற அமர்வில் இதே விவகாரம் தொடர்பாக வழக்கு விசாரணை நடைபெற்றதாகவும், அதில் பொன்முடிக்கு எதிரான புகாரில் வலுவான ஆதாரம் இல்லையெனத் தெளிவுபடுத்தி வழக்கை முடித்துவைத்ததாகவும், மூத்த அரசு வழக்கறிஞர் வில்சன் விளக்கினார்.
மற்றொரு பக்கமாக, பொன்முடியின் தரப்பில் வாதிட்ட மூத்த வழக்கறிஞர் விகாஷ் சிங், “உரையின் முழுப் பதிவும் கேட்கப்படாமல் நடவடிக்கை எடுக்கக் கூடாது” என்றார்.
இரு தரப்பையும் கேட்ட நீதிபதி, பொன்முடியின் பேச்சு மதக்கலவரத்தை தூண்டும் வகையில் இருப்பதாகக் குறிப்பிட்டு, இது வெறுப்பு பேச்சின் வரம்புக்குள் வருவதாகவும், போலீசார் நடவடிக்கை எடுக்காமல் இருப்பது துரதிருஷ்டவசமானதாகவும் கருத்து தெரிவித்தார்.
எனவே, தாமாக முன்வந்து விசாரணை எடுக்கும் வழக்காக பதிவு செய்து, தேவையான உத்தரவைப் பெற தலைமை நீதிபதியிடம் தாக்கல் செய்ய பதிவுத்துறைக்கு அவர் உத்தரவிட்டார்.
English Summary
Ponmudi case DMK Chennai HC