டாஸ்மாக் பார் மரணம்.. கொலை பழியால் கதறும் முன்னாள் மனைவி.. காவல்துறை மீது பரபரப்பு குற்றச்சாட்டு..!!
Exwife accused police forcing to accept murder in tasmac bar death case
தஞ்சாவூர் மாவட்டம் கீழவாசல் படைவெட்டு அம்மன் கோயில் தெருவை சேர்ந்த குப்புசாமியும், அதே பகுதியை சேர்ந்த விவேக் என்பவரும் தஞ்சை மீன் மார்க்கெட்டில் மீன் வெட்டும் தொழிலை செய்து வந்துள்ள நிலையில் கடந்த மே 21 ஆம் தேதி கீழஆலங்கம் பகுதியில் இயங்கி வரும் அரசு டாஸ்மாக் கடைக்கு சொந்தமான பாரில் சட்டவிரோதமாக மதுபானம் வாங்கி குடித்தனர்.
அது குடித்த சில வினாடிகளில் குப்புசாமி உயிரிழக்க தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த விவேக் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சம்பந்தப்பட்ட பாருக்கு சீல் வைத்ததோடு அதன் உரிமையாளரை கைது செய்தனர். மருத்துவர்கள் மேற்கொண்ட இருவரின் பிரேத பரிசோதனையில் அவர்கள் குடித்த மதுவில் சயனைடு கலந்திருப்பது தெரிய வந்தது.
இந்த நிலையில் இந்த வழக்கை விசாரணை செய்யும் காவல்துறையினர் தன்னை கொலை பழி ஏற்றுக் கொள்ளுமாறு நிர்பந்திப்பதாக இறந்த விவேக்கின் முன்னாள் மனைவி குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசியதாவது "எனக்கும் விவேக் இருக்கும் திருமணமாகி 13 ஆண்டுகள் ஆகிறது. குடிப்பழக்கத்திற்கு அடிமையான விவேகை குடிக்க விடாமல் கட்டுப்படுத்தி வைத்திருந்தேன்.
இதனால் எங்கள் இருவருக்கும் இடையே சண்டை வந்ததால் அவர் என்னை விட்டு பிரிந்து சென்றார். பிறகு எப்போதாவது வீடியோ கால் செய்து குழந்தைகளை காட்ட சொல்வார். மற்றபடி எங்களுக்குள் எந்த தொடர்பும் கிடையாது. இந்த நிலையில் என்னை விசாரித்த போலீசார் புருஷன் இல்லாமல் மூன்று பிள்ளைகளை வளர்க்கிறாய்.. உனக்கு யாருடனோ தொடர்பு இருக்கிறது. அதற்கு விவேக் இடைஞ்சலாக இருந்ததால், அவரை ஆள்வைத்துக் கொலை செய்துவிட்டாய் என்று புதிதாக கதை கட்டுகிறார்கள்" என விவேக்கின் முன்னாள் மனைவி செய்தியாளர்கள் சந்திப்பில் குமுறி அழுதுள்ளார்.
அரசு அனுமதி பெற்ற டாஸ்மாக் கடை பாரில் கள்ளச் சந்தையில் விற்கப்பட்ட மதுபானத்தை வாங்கி குடித்து இருவர் உயிரிழந்த சம்பவம் குறித்தான விசாரணையில் தற்பொழுது வரை சைனைடு எப்படி வந்தது என கண்டுபிடிக்க முடியாமல் காவல்துறையினர் திணறிவரும் நிலையில் விவேக் வாழ விரும்பாமல் பிரிந்து சென்ற முன்னாள் மனைவியை கொலைப்பழி ஏற்றுக் கொள்ளுமாறு கட்டாயப்படுத்துவதாக குற்றம் சாட்டி இருப்பது காவல்துறையினரின் அராஜக போக்கை வெளிப்படுத்துவதாக சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
English Summary
Exwife accused police forcing to accept murder in tasmac bar death case