மனசாட்சியின் மெல்லிய குரலை கேட்க... வியாழக்கிழமை மௌனவிரதம் இருங்கள்.!
Mouna viratham special
வியாழக்கிழமைகளில் மௌனவிரதம் இருப்பது ஏன்?
மௌனமாக இருந்து பழகினால், மனசாட்சியின் மெல்லிய குரலை நம்மால் கேட்க முடியும் என்பர். மோனம் (மௌனம்) என்பது ஞானவரம்பு என்று ஒளவையார் குறிப்பிடுகிறார்.
சிவாலயங்களில் கல்லால மரத்தின் கீழ் தட்சிணாமூர்த்தி சீடர்களுடன் தெற்கு நோக்கி வீற்றிருப்பார். இவர் பேசும் மொழி என்ன தெரியுமா?
மௌன மொழி.
இவர் பேசுவதில்லை. சைகை மூலம் உலகத்திற்கு பெரும் தத்துவத்தைச் சொல்கிறார். இதனால் தான் இவருக்கு ஊமைத்துரை, மௌனச்சாமி என்ற பெயர்கள் உண்டு.
வீரபாண்டிய கட்டபொம்மனின் தம்பிக்கு ஊமைத்துரை என்று தான் பெயர். மௌனமாக இருப்பது வழிபாட்டு வகைகளில் ஒன்றாகும்.
மௌனத்தில் மூன்று வகை உண்டு. அவை உடல் மௌனம், வாக்கு மௌனம், மன மௌனம் என்பன.
உடலைச் சிறிதும் அசைக்காமல் கட்டைபோல இருப்பது உடல் மௌனம். இவர்கள் பத்மாசனத்தில் அமர்ந்து சின்முத்திரை காட்டி தியானத்தில் ஆழ்ந்திருப்பர்.
வாக்கு மௌனம் என்பது பேசாமல் அமைதி காப்பதாகும். மனதாலும் மௌனமாக இருப்பதே மன மௌனம்.
இந்த மௌனங்களை கடைபிடிப்பவர்கள் ஞானநிலை எய்துவதுடன், கடவுளோடு பேசி உறவாடும் சக்தியையும் பெறுகிறார்கள். மேலும், தொட்டது துலங்கும்.
ஸ்ரீதட்சிணாமூர்த்திக்கு வியாழக்கிழமையில் செய்ய வேண்டிய பரிகாரங்கள் :
வியாழக்கிழமைதோறும் சிவன்கோவிலுக்கு சென்று, அங்கு பிரகாரத்தில் உள்ள ஸ்ரீதட்சிணாமூர்த்தி சுவாமிக்கு அர்ச்சனை அல்லது கற்பூர ஆரத்தி செய்து வணங்கி வருவது நல்லது.
ஆலயங்களில் நவகிரக மூர்த்திகளிடையே உள்ள குருவுக்கு வியாழனன்று கொண்டைக்கடலை மாலை சாற்றி, முல்லைப்பூ, சாமந்திப்பூ மற்றும் மஞ்சள் நிற மலர்களால் அர்ச்சித்து வழிபடுவது நன்மையை தரும்.
வேக வைத்த கொண்டைக்கடலை சிறிதளவு கலந்த சாதத்தைக் காகத்திற்கு வியாழக்கிழமைகளில் வைப்பதும் நல்லது.
வியாழக்கிழமைதோறும் கொண்டைக்கடலை சுண்டல், மஞ்சள் வாழைப்பழம், தேன், சர்க்கரை, கற்கண்டு மற்றும் இதர இனிப்புப் பொருட்கள் இவற்றில் ஏதேனும் ஒன்றை குருபகவானை நினைத்து அவருக்கு நிவேதனம் செய்ய வேண்டும்.