கையெழுத்து போட ஐந்தாயிரம் - கையும் களவுமாக சிக்கிய விஏஓ.!
VAO arrested for bribe in kanchipuram
கையெழுத்து போட ஐந்தாயிரம் - கையும் களவுமாக சிக்கிய விஏஓ.!
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள உத்திரமேரூர் வட்டத்தில் பினாயூர் கிராமத்தை சேர்ந்தவர் குமார். இவர் தன்னுடைய 57 சென்ட் இடத்திற்கு பட்டா மாற்றவும், உட்பிரிவு செய்யவும் கடந்த ஜூலை மாதம் விண்ணப்பித்துள்ளார்.
ஆனால், பினாயூர் கிராம நிர்வாக அலுவலர் விடுமுறையில் உள்ளதால் அரும்புலியூர் கிராம நிர்வாக அலுவலராக செயல்பட்டு வரும் பினாயூர் பொறுப்பு விஏஓ மாரியப்பன் என்பவர் பட்டா மாற்றம் செய்ய குமாரிடம் ஐந்தாயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார்.
இதனை விரும்பாத குமார், சம்பவம் குறித்து காஞ்சிபுரம் லஞ்ச ஒழிப்பு துறையினரிடம் புகார் அளித்தார். அந்தப் புகாரின் படி லஞ்ச ஒழிப்பு போலீசார், வழக்கு பதிவு செய்து குமாரிடம் ரசாயனம் தடவிய பணத்தை கொடுத்து அனுப்பினர்.
அதனை குமார் எடுத்துச் சென்று அரும்புலியூர் கிராம நிர்வாக அலுவலகத்தில் இருந்த விஏஓ மாரியப்பனிடம் கொடுத்தார். அனால், அவர் அதை வாங்காமல் அங்கிருந்த கிராம உதவியாளர் கவியரசனிடம் கொடுக்கச் சொன்னார்.
அதன்படி குமார் பணத்தை கவியரசனிடம் கொடுத்த போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை கையும் களவுமாக பிடித்தனர்.
இதையடுத்து போலீசார் சம்பவம் தொடர்பாக மாரியப்பன் மற்றும் கவியரசன் உள்ளிட்டோரிடம் விசாரணை செய்து வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதி மக்கள் மற்றும் அரசு ஊழியர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
VAO arrested for bribe in kanchipuram