திராவிட மாடல் ஆட்சியில் ஆன்மீக சொற்பொழிவு மற்றும் கலை நிகழ்ச்சிகள்!
Spiritual Discourse at Hindu Temples on the occasion of Navratri Festival
நவராத்திரி விழா முன்னிட்டு இந்து கோவில்களில் ஆன்மீக சொற்பொழிவு நிகழ்ச்சி - அமைச்சர் சேகர் பாபு அறிவிப்பு!
நவராத்திரி விழாவை முன்னிட்டு முதுநிலை கோவில்களில் கலை நிகழ்ச்சி மற்றும் ஆன்மீக சொற்பொழிவு நிகழ்ச்சிகள் இந்து சமய அறநிலைத்துறை சார்பாக நடத்தப்படும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கடந்த சட்டசபை கூட்டத்தொடரில் 2022-2023ம் ஆண்டிற்கான மானிய கோரிக்கையின் போது இந்து கோயில்களில் திருவிழா மற்றும் முக்கிய நாட்களில் ஆன்மீக சொற்பொழிவு மற்றும் கலை நிகழ்ச்சிகள் மீண்டும் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. முதற்கட்டமாக 48 பழமையான கோயில்களில் இத்திட்டத்தினை நடைமுறைப்படுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது.
முக்கிய கோவில்களில் மாவட்டம் வாரியாக கலை பண்பாட்டுத் துறையினருடன் இணைந்து ஆன்மீக சொற்பொழிவு மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
சென்னை பொருத்தவரை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் தேச மங்கையர்கரசி ஆன்மீக சொற்பொழிவு, கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் புலவர் ராஜாராமின் தலைமையில் பட்டிமன்றம், மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சுசித்ரா குழுவினரின் பக்தி பாடல்கள் நடைபெற உள்ளது.
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில், திருநெல்வேலி நெல்லையப்பர் காந்திமதி அம்மன் கோயில், திருவெற்றியூர் வடிவுடையம்மன் கோயில், மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில், சென்னை சூளைமேடு அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் உட்பட முக்கிய கோவில்களில் கலைநிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கலை நிகழ்ச்சிகளாக பரதநாட்டியம், பக்தி இசை, வில்லுப்பாட்டு, கிராமிய கலை நிகழ்ச்சிகள் போன்றவை நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. எனவே நவராத்திரி விழாவின் போது நடத்தப்படும் ஆன்மீக நிகழ்ச்சிகளில் இறையன்பர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என தனது அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளார்.
English Summary
Spiritual Discourse at Hindu Temples on the occasion of Navratri Festival