சென்னை டி எம் எஸ் வளாகம் முன்பு நாளை பெருந்திரள் முறையீடு ஆர்ப்பாட்டம் - தமிழ்நாடு ஏஐடியுசி.! - Seithipunal
Seithipunal


அமரர் ஊர்தி (15537), தாய் சேய் நல ஊர்தி(102), அவசர ஊர்தி(108), ஓட்டுனர்களை பணி நிரந்தரம் செய்து, காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும் என்று, சென்னை டி எம் எஸ் வளாகம் முன்பு நாளை (5.5.2022) காலை 10.30 மணிக்கு பெருந்திரள் முறையீடு செய்ய உள்ளதாக தமிழ்நாடு ஏஐடியுசி அறிவித்துள்ளது.

இதுகுறித்து வெளியான அறிக்கையில், "2010 வரை அமரர் ஊர்தி (15537) சேவையை அரசே அரசு ஊழியர்களை வைத்து நடத்தி வந்தது. 2010 முதல் 108 அவசர ஊர்தி நாடு முழுவதும் இலவசமாக நடைமுறைபடுத்தப்பட்டது. தொடர்ந்து 2016-ல் தாய் சேய் நல ஊர்தி திட்டத்தையும் தமிழக அரசு வழங்கியது.  

தாய்சேய் நல ஊர்தி, அமரர் ஊர்தி ஆகியவற்றை இயக்கும் ஒப்பந்ததாரராக இந்திய செஞ்சிலுவைச் சங்கம் நியமிக்கப்பட்டது. GVK-EMRI நிறுவனம் 108 ஆம்புலன்சை இயக்கியது. இந்த ஊர்திகள் மற்ற செலவுகள் உட்பட அனைத்தும் அரசால் வழங்கப்பட்டன. ஓட்டுனர்களை ஒப்பந்ததாரர்கள் நியமித்தனர்.

இந்தியச் சட்டங்களுக்கு நேர் எதிரான நடைமுறையில்   நாளொன்றுக்கு 12 மணிநேரத்துக்கும் அதிகமான வேலை நேரம். அரசு நிர்ணயித்த குறைந்தபட்ச ஊதியத்தை விடவும் குறைவான சம்பளம். வாகன பராமரிப்பையும் ஓட்டுநர்களே பார்த்துக்கொள்ள வேண்டும் என்ற உத்தரவுகள். ஏதேனும் முறையிட்டால் வேலையை விட்டு நீக்குவது என தொடர்ந்தது.   செஞ்சிலுவைச் சங்க நிர்வாகம் ஊழலில் மூழ்கியது. 

முறைகேடாக சேர்த்த ஏராளமான பணத்தை பிரித்து கொள்வதில், செஞ்சிலுவை சங்க நிர்வாகிகள் சண்டை போட்டுக் கொண்டனர். இதுகுறித்த வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. 

இந்நிலையில், ஒப்பந்தம் முடிவதற்கு முன்பே, செஞ்சிலுவைச் சங்கத்திடமிருந்து தாய் சேய் நல ஊர்தி, அமரர் ஊர்திகளை   GVK-EMRI நிறுவனத்திடம் அரசு தந்துள்ளது. ஆனால் அவற்றில் பணிபுரிந்த ஓட்டுனர்கள் அதுவரையில் செய்த பணிக்காலத்துக்கு எந்த பண நலனும் தரவில்லை. 

GVK-EMRI-யிலும் புதிய ஊழியர்களாகவே Fixed Term Employment என்ற முறையில் வேலைக்குச் சேர்த்ததாக சொல்லப்படுகிறது. ஆனால் எந்த உத்திரவும் தரவில்லை. ஏற்கனவே செஞ்சிலுவைச் சங்கம் தந்த  அடிப்படை சம்பளமும் குறைக்கப்பட்டுள்ளது. தொடர்சியாக பணி செய்யும் தொழிலாளர்களுக்கு பணி பாதுகாப்பு, ஊதிய நிர்ணயம் எதுவும் இல்லை. எனவே,

1. 480 நாட்களுக்கு மேல் தொடர்ச்சியாக பணிபுரிந்து உள்ள ஓட்டுநர்கள் அனைவரையும் பணி நிரந்தரம் செய்து அரசு நேரடியாகப் பணி வழங்கிட வேண்டும்.

2. உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி சம வேலைக்கு சம ஊதியம் என்னும் அடிப்படையில் அரசு மருத்துவமனை ஓட்டுநர் மற்றும் ஊழியர்களுக்கு இணையான காலமுறை ஊதியம் நிர்ணயம் செய்யப்பட வேண்டும்.

3. மோட்டார் போக்குவரத்து தொழிலாளர் சட்டம் மற்றும் மோட்டார் வாகன சட்டத்தின் படி வேலை நேரம் மற்றும் ஊர்தி இயங்கும் தூரத்திற்கு ஏற்றவாறு ஓட்டுநர்கள் பணி அமைத்திட வேண்டும். எட்டு மணி நேரம் வேலை நேரமாகவும், கூடுதலான நேரத்திற்கு மிகை நேரப்பணிக்கான சட்டப்படியான இரட்டை ஊதியமும் வழங்கிட வேண்டும்.

4. பொய் புகார் பழிவாங்குதல் அடிப்படையில் பணிநீக்கம் செய்யப்பட்ட நிலையில் 2 ஆண்டு காலமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள எங்கள் பொது செயலாளர் தோழர் டி.ருத்திரகோட்டீஸ்வரன் அவர்களை மீண்டும் தொடர் பணி அமர்த்த வேண்டும்.

5. 1965-ம் வருட போனஸ் சட்டப்படி அரசு மருத்துவமனை ஊர்தி ஓட்டுநர்கள் மற்றும் பணியாளர்களுக்கு இணையான போனஸ் வழங்கிட வேண்டும்.

6. அரசு மருத்துவமனைகளில் பணியாற்றி வரும் அமரர் ஊர்தி, தாய் சேய் நல ஊர்தி ஓட்டுநர்கள் மற்றும் பணியாளர்கள் 600க்கு மேற்பட்டவர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு தற்போதைய பணிவிதிகள் பொருந்தாது. மாதிரி நிலையானை சட்டத்தின்படி மனிதவள கொள்கை மற்றும் பணிவிதிகள் தனியாக சான்றளிக்கப்பட்ட நிலையானை விதிகள் உருவாக்கிட வேண்டும்.

7. ஆபத்தான நோய் தொற்றுள்ள நோயாளிகளை கையாளுவதினால் ஓட்டுநர் பணியாளர்களுக்கு 3 மாதத்திற்கு ஒருமுறை மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும்.

8. ஒரே பணியில் அமர்த்தப்பட்ட தொழிலாளர்களை தன்னிச்சையாக வேறு வேறு பணிகளில் பணியமர்த்தி, மேற்கொள்ளும் தொழிலாளர் விரோத போக்கை கைவிட வேண்டும்.  

9. பணி மூப்பு அடிப்படையில் ஓட்டுநர்கள் தங்களின் சொந்த மாவட்டங்களில் பணி அமர்த்தப்பட வேண்டும்.

10. ஏற்கனவே ஓட்டுநரோடு கிளீனர் அமர்த்தப்பட்டிருந்தனர். கடந்த சில ஆண்டுகளாக கிளீனர் செய்ய வேண்டிய வேலையையும் ஓட்டுநர் மீதே போடப்பட்டுள்ளது. பழைய முறைப்படி வாகனங்களுக்கு கிளீனர் அமர்த்தப்பட வேண்டும். ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை, தேனாம்பேட்டை, டிஎம்எஸ் அலுவலகம் முன்பு 05,05.2022 அன்று  காலை 10.30 மணிக்கு  பெருந்திரள் முறையீடு ஆர்ப்பாட்டம் நடைபெறும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TN AITUC announce protest


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->