சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு கோரும் வைகோ!
Vaiko MP Say Community vise census
மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது, சாதிவாரி புள்ளி விபரங்களையும் எடுக்க மத்திய அரசு முன்வர வேண்டும் என்று, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ எம்.பி வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்த அவரின் அறிக்கையில், "விடுதலைபெற்ற இந்தியாவில், இதர பிற்படுத்தப்பட்டோர் பற்றிய கணக்கெடுப்பு நடத்தவில்லை. பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டு உரிமையை முழுமையாகப் பெறுவதற்கு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று இதர பிற்படுத்தப்பட்டோர் அமைப்புகளும், அரசியல் கட்சிகளும் தொடர்ச்சியாகக் கோரி வருகின்றன.
தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் பரிந்துரை அடிப்படையில் 2001-ல் ஓபிசி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசின் சமூகநீதித்துறை பரிந்துரை செய்தது. ஆனால் செயல்பாட்டுக்கு வரவில்லை.
இதனிடையே 2021 மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது இதர பிற்படுத்தப்பட்டோர் எண்ணிக்கை பற்றிய விவரங்களும் சேகரிக்கப்படும் என்று ஒன்றிய உள்துறை அமைச்சகம் சார்பில் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது, இதர பிற்படுத்தப்பட்டோர் விபரங்கள் எடுக்க வேண்டும் என்று கோரி அகில இந்திய ஓபிசி ஒருங்கிணைப்புக் குழு அளித்த மனுவை பரிசீலித்து, உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கின் விசாரணை நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜெ.சத்ய நாராயண பிரசாத் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, "மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது, ஓபிசி பிரிவு அடிப்படையில் கணக்கெடுப்பு நடத்த முடியாது என்பது அரசின் கொள்கை முடிவு" என்று பாஜக அரசின் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டு இருக்கிறது.
மாண்பமை நீதிபதிகள், "மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது, ஓபிசி பிரிவின் அடிப்படையில் கணக்கெடுப்பு நடத்த முடியாது என்று எதன் அடிப்படையில் மத்திய அரசு தெரிவிக்கிறது? 1951-ம் ஆண்டு எடுக்கப்பட்ட அரசின் கொள்கை முடிவை தற்போது மக்கள் நலனுக்காக மாற்ற பரிசீலிக்கலாமே" என்று அறிவுறுத்தி உள்ளனர்.
ஓபிசி இடஒதுக்கீட்டுப் பயனை முழுமையாக இதர பிற்படுத்தப்பட்டோர் பெறுவதற்கு மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது, சாதிவாரி புள்ளிவிபரங்களையும் எடுக்க மத்திய அரசு முன்வர வேண்டும்" என்று வைகோ வலியுறுத்தியுள்ளார்.
English Summary
Vaiko MP Say Community vise census