போதைப்பொருள் பரவலில் மத்திய அரசின் மேல் பழி போடுவதை தி.மு.க. நிறுத்தி கொள்ள வேண்டும் - தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை..!
Annamalai Statement about Ganja Sell
போதைப்பொருள் பரவலுக்கு மத்திய அரசு காரணம் என அமைச்சர் தெரிவித்திருக்கும் நிலையில், அவருக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பதிலளித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
துறைமுகங்கள் தனியார் மயமாக்கப்பட்டதினால்தான் போதை பொருட்கள் இந்தியாவில் நுழைகிறது என்பன போன்ற விசித்திரமான சில குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார் அமைச்சர் பொன்முடி. 2020-ம் ஆண்டு தூத்துக்குடி துறைமுகத்தில் சுமார் 115 கிலோ ஹெராயின் மற்றும் ஏ.டி.எஸ். எனப்படும் போதை பொருள் தேசிய போதை பொருள் தடுப்பு பிரிவினால் பறிமுதல் செய்யப்பட்டது. தூத்துக்குடி துறைமுகம் தனியார் துறைமுகமா?.
2021-ம் ஆண்டு நவம்பர் மாதம் வரையில் மட்டும் தமிழகத்தில் 1,238.84 கிலோ போதை பொருட்களை போதை பொருள் தடுப்பு பிரிவு பறிமுதல் செய்தது அமைச்சருக்கு தெரியாதா? 2021-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 21 கிலோ ஹெராயின் தூத்துக்குடியில் பிடிபட்ட செய்தியை மறந்துவிட்டாரா?
தமிழகத்தில் போதை பொருள் விற்ற குற்றத்திற்காக 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 742 பேர், 2020-ம் ஆண்டு கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 771 பேர், 2021-ம் ஆண்டு கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,558 பேர். தி.மு.க. ஆட்சிக்கு வந்த பின் கைது அதிகமாகிவிட்டது என்று பெருமைபட்டுக் கொள்ளும் அமைச்சர் தி.மு.க. ஆட்சிக்கு வந்த பின்தான் தமிழகத்தில் எட்டுத்திக்கும் கஞ்சா விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது என்பதை உணர வேண்டும்.
கஞ்சா கடத்தி செல்லும் நபர்களை மட்டும் கைது செய்து வரும் முதலமைச்சரின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள போலீஸ்துறை, எங்கிருந்து இந்த கஞ்சா வருகிறது. அதை எப்படி முடக்குவது? என்பதை ஆலோசிக்காமல் தமிழகத்தை கஞ்சாவின் தலைநகரமாக மாற்றியதுதான் அரசின் சாதனை. டாஸ்மாக் மூலமாக மது விற்று ஒவ்வொரு தமிழனிடமும் சராசரியாக சென்ற ஆண்டு மட்டும் ரூ.5 ஆயிரம் வசூல் செய்த அரசு போதையை ஒழிக்கும் என்று எப்படி நம்புவது? தங்களின் திறனற்ற தன்மையை மறைக்க மத்திய அரசின் மேல் பழி போடுவதை தி.மு.க. நிறுத்தி கொள்ள வேண்டும் இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
English Summary
Annamalai Statement about Ganja Sell