மாமன்னன் படத்திற்கு ரிவ்யூ சொல்லி, தக்காளியால் பதிலடி வாங்கிய மேயர் பிரியா.!!
Chennai Mayor Priya refused to talk about tomato price hike
அமைச்சர் உதயநிதி நடித்த மாமன்னன் திரைப்படம் வெளியாகி பல்வேறு நேர்மறை விமர்சனங்களையும், எதிர் விமர்சனங்களையும் பெற்று வருகிறது. இந்த நிலையில் சென்னை மாநகராட்சியின் மேயர் பிரியா இன்று காலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது மாமன்னம் படம் பாத்துட்டீங்களா.? உதயநிதி எப்படி நடிச்சிருக்காரு.? என செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதில் அளித்த மேயர் பிரியா "மாமன்னன் நல்ல படம், நல்லா எடுத்துருக்காங்க. இப்போதைய திராவிட மாடல் அரசு சமூகநீதியை எந்த அளவிற்கு கடைப்பிடிக்கிறது என்பதை அந்தப் படத்தில் உதய அண்ணா காமிச்சி இருக்காங்க. பெண்கள் இந்த அளவிற்கு ஆளுமையில் இருக்கிறார்கள் என்றால் அதற்கு காரணம் திராவிட மாடல், சமூக நீதிதான்" என்ன பதிலளித்தார்.
அப்பொழுது மற்றொரு செய்தியாளர் சொந்தக் கட்சியிலேயே சாதிய பாகுபாடுகள், ஏற்றத்தாழ்வுகள் இருப்பதாக அந்தப் படத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதே என செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த மேயர் ப்ரியா சொந்தக் கட்சியில் அதுபோன்று எதுவும் இல்லையே. நான் இதுவரை அது போன்ற ஒரு நிலையை சந்தித்ததில்லை என பதிலளித்தார்.
அமைச்சர் உதயநிதி நடித்த மாமன்னன் படம் குறித்து ஆர்வமுடன் பதிலளித்துக் கொண்டிருந்த மேயர் பிரியாவிடம் தக்காளி விலை அதிகமாக உயர்ந்து வருகிறது. மாநகராட்சி சார்பாக நிதி ஒதுக்கி நடவடிக்கை எடுக்கலாமே என கேள்வி வந்து விழுந்ததும் "தக்காளி என்னோட டிபார்ட்மெண்ட் இல்லைங்க.. பள்ளி கேளுங்க.. ஹாஸ்பிடல் கேளுங்க.. ரோடு கேளுங்க.. பார்க் கேளுங்க.." பதில் அளித்துக் கொண்டிருந்தபோதே குறுக்கிட்ட செய்தியாளர் "மாமன்னன் பற்றி சொல்லும்போது தக்காளி விலை உயர்வு பற்றி பதில் சொல்ல உங்களுக்கு என்ன பிரச்சனை? தக்காளி கிடைக்க ஏதாவது ஏற்பாடு செய்வீர்களா?" என கேள்வி கேட்க பதில் ஏதும் கூறாமல் சிரித்தவாறு செய்தியாளர்கள் சந்திப்பில் இருந்து நழுவி சென்றார்.
சென்னை மாநகராட்சி மேயர் பிரியா பேசிய வீடியோ தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மாமன்னன் படத்திற்கு ரிவியூ சொல்வது மட்டும் உங்க டிபார்ட்மெண்டில் வருகிறதா.? என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி சென்னை மேயர் பிரியா பேசிய வீடியோவை அதிக அளவில் பகிர்ந்து வருகின்றனர்.
English Summary
Chennai Mayor Priya refused to talk about tomato price hike