பேரறிவாளன் விடுதலை : முழுக்க, முழுக்க அதிமுகவிற்குக் கிடைத்த வெற்றி - ஓபிஎஸ், ஈபிஎஸ் கூட்டறிக்கை.!
admk heads say about perarivalan release
பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டிருப்பது முழுக்க, முழுக்க அதிமுகவிற்குக் கிடைத்த வெற்றி என்று, அக்கட்சியின் தலைமைகளான ஓபிஎஸ், ஈபிஎஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்த இன்று அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில், "30 ஆண்டு காலமாக சிறையில் இருந்த பேரறிவாளனை உச்ச நீதிமன்றம் இன்று விடுதலை செய்திருப்பது, அதிமுகவிற்கு மிகுந்த மகிழ்ச்சியையும், மனநிறைவையும், நிம்மதியையும் தருகிறது.
ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு கடந்த 30 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த பேரறிவாளன் விடுதலை செய்யப்பட வேண்டும். அந்த வழக்கில் சம்பந்தப்பட்ட மற்ற 6 பேருக்கும் நீதி வழங்க வேண்டும் என்பதற்காக ஜெயலலிதா மேற்கொண்ட முயற்சிகள், எடுத்து வைத்த சட்ட நுணுக்கங்கள் கொஞ்ச நஞ்சமல்ல.
"மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், மாநில அமைச்சரவையின் தீர்மானத்தின்படி பேரறிவாளனையும், அவரோடு இந்த வழக்கில் சம்பந்தப்பட்டிருக்கும் மற்ற 6 பேர்களையும் எனது தலைமையிலான அரசு விடுதலை செய்யும்" என்று 2014-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஜெயலலிதா சட்டமன்றத்தில் அறிவித்ததை நன்றியோடு நினைவு கூர்கின்றோம்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட மற்ற 6 பேர்களும் விடுதலை செய்யப்பட வேண்டும் என்பதை ஜெயலலிதாவும், அவரைத் தொடர்ந்து 2018-ல் அதிமுக அரசும் துணிச்சலாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
அதிமுக ஆட்சியில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுதான் இன்றைய உச்சநீதிமன்றத் தீர்ப்பிற்கு அடித்தளமாகும். இது முழுக்க, முழுக்க அதிமுகவிற்குக் கிடைத்த வெற்றிதான் என்பதையும் இந்தத் தருணத்தில் நாங்கள் எடுத்துக்கூற கடமைப்பட்டு இருக்கிறோம்.
பேரறிவாளன் விடுவிக்குமாறு உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ள நிலையில், அவரை உடனே விடுதலை செய்யவும், மேற்படி உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் மீதமுள்ள 6 பேர்களை உடனடியாக விடுதலை செய்யவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அதிமுக சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்"
இவ்வாறு அந்த அறிக்கையில் ஓபிஎஸ், ஈபிஎஸ் தெரிவித்துள்ளனர்.
English Summary
admk heads say about perarivalan release