நாட்டில் பதற்றமான சூழல் - ராகுல்காந்தி வெளியிட்ட பரபரப்பு வீடியோ!
NEET issue Rahul Gandhi LokSabha Congress vs BJP
நீட் தேர்வு முறைகேடு நாட்டில் பதற்றமான சூழலை உருவாக்கியுள்ளதாக, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி காணொளிவாயிலாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்த அவரின் அந்த காணொளியில், "நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பாக இந்திய எதிர்க்கட்சிகள் அரசுடன் ஆக்கப்பூர்வமான விவாதம் நடத்த விரும்புகிறது. இன்று பாராளுமன்றத்தில் அவ்வாறு செய்ய அனுமதிக்கப்படாதது துரதிர்ஷ்டவசமானது.
இது இந்தியா முழுவதும் உள்ள லட்சக்கணக்கான குடும்பங்களுக்கு கவலையை ஏற்படுத்தும் இந்த விவகாரத்தில், விவாதம் நடத்தி மாணவர்களுக்கு உரிய மரியாதையை வழங்க வேண்டும் என்று பிரதமரிடம் வலியுறுத்துகிறோம்.
நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் பல கோடி ரூபாய் முறைகேடுகள் நடந்துள்ளது என்பது எல்லோரும் அறிந்ததே. இதுபோன்ற முறைகேடுகளால் மாணவர்களின் பல ஆண்டுகால கனவு உடைந்து சுக்குநூறாகியுள்ளது.
மாணவர்களின் எதிர்காலம் சம்பந்தப்பட்ட விவகாரம் என்பதால் இரு அவைகளிலும் இது குறித்து விவாதிக்க வேண்டும் என முறையிட்டோம்.
பாராளுமன்றத்தில் 2 கோடி மாணவர்களின் வாழ்க்கைப் பிரச்னை குறித்த விவாதிக்க தேசிய ஜனநாயக கூட்டணி அரசு தயாராக இல்லை. தேர்வு நடத்தும் முறை உள்ளிட்ட பல்வேறு நடைமுறைகளை நாம் மாற்ற வேண்டியதன் அவசியத்தை இந்த முறைகேடுகள் தெளிவுப்படுத்தி உள்ளன;
நீட் விலக்கு தீர்மானம் கொண்டு வருவதே ஒரே வழி, ஆனால் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு இதற்கு ஒத்துழைக்கவில்லை. இந்த விவகாரத்தை பிரதமர் நரேந்திர மோடி கையில் எடுத்து எங்களை வழி நடத்தி இருக்க வேண்டும், ஆனால் அப்படிப்பட்ட சூழல் தற்போது இல்லை என்பது புரிகிறது.
இந்த விவகாரத்தில் மத்திய அரசுடன் இணைந்து விவாதித்து, நிரந்திர தீர்வு காண எதிர்க்கட்சியினர் தயாராக உள்ளோம்" என்று ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
முன்னதாக, இன்று பாராளுமன்றத்தில் நீட் முறைகேடு விவகாரத்தை பற்றி விவாதம் செய்ய வலியுறுத்தி இரு அவைகளிலும் இண்டி கூட்டணி எம்பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
English Summary
NEET issue Rahul Gandhi LokSabha Congress vs BJP