முதல்ல தமிழ்நாட்டுல சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துங்க! நீட் தேர்வுக்கு காரணமான திமுக! விளாசிய அன்புமணி இராமதாஸ்!
Dr Anbumani Ramadoss Say About NEET and Community vise Census
நேற்று நடைபெற்ற சமூக நீதி மாநாட்டில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று, முதல்வர் பேசி இருந்தார். இதுகுறித்து இன்று சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாமக தலைவர் அன்புமணி இராமதாஸிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்க்கு அன்புமணி இராமதாஸ், "முதலில் அவர் தமிழகத்தில் கொண்டு வர வேண்டும். பீகார் முதல்வர் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று அறிவித்தார். அதனை இப்போது செயல்படுத்திக் கொண்டிருக்கிறார்.
ஆளக்கூடிய பாஜக, சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாது. அந்த எண்ணமே அவர்களுக்கு கிடையாது. ஆனால் சமூக நீதி பேசுகின்ற தமிழக அரசு சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தியாக வேண்டும். ஸ்டாலினிடம் ஆட்சி இருக்கிறது. அதிகாரம் இருக்கிறது. தமிழகத்தில் கொண்டு வாருங்கள். அதை தான் நாங்கள் எதிர்பார்க்கிறோம்.
அதே நேரத்தில் 10.5% உள் ஒதுக்கீட்டுக்கும் சாதிவாரி கணக்கெடுப்புக்கும் சம்பந்தமே இல்லை. சாதி வாரி கணக்கெடுப்பு எடுப்பதற்கு காரணம் 69 சதவீத இட ஒதுக்கீடு பாதுகாப்பதற்கு மட்டுமே தேவை" என்றார்.
மேலும் நீட் தேர்வும், ரத்து குறித்த கேள்விக்கு பதிலளித்த அன்புமணி இராமதாஸ், "நீட் தேர்வு நூறு விழுக்காடு தேவையில்லாதது. இது கொள்கை முடிவு. அந்தந்த மாநில அரசிடம் அதனை விட்டு விட வேண்டும். நான் அமைச்சராக இருந்த நேரத்தில், அப்போதே இதற்காக அழுத்தம் கொடுத்தார்கள். நான் பிடிவாதமாக இது தேவையே இல்லை என்று, அவர்கள் அனுப்பிய கோப்பில் எழுதி வைத்து விட்டு வந்திருக்கிறேன்.
நான் வெளியே வந்த பிறகு அடுத்து வந்த காங்கிரஸ் குலாம் நபி ஆசாத், திமுகவினுடைய சுகாதார இணை அமைச்சர் காந்தி செல்வன் இருந்தபோதுதான் இந்த நீட் தேர்வை அறிவித்தார்கள். அதன்பிறகு நீதிமன்றம் சென்று வழக்குகள் எல்லாம் போட்டு, தீர்ப்பு எல்லாம் கொடுத்தார்கள். அது நிறுத்தி வைக்கப்பட்டது.
பிறகு பாஜக 2014 -ல் ஆட்சிக்கு வந்தவுடன் அதை தீவிரமாக நிறைவேற்ற வேண்டும் என்று நின்றார்கள். ஏனென்றால் பாஜகவை பொறுத்தவரை ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே தேர்வு, ஒரே வரி, மொழி, ஒரே உணவு, ஒரே இந்தியா என்ற அடிப்படையில் அவர்கள் இந்த நீட் தேர்வை கொண்டு வந்தார்கள்.
இதில் என்ன பிரச்சனை என்றால், நீட் தேர்வில் 400, 500க்கு மேல் மதிப்பெண்கள் எடுத்தால்தான் அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்கும். இதற்காக நீங்கள் பயிற்சி மையத்திற்கு செல்ல வேண்டும். அதற்கு ஆண்டுக்கு லட்சக்கணக்கில் செலவு செய்ய வேண்டும். தமிழக அரசு தரப்பில் பயிற்சி கொடுக்கப்படுகிறது. ஆனால் அது முழுமையானதாக இல்லை, அரைகுறை தான்.
சமூக நீதி அடிப்படைகள் நீட் தேர்வு மிகப்பெரிய பின்னடைவு. பிஜேபியை தவிர தமிழகத்தில் அனைத்து அரசியல் கட்சிகளும் நீட் தேர்வு வேண்டாம் என்ற ஒரு கொள்கையை எடுத்துள்ளனர்.
திமுக தேர்தல் நேரத்தில் சொன்னது, நாங்கள் ஆட்சிக்கு வந்து ஒரு வாரத்தில் நீட் தேர்வு ரத்து செய்வோம் என்றார்கள், இன்று இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டது. இப்போது அவர்களால் நீட் தேர்வுக்கு பயிற்சி மட்டுமே கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களால் வேறு எதுவும் செய்ய முடியவில்லை.
அவர்கள் நீதிமன்றத்தை தான் நாட வேண்டும். மற்றபடி மத்திய அரசுயை வலியுறுத்தி அவர்களால் ஒன்றும் செய்ய முடியாது. மத்திய அரசை நீட்டை கொள்கை முடிவாக ஏற்று, தீவிரமாக நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கிறது. இவர்களுக்கு ஒரே வழி நீதிமன்றம். இவர்கள் நிறைவேற்றிய சட்ட மசோதாவும் மத்திய அரசிடம் தான் உள்ளது. அவர்கள் அதை அப்படியே வைத்திருக்க போகிறார்கள். அதனால் ஒன்றும் ஆகப்போவதில்லை. நீதிமன்றத்தை வேறு விதமாக அணுகி தான் இதற்கு தீர்வு காண வேண்டும்.
இப்போது இருக்கும் ஒரே ஒரு நன்மை என்னவென்றால், அரசு பள்ளி மாணவர்கள் பயன்பெறும் ஒரு வகையில் எடப்பாடி பழனிசாமி கொண்டுவந்த 7.5% இட ஒதுக்கீடு ஒன்றுதான்" என்றார்.
English Summary
Dr Anbumani Ramadoss Say About NEET and Community vise Census