பயத்தில் திமுக அரசு! CM ஸ்டாலினிடமிருந்து தைப்பூச வாழ்த்து வருமா? வானதி சீனிவாசன்! - Seithipunal
Seithipunal


அனைத்து மதங்களையும் மதிப்பவராக இருந்தால், தைப்பூசத் திருவிழாவுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து சொல்ல வேண்டும் என்று பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் எம்எல்ஏ வலியுறுத்தி உள்ளார். 

இது குறித்து அவரின் அறிக்கையில், தமிழ்க் கடவுள் முருகனின் கந்தர் மலையை காக்க கூடிய கூட்டம் திமுகவினரை அச்சமடைய செய்திருக்கிறது. அனைத்து மதங்களையும் மதிப்பவராக இருந்தால், தைப்பூசத் திருவிழாவுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து சொல்ல வேண்டும். சென்னையை அடுத்த ஆவடியில், நேற்று (8.2.2025) நடந்த திமுக பொதுக்கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், வழக்கம்போல மத்திய பாஜக அரசு மீது வீண்பழியை, பொய் குற்றச்சாட்டுகளை சுமத்தியிருக்கிறார். எப்போதுமே, நாடாளுமன்றத்தில் முழுமையான பட்ஜெட் வாசிக்கப்படுவதில்லை. பட்ஜெட்டின் முக்கியமான அம்சங்கள் மட்டுமே சுருக்கமாக வாசிக்கப்படுகிறது என்பது முதலமைச்சர் ஸ்டாலின் உட்பட அனைவருக்கும் தெரியும். ஆனாலும் வேண்டுமென்றே, மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டின் பெயர் இல்லை என்று திரும்ப திரும்பச் சொல்லி மக்களை ஏமாற்ற நினைக்கிறார்.

வாசிக்கப்பட்ட 2024-25-ம் ஆண்டுக்கான தமிழ்நாடு பட்ஜெட்டில், 20க்கும் அதிகமான மாவட்டங்களின் பெயர்கள் இல்லை. அதனால், அந்த மாவட்டங்களுக்கு எந்த நிதியும் ஒதுக்கப்படவில்லை என்று எடுத்துக் கொள்ளலாமா? மத்திய அரசைப் பொறுத்தவரை, 'நிதி ஆணையம்' பரிந்துரைக்கும் அடிப்படையிலேயே, மாநிலங்களுக்கு நிதியை பகிர்ந்தளிக்கிறது. எந்தவொரு மாநிலத்திற்கும் நிதிப் பகிர்வை, கூட்டவோ, குறைக்கவோ முடியாது. இதுவும் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு தெரியும்.

1996 முதல் 2013 வரை, இடையில் ஒரு சில ஆண்டுகள் தவிர சுமார் 15 ஆண்டுகள் மத்திய அரசில் திமுக அங்கம் வகித்தது. முக்கியத் துறைகளின் அமைச்சர்களாக திமுகவைச் சேர்ந்தவர்கள் இருந்தனர். அப்போது, எந்த நடைமுறையின்கீழ் மாநிலங்களுக்கு நிதிப்பகிர்வு அளிக்கப்பட்டதோ, அதே நடைமுறையின்கீழ் தான், இப்போதும் மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. தமிழ்நாடு போன்ற மாநிலங்களுக்கு அதிக நிதி பகிர்வு வேண்டும் என்று, 'கொடுக்கும் இடத்தில்' இருந்த போது திமுக கோரவில்லை. இப்போது, மத்தியில் ஆட்சி அதிகாரம் இல்லை என்றதும், பாஜக அரசு நிதி கொடுக்கவில்லை என்று அவதூறு பரப்புகிறது. தமிழ்நாட்டு மக்களை பாஜக அரசுக்கு எதிராக திருப்பி அரசியல் ஆதாயம் தேட திமுக தொடர்ந்து முயற்சிக்கிறது.

அரசியல் களத்தில் பாஜகவை, திமுக எதிர்க்கலாம். அதனை வரவேற்கிறோம். எதிர்கொள்ளவும் தயாராக இருக்கிறோம். ஆனால், பாஜக ஆட்சி நடக்கிறது என்பதற்காக, எதற்கெடுத்தாலும் மத்திய அரசை தொடர்ந்து எதிர்த்துக் கொண்டிருந்தால், அவதூறு பரப்பிக் கொண்டிருந்தால், தமிழ்நாட்டின் வளர்ச்சி பாதிக்கப்படும் என்பதை திமுக உணர வேண்டும்.. இல்லையெனில், வரும் 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழ்நாட்டு மக்கள் உணர்த்துவார்கள். அதே ஆவடி பொதுக்கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், "தமிழ்நாட்டில் புதிய பிரச்னையை கிளப்பி, கலவரத்தை துாண்ட திட்டமிடுகின்றனர்.

அவரவர் கடவுள் அவரவர் நம்பிக்கை. ஆன்மிகம் வேறு, அரசியல் வேறு என, பகுத்தறிந்து பார்க்கும் மக்கள் வாழும் மாநிலம் தமிழ்நாடு. ஆன்மிகத்தை தங்கள் அரசியலுக்கு பயன்படுத்தும் தீய சக்திகளை, தமிழ்நாட்டு மக்கள் ஏற்க மாட்டார்கள். பிற மதத்தினரின் உணர்வுகளை மதிப்பவர்களையே, தமிழ்நாட்டு மக்கள் ஏற்பர். அதனால் தான், தமிழ்நாடு அமைதி பூங்காவாக உள்ளது. இதை, சில சக்திகளால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அதனால், தமிழ்நாட்டின் அமைதியை சீர்குலைத்து, வளர்ச்சியை தடுக்க நினைக்கின்றனர்" என கூறியிருக்கிறார்.

இதை பேசும்போது முதலமைச்சர் ஸ்டாலின் கண்களில் ஒரு பயம் தெரிந்தது. தமிழ்க் கடவுள் முருகனின், 'கந்தர் மலை'யை காக்க, சில மணி நேரங்களில் பல்லாயிரம் தமிழர்கள் திரண்டது அவருக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் இந்துக்கள் விழித்துக் கொண்டு விட்டார்களே என்ற பதற்றம் அவரது பேச்சில் தெரிந்தது.

முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சில் நாங்கள் உடன்படுகிறோம். பேசியபடியே, அவர் நடந்து கொள்ள வேண்டும். 'அரசியல் வேறு ஆன்மிகம் வேறு' என்பதுதான் பாஜகவின் நிலைப்பாடும். ஆனால், இந்து கோயில்களை மட்டும் மதச்சார்பற்ற அரசு ஏன் நிர்வகிக்க வேண்டும்? மற்ற மதங்களின் கோயில்கள் எல்லாம் அரசின் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறதா? ஒரு கண்ணுக்கு வெண்ணையும், மற்றொரு கண்ணுக்கு சுண்ணாம்பும் வைக்க கூடாது என்று தான் நாங்கள் சொல்கிறோம்.

திருப்பரங்குன்றம் பிரச்னை பற்றி பேசினால், தனது பயம் வெளியே தெரிந்து விடும் என்பதால், அதை சாதுரியமாக முதலமைச்சர் ஸ்டாலின் தவிர்த்திருக்கிறார். திருப்பரங்குன்றம் மலை பிரச்சனையில், இந்து அமைப்புகள் எந்த பிரச்னையும் செய்யவில்லை. தமிழ்க் கடவுள் முருகனுக்கு சொந்தமான திருப்பரங்குன்றம் 'கந்தர் மலை'யை, 'சிக்கந்தர் மலை' என்று பெயர் மாற்றி அபகரிக்க நடந்த முயற்சியை முறியடிக்கவே, இந்து முன்னணி எதிர்வினையாற்றியது. அதில் பாஜகவும் பங்கேற்றது.

திமுக, மதச்சார்பற்ற கட்சி என்றால், அனைத்து மதத்தினருக்கும் பொதுவான கட்சி என்றால், அனைத்து மதங்களையும் சமமாக மதிக்கும் கட்சி என்றால், தமிழ்க் கடவுள் முருகனின் கந்தர் மலையை அபகரிக்க நடந்த முயற்சியை தடுத்திருக்க வேண்டும். ஒரு வார்த்தை கண்டித்திருக்காவது வேண்டும். ஆனால், சிறுபான்மை ஓட்டு வங்கிக்காக, அடிப்படைவாதிகள் அங்கு சென்ற போது அனுமதியும் தந்து, அபகரிக்கும் முயற்சிக்கு துணை போனது. அதனால், தமிழக இந்துக்களுக்கு மேற்பட்ட கொந்தளிப்பே மதுரை பழங்காநத்தத்தில் திரண்ட கூட்டம். அந்த கூட்டம் முதலமைச்சர் ஸ்டாலினை, திமுகவினரை, அதன் கூட்டணி கட்சியினரை பாதிப்படையைச் செய்திருக்கிறது என்பதை, முதலமைச்சரின் பேச்சில் இருந்து உணர முடிகிறது. அந்த பயம் இருக்கட்டும்.

முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களே, இனியாவது நீங்கள் பேசியதை செயலில் காட்டுங்கள். அனைத்தும் மதத்தினருக்கும் பொதுவான முதலமைச்சர் என்பதை நிரூபியுங்கள். மற்ற மதங்களின் பண்டிகைகளுக்கு தவறாமல் வாழ்த்து கூறும் நீங்கள், நாளை மறுநாள் (11.2.2025, செவ்வாய்க்கிழமை) வரும் தைப்பூச திருநாளுக்கு வாழ்த்து கூறுங்கள். திமுக தலைவராக உங்களிடம் வாழ்த்துகளை எதிர்பார்க்கவில்லை. அது தேவையும் இல்லை. ஆனால், முதலமைச்சராக தமிழகத்தின் பெரும்பான்மை மக்கள் கொண்டாடும் பண்டிகைகளுக்கு வாழ்த்து கூறாமல் இருப்பதை ஏற்க முடியாது. அது அப்பண்டிகையை கொண்டாடும் மக்களை அவமானப்படுத்தும் செயல். எனவே இனியாவது அனைத்து மதத்தினருக்கும் பொதுவான முதலமைச்சராக ஸ்டாலின் அவர்கள் இருக்க வேண்டும் என்று வானதி சீனிவாசன் வலியுறுத்தி உள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Thaiposham DMK MK Stalin government BJP vanadi Srinivasan


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->