அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை கோரி மேலும் இருவர் வழக்கு!
AIADMK general Secretary Election OPS Side 3 case file chennai HC
அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை கோரி உயர்நீதிமன்றத்தில் ஓ பன்னீர்செல்வம் தரப்பு தொடர்ந்த வழக்கு நாளை காலை விசாரணைக்கு வர உள்ளது.
வரும் 26-ம் தேதி அதிமுக பொதுச் செயலாளர் தேர்தல் நடைபெறும் என, அக்கட்சி தலைமை நேற்று மாலை அறிவிப்பு வெளியிட்டது. அதன்படி, அ.தி.மு.க. சட்ட திட்ட விதி 20 (அ) பிரிவு 2-ல் குறிப்பிடப்பட்டுள்ளவாறு அ.தி.மு.க. பொதுச் செயலாளர் கட்சியின் அடிப்படை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுவார் என்ற விதிமுறைக்கு ஏற்ப, அ.தி.மு.க. பொதுச் செயலாளர் பொறுப்புக்கான தேர்தல் 26-3-2023 காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை நடக்க உள்ளது.
வேட்பு மனு தாக்கல் நாளை மாலை 3 மணி வரை,
20-ம் தேதி காலை 11 மணிக்கு வேட்புமனு பரிசீலனை,
21-ம் தேதி மாலை 3 மணி வரை வேட்புமனுக்களை திரும்பப் பெற அவகாசம்,
வாக்கு எண்ணிக்கை 27-ம் தேதி காலை 9 மணிக்கு நடக்கிறது.
இந்நிலையில், அ.தி.மு.க. பொதுச் செயலாளர் பொறுப்புக்கு போட்டியிட இன்று காலை எடப்பாடி பழனிச்சாமி வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
இந்த பொதுச்செயலாளர் தேர்தலை ஓபிஎஸ் தரப்பு சட்ட ரீதியாக தடுக்கும் என்று எதிர்பார்த்தவாறே, ஓபிஎஸ் ஆதரவாளர் மனோஜ் பாண்டியன் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்த வழக்குகள் நிலுவையில் உள்ள போது, அவசரமாக இந்த பொதுச்செயலாளர் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதாக அந்த அவசர மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வார இறுதி நாளில் வேட்பு மனு தாக்கல் செய்ய அறிவுறுத்தி இருப்பது, போட்டியிட விரும்புவோரை தடுத்து நிறுத்தும் வகையில் அமைந்துள்ளது. சட்டவிரோதமாக பொதுச்செயலாளர் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்றத்தில் மனு தக்கல் செய்யப்பட்டுள்ளது.
மனோஜ் பாண்டியன் தடை கோரி வழக்கு தொடர்ந்து நிலையில், இந்த வழக்கு நாளை காலை 10 மணிக்கு விசாரணைக்கு வர உள்ளது. இந்த நிலையில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் வைத்தியலிங்கம், ஜே சி டி பிரபாகர் ஆகிய இருவரும் உயர்நீதிமன்றத்தில் மேலும் வழக்குகளை தொடர்ந்து உள்ளனர். இந்த மூன்று பேரின் வழக்குகளையும் நாளை காலை நீதிமன்றம் விசாரணை செய்ய உள்ளது.
English Summary
AIADMK general Secretary Election OPS Side 3 case file chennai HC