ஐந்து தேவியருடன்.. நின்ற கோலத்தில் பெருமாள்.. அருள்மிகு சாரநாதப்பெருமாள் திருக்கோயில்.!
Today special saranatha perumal temple
இந்த கோயில் எங்கு உள்ளது?
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருச்சேறை என்னும் ஊரில் அருள்மிகு சாரநாதப்பெருமாள் திருக்கோயில் அமைந்துள்ளது.
இந்த கோயிலுக்கு எப்படி செல்வது?
தஞ்சாவூரில் இருந்து சுமார் 46 கி.மீ தொலைவில் திருச்சேறை என்னும் ஊர் உள்ளது. திருச்சேறையில் இருந்து நடந்து செல்லும் தொலைவில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது.
![](https://img.seithipunal.com/media/IMG_20220828_184504-f72rc.jpg)
இந்த கோயிலின் சிறப்புகள் என்ன?
இத்தல பெருமாள் கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறார்.
இத்தலத்து மண் மிகவும் சத்து (சாரம்) நிறைந்தது. எனவே தான் இத்தலத்தின் நாயகர் சாரநாதப்பெருமாள் எனப்பட்டார்.
இத்தலம் திருச்சாரம் என்று வழங்கப்பட்டது. இதுவே காலப்போக்கில் மருவி திருச்சேறை என்று ஆனது.
மூலஸ்தானத்தில் பெருமாளுக்கு வலது பக்கம் மார்க்கண்டேயர் வீற்றிருக்கிறார். மார்க்கண்டேயர் இத்தலத்தில் தான் முக்தியடைந்தார்.
மூலவர் சன்னதியின் மேல் உள்ள விமானம் சார விமானம் எனப்படுகிறது. காவிரித்தாய் இத்தல இறைவனின் தரிசனம் கண்டுள்ளது சிறப்பு ஆகும்.
இத்தல பெருமாளை வழிபாடு செய்தால் 100 முறை காவிரியில் குளித்த புண்ணியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
380 அடி நீளமும், 234 அடி அகலமும் கொண்டு கிழக்கு நோக்கிய 90 அடி உயர பிரமாண்டமான ராஜ கோபுரத்துடன் இக்கோயில் காட்சியளிக்கிறது.
வேறென்ன சிறப்பு?
இத்தலத்தில் மட்டும் தான் பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி, மகாலட்சுமி, சாரநாயகி, நீலாதேவி என்ற ஐந்து தேவியருடன் அருள்பாலிக்கிறார்.
இத்தலத்தின் எதிரில் உள்ள சார புஷ்கரிணியின் மேற்கு கரையில் அகத்தியர், பிரம்மா, காவிரி ஆகியோர் தனிச்சன்னதியில் அருள்பாலிக்கின்றனர்.
கோயிலின் உள்பிரகாரத்தில் சீனிவாசப்பெருமாள், ஆழ்வார்கள், நம்மாழ்வார், உடையவர், கூரத்தாழ்வார், ராமர், அனுமன், ராஜகோபாலன், ஆண்டாள் மற்றும் சத்தியபாமா, ருக்மணி, நரசிம்ம மூர்த்தி, பால சாரநாதர் ஆகியோரின் சன்னதிகளும் அமைந்துள்ளன.
பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 15வது திவ்ய தேசம் ஆகும்.
![](https://img.seithipunal.com/media/IMG_20220828_184518-q3gfl.jpg)
என்னென்ன திருவிழாக்கள் கொண்டாடப்படுகிறது?
தைப்பூச விழா பத்து நாள் நடைபெறுகிறது. இதில் பத்தாவது நாள் தேர்விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
எதற்கெல்லாம் பிரார்த்தனைகள் செய்யப்படுகிறது?
செய்த அனைத்து பாவங்களும் விலக இங்கு பிரார்த்தனை செய்கின்றனர்.
இத்தலத்தில் என்னென்ன நேர்த்திக்கடன்கள் செலுத்தப்படுகிறது?
இக்கோயிலில் வேண்டுதல்கள் நிறைவேறியவுடன் பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்தும், வஸ்திரம் சாற்றியும் நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர்.
English Summary
Today special saranatha perumal temple