200 வார்டுகளிலும் தீவிர தூய்மைப் பணி மற்றும் விழிப்புணர்வு முகாம்கள்.! சென்னையை தூய்மைப்படுத்த அதிரடி நடவடிக்கை.! - Seithipunal
Seithipunal


நாளை 200 வர்டுகளிலும் தீவிர தூய்மைப் பணி மற்றும் விழிப்புணர்வு முகாம்கள் நடைபெற உள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

இராயபுரம் மண்டலத்திற்குட்பட்ட தங்கசாலையில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் “நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம்” – தீவிர தூய்மைப் பணி மற்றும் விழிப்புணர்வு முகாம்களை கடந்த மூன்றாம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

மேலும் முதலமைச்சரின் ஆலோசனைப்படி, சுத்தமான, பசுமையான மற்றும் நீடித்த சுற்றுச்சூழலை உறுதிசெய்யும் பொருட்டு நகரங்களில் பெருமளவிலான மக்கள் பங்கேற்புடன், ஒவ்வொரு மாதமும் இரண்டாம் மற்றும் நான்காம் சனிக்கிழமைகளில் தீவிரத் தூய்மைப் பணிகள் மற்றும் விழிப்புணர்வு முகாம்களை (Cleanliness drive) நடத்த “நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் (People’s Movement for Clean Cities)” தொடங்கப்படும் என நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் திரு.கே.என்.நேரு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் மானியக் கோரிக்கையில் அறிவித்தார்கள்.

இதன் தொடர்ச்சியாக, ஜூன் மாதத்தின் இரண்டாம் சனிக்கிழமையான நாளை “பெருமளவில் மக்கள் பங்களிப்புடன் பொது இடங்களை சுத்தம் செய்தல்” என்ற தலைப்பின் கீழ் பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 200 வார்டுகளிலும் தீவிர தூய்மைப் பணிகள் மற்றும் விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட உள்ளன.

பெருநகர சென்னை மாநகராட்சி, தேனாம்பேட்டை மண்டலம், லூப் சாலையில் நடைபெறும் தீவிர தூய்மைப் பணி மற்றும் விழிப்புணர்வு முகாம்களில் மேயர் திருமதி ஆர்.பிரியா அவர்கள் கலந்து கொள்கிறார்.

குறிப்பாக, பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பேருந்து நிலைங்கள், பூங்காக்கள், வழிபாட்டுத் தலங்களின் வெளிப்புறம், இரயில் நிலையங்களின் வெளிப்புறம், சுற்றுலாத் தளங்கள், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பு பகுதிகள், குடிசைப் பகுதிகள் மற்றும் தகனமேடையின் சுற்றுப்புறம் போன்ற பகுதிகளில் தீவிர தூய்மைப் பணிகள் நடைபெற உள்ளது.

இந்தத் தீவிர தூய்மைப் பணிகளில் மக்கள் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்களின் பங்களிப்போடு தொடங்கிடவும், பொதுமக்களுக்கு குப்பைகளை மக்கும், மக்காத குப்பைகளாக பிரித்து வழங்குவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தூய்மைக்கான உறுதிமொழியினை ஏற்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் தூய்மைப் பணிகளுக்கு தேவையான பேட்டரியால் இயங்கும் வாகனங்கள் (BOV), இலகுரக வாகனங்கள் (LCV), கனரக வாகனங்கள் (Tipper Lorry), ஜே.சி.பி. போன்ற அனைத்து இயந்திரங்கள் மற்றும் உபகரணங்களை பயன்படுத்தி தீவிர தூய்மைப் பணிகளை மேற்கொள்ளவும்,

பிளாஸ்டிக் பயன்பாட்டினை தவிர்க்கும் வகையில் குப்பைகளை சேகரிக்க துணிப்பை அல்லது மக்கும் தன்மையுள்ள சாக்குப்பை போன்றவற்றை பயன்படுத்திடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பொது இடங்களில் உள்ள சுவர்களில் உள்ள அனைத்து விளம்பரங்கள் மற்றும் சுவரொட்டிகளை அகற்றி அவற்றில் கலைநயமிக்க வண்ண ஓவியங்கள் வரைந்திடவும், அரசு அலுவலகங்களில் உள்ள சுவர்களில் அலுவலக அனுமதியுடன் தூய்மைக்கான மக்கள் இயக்கம் தொடர்பான விளக்கப்படங்களை வரையவும், “எனது குப்பை, எனது பொறுப்பு” என்ற வாசகத்தினை விழிப்புணர்வினை ஏற்படுத்தும் பொருட்டு பெரியளவில் பிரபலப்படுத்திடவும், சாலையோரங்களில் உள்ள அனைத்து கட்டிடக் கழிவுகளையும் அப்புறப்படுத்திடவும், குடியிருப்பு பகுதியில் உள்ள மழைநீர் வடிகால்களில் தேங்கியிருக்கும் குப்பைகளை அகற்றிடவும், சமுதாய கழிப்பறை மற்றும் பொதுக் கழிப்பறைகளை தூய்மைப்படுத்திடவும் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்தத் தீவிர தூய்மைப் பணி இயக்கமானது மக்கும், மக்காத குப்பையை முறையாக பிரித்து வழங்குவது பற்றிய விழிப்புணர்வு மற்றும் அதற்கான மாற்றத்தை பெருமளவில் பொதுமக்களுக்கு ஏற்படுத்துவதற்காக நடத்தப்படுவதாகவும் அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Mass cleaning awareness program in chennai


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->