பாராட்டு விழா: ஆசிரியர் மீது நடவடிக்கை - எடப்பாடி பழனிச்சாமி கடும் கண்டனம்!
AIADMK EPS condemn to DMK Govt
எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு பாராட்டு விழா எடுத்த காவிரி உபரி நீர் நடவடிக்கை குழு நிர்வாகியும் அரசு ஆசிரியருமான சீதாராமன் மீது பள்ளிக்கல்வித்துறை தரப்பில் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஆசிரியர் மீதான நடவடிக்கைக்கு எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்த அவரின் செய்திக்குறிப்பில், "சேலம் மாவட்டம், மேட்டூர் அணையில் இருந்து, வெளியேறும் காவிரி உபரி நீரை மேட்டுப்பாங்கான இடங்களில் உள்ள 100 ஏரிகளுக்கு கொண்டு செல்லும், காவிரி சரபங்கா வெள்ள உபரி நீர் திட்டத்தை நிறைவேற்றியதற்காக அப்பகுதியை சேர்ந்த, இத்திட்டத்தால் பயன்பெற்ற, அரசியல் சார்பற்ற முன்னோடி விவசாயிகள் ஒரு பாராட்டு விழாவை முன்னின்று நடத்தினார்கள்.
அந்த விழாவில் அரசுப் பள்ளி ஆசிரியர் சீத்தாராமன் அவர்கள், பயன்பெற்ற விவசாயி என்ற முறையில் கலந்து கொண்டார். அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் ஆசிரியர் சீத்தாராமன் அவர்களை இந்த விடியா திமுக அரசு தற்காலிக பணி நீக்கம் செய்துள்ளது கடும் கண்டனத்திற்குரியது.
போக்குவரத்து தொழிலாளர் யூனியன் போன்று பல்வேறு அரசு சார்பு நிறுவன பணியாளர்கள், அரசியல் சார்பற்ற நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வதும், தங்களது கோரிக்கைகளுக்காக போராடுவதும், பாராட்டு கூட்டங்களை நடத்துவதும், வாடிக்கையான ஒன்று.
இந்நிலையில் இது போன்ற தவறான நடவடிக்கையை கைவிட்டு ஆசிரியர் சீத்தாராமன் அவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையை உடனடியாக திரும்பப்பெறுமாறு முக ஸ்டாலினின் திமுக அரசை வலியுறுத்துகிறோம்" என்று எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
English Summary
AIADMK EPS condemn to DMK Govt