ரியல் "மாமன்னன்" முன்னாள் சபாநாயகர் தனபால்.!! எப்படி தெரியுமா..? - Seithipunal
Seithipunal


தமிழக முழுவதும் இன்று இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர் வடிவேலு, ஃபகத் பாசில், கீர்த்தி சுரேஷ், உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் மாமன்னன் திரைப்படம் இன்று வெளியாகி உள்ளது. ஒடுக்கப்பட்ட மக்கள் குறித்து பேசும் இந்த திரைப்படம் அரசியல் நிகழ்வுகளையும் மையப்படுத்தியும் பேசியுள்ளது.

மாமன்னன் என்னும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் வடிவேலு சமத்துவ சமூகநீதி மக்கள் கழகம் என்னும் கட்சியில் சேலம் மாவட்டத்தில் உள்ள காசியாபுரம் தொகுதிக்குட்பட்ட பன்றிமேடு ஊரில் நிர்வாகியாக இருந்து வருகிறார். காசியாபுரம் பொதுத் தொகுதியாக இருந்து வந்த நிலையில் தனித் தொகுதியாக மாற்றப்படுகிறது.

இந்த தொகுதியில் போட்டியிடும் மாமன்னன் வடிவேலு வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினரான பிறகும் சாதிய ரீதியாக சொந்தக் கட்சிக்குள்ளேயே ஒடுக்கப்படுகிறார். அதை எப்படி எதிர்கொண்டு மீண்டு வருகிறார் என்பதே படத்தின் மையக்கரு. எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்படும் மாமன்னன் சட்டமன்றத்தில் சபாநாயகராக அமரும் காட்சி இந்த திரைப்படத்தில் இடம் பெற்றுள்ளது. இந்த காட்சியை அதிமுகவினர் உட்பட பலர் அதிகம் பகிர்ந்து கொண்டாடி வருகின்றனர். திமுக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நடித்த படத்தை அதிமுகவினர் கொண்டாட காரணம் கடந்த 2016 ஆம் ஆண்டு மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் செய்த ஒரு சம்பவம் தான்.

எம்ஜிஆரால் அதிமுக தொடங்கப்பட்டது முதல் கட்சியில் இருந்து வருபவர் முன்னாள் சபாநாயகர் தனபால். கடந்த 1977 முதல் கடந்த 2021 வரை 7 முறை அதிமுக சார்பில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றுள்ளார். அதில் 1977, 1980, 1984, 2001 ஆகிய ஆண்டுகளில் நடந்த சட்டமன்ற தேர்தல்களில் சங்ககிரி தொகுதியிலும், 2011ம் ஆண்டு ராசிபுரம் தொகுதியிலும், 2016 மற்றும் 2021ல் அவிநாசி தொகுதியிலும் போட்டியிட்டு எம்எல்ஏவாக வெற்றி பெற்றுள்ளார்.

இவர் அதிமுகவில் மூத்த நிர்வாகி, அமைச்சர், எம்எல்ஏ என பல பொறுப்புகளை வகித்தும் தனபால் அருந்ததியர் சமுதாயம் என்பதால் இவருக்கு கட்சியில் உள்ள மற்ற நிர்வாகிகள் உரிய மரியாதையை அளிப்பதில்லை என்ற தகவல் அதிமுக வட்டாரத்தில் கசிந்தது. இது குறித்து அறிந்த மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2012ஆம் ஆண்டு சட்டமன்றத்தில் அனைவரும் வணங்கி மரியாதை செலுத்தும் சபாநாயகர் பொறுப்பை தனபாலுக்கு வழங்கினார்.

இதன் மூலம் அதிமுக அமைச்சர்கள் மட்டுமல்லாது எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்த திமுகவினரும் அருந்ததியர் சமுதாயத்தைச் சேர்ந்த சபாநாயகர் தனபாலை வணங்கிவிட்டு அமர்ந்தனர். இந்த சம்பவத்தை பிரதிபலிக்கும் விதமாக மாமன்னர் திரைப்படத்தில் வடிவேலு சபாநாயகராக அமரும் காட்சியில் சட்டப்பேரவையில் இருக்கும் அனைவரும் எழுந்து அவரை வணங்குவார்கள். இந்த இரு சம்பவங்களும் ஒத்துப் போவதால் இந்த காட்சியை சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Admk cadres said real mamannan former speaker dhanapal


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->