மக்களவை சபாநாயகர் : ரேஸில் முந்தும் ஆந்திர பெண் எம். பி. - பலிக்குமா பாஜகவின் முயற்சி?!
Andhra Women M P in LokSabha Speaker Race
நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்று மூன்றாவது முறையாக ஆட்சிப் பொறுப்பேற்றுள்ளது தேசிய ஜனநாயக கூட்டணி. கடந்த ஞாயிற்றுக் கிழமை ஜனாதிபதி மாளிகையில் பிரதமர் மோடிக்கு ஜனாதிபதி திரௌபதி முர்மு மூன்றாவது முறையாக பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
இதையடுத்து அமைச்சர்களும் பொறுப்பேற்றுக் கொண்டுள்ள நிலையில் மக்களவை சபாநாயகராக யார் தேர்ந்தெடுக்கப் படுவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஏனெனில் இந்த தேர்தலில் பாஜக தனிப் பெரும்பான்மை பெறவில்லை. கூட்டணிக் கட்சிகளின் ஆதரவில் தான் ஆட்சி அமைத்துள்ளது.
இந்நிலையில் கூட்டணியில் உள்ள கட்சிகள் மக்களவை சபாநாயகர் பதவியை குறி வைத்து பாஜகவுக்கு நெருக்கடி கொடுத்து வருகின்றன. குறிப்பாக தெலுங்கு தேசம் கட்சி இந்த பதவி தங்களுக்கு வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பதாக தெரிகிறது.
தங்கள் கட்சியை சேர்ந்த ஒருவரே சபாநாயகர் பதவியில் இருப்பது தான் தங்கள் ஆட்சிக்கு பாதுகாப்பு என்று பாஜக கருதுகிறது. இந்நிலையில் ஆந்திரா ராஜமுந்திரியைச் சேர்ந்த எம். பி. புரந்தேஸ்வரியின் பெயர் சபாநாயகர் பதவிக்கான ரேஸில் இருப்பதாக தெரிய வந்துள்ளது.
புரந்தேஸ்வரி தெலுங்கு தேசம் கட்சியின் நிறுவனரும், ஆந்திராவின் முன்னாள் முதல்வருமான என். டி. ஆரின் மகள் என்பது கவனிக்கத்தக்கது. முன்னதாக காங்கிரஸ் ஆட்சியில் மத்திய இணை அமைச்சராக இருந்த புரந்தேஸ்வரி, 2014ல் பாஜகவில் இணைந்து, தற்போது பாஜகவின்ஆந்திர மாநில தலைவராக உள்ளார்.
English Summary
Andhra Women M P in LokSabha Speaker Race