குடிப்பகங்களா... கொலைக்களங்களா? யார் அனுமதி கொடுத்தது? தமிழக அரசை கேள்விகள் கிழிக்கும் அன்புமணி இராமதாஸ்! - Seithipunal
Seithipunal


குடிப்பகங்களா... கொலைக்களங்களா? அதிகாலையிலேயே மது விற்க அனுமதி அளித்தவர்கள் யார்? விசாரணை நடத்த வேண்டும் என்று, பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள அறிக்கையில், "தஞ்சாவூரில் தமிழ்நாடு அரசின் உரிமம் பெற்ற மதுக்குடிப்பகத்தில் மது குடித்த இருவர் துடிதுடித்து உயிரிழந்துள்ளனர்.  அவர்கள் குடித்த மதுவில் சயனைடு நஞ்சு கலந்திருந்தது தான் உயிரிழப்புக்குக்  காரணம் என்று உடற்கூறாய்வு அறிக்கையை மேற்கோள்காட்டி  தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் கூறியிருக்கிறார். 

அரசு உரிமம் பெற்ற மதுக்குடிப்பகத்தில் விற்பனை செய்யப்பட்ட மதுவில் சயனைடு எவ்வாறு கலக்கப்பட்டது? குடிப்பகங்களில் எவர் வேண்டுமானாலும் நுழைந்து மதுவில் நஞ்சு கலக்கும் அளவுக்கு தான் பாதுகாப்பு உள்ளதா?

 தஞ்சாவூரில் நஞ்சு கலந்த மது அருந்தி உயிரிழந்த இருவரும் காலை 11.00 மணிக்கு குடிப்பகத்துக்கு சென்று மது அருந்தியுள்ளனர்.  சர்ச்சைக்குரிய மதுக்குடிப்பகம் அதிகாலையிலேயே திறக்கப்பட்டதாக கூறப்படுகிறது. நண்பகல் 12.00 மணிக்கு தான் மதுக்கடைகள்  திறக்கப்பட வேண்டும் என விதி இருக்கும் போது அதிகாலையிலேயே குடிப்பகம் திறக்கப்பட்டது எப்படி?  

அங்கு விற்பனைக்காக பெட்டி பெட்டியாக மதுப் புட்டிகள் இருந்ததாக தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரே ஒப்புக் கொண்டிருக்கிறார். குடிப்பகங்கள் மது குடிப்பதற்கான இடங்கள் மட்டும் தான்... அங்கு மது விற்பனை செய்யக்கூடாது என்பது தான் விதியாகும். 

அவ்வாறு இருக்கும் போது  அங்கு சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்பட்டது எப்படி? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும். குடிப்பகத்திற்கு மது விற்பனை செய்த பணியாளர்கள் முதல் டாஸ்மாக் நிறுவனத்தின் மண்டல மேலாளர் வரை அனைவரும் பணிநீக்கம் செய்யப்பட வேண்டும்.

குடிப்பகங்கள் அதிகாலையிலேயே திறக்கப்படுவதும், மது விற்பனை செய்யப்படுவதும் தஞ்சாவூரில் மட்டுமே நடைபெறும் அதிசயம் அல்ல. தமிழ்நாடு முழுவதும் அப்படித்தான் நடைபெறுகிறது. பெரும்பான்மையான இடங்களில் குடிப்பகங்கள்  மூடப்படுவதே இல்லை. 

ஒவ்வொரு மதுக்கடைக்கு கீழும் ஐந்து முதல் 10  சந்துக்கடைகள் சட்டவிரோதமாக செயல்படுகின்றன. அவற்றில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்படுகிறது. புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக் கோட்டை பகுதியில் இன்று அதிகாலையில் இருந்தே  மது விற்பனை செய்யப்படுவதை ஊடகங்கள் படம் பிடித்து வெளியிட்டுள்ளன. 

இவ்வளவுக்குப் பிறகும் இதை அரசு கண்டுகொள்ளாமல் இருந்தால் அது சட்டவிரோத மது விற்பனைக்கு துணைபோவதாகவே கருதப்படும்.

தமிழ்நாட்டில் சந்துக்கடைகள்  மூலம்  24 மணி நேரமும் சட்டவிரோதமாக மது விற்பனை செய்ய அனுமதி அளித்தவர்கள் யார்? தமிழ்நாடு முழுவதும் காவல்துறையும், வருவாய்த்துறையும்  இதை வேடிக்கை பார்க்கின்றனவா? என்பன உள்ளிட்ட வினாக்களுக்கு விடை காண  இது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும். 

தவறு செய்தவர்கள் எந்த பதவியில் இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்" என்று தமிழக அரசை அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dr Anbumani Ramadoss condemn to TNGovt TASMAC BAR mkstalin


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->