பரபரப்பு வீடியோ.. "பாஜக மாவட்ட தலைவரால் மிரட்டப்பட்டேன்".. பாஜக நிர்வாகி குற்றச்சாட்டு..!!
BJP executive accused he threatened by BJP district president
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு எதிர்ப்பு தெரிவித்து அக்கட்சியில் இருந்து பல முக்கிய நிர்வாகிகள் விலகி அதிமுகவில் இணைந்து வருகின்றனர். இதன் காரணமாக அதிமுக பாஜக இடையே கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது.
பாஜக நிர்வாகிகள் அதிமுகவில் இணைவது குறித்து நேற்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை "பாஜக நிர்வாகிகளை சேர்த்து தனது பலத்தை நிரூபிக்கும் நிலையில் திராவிட கட்சிகள் தற்போது உள்ளன. ஒவ்வொரு வினைக்கும் எதிர்வினை உண்டு என அதிமுகவுக்கு எச்சரிக்கை விடும் வகையில் பேசி இருந்தார்.
இந்த நிலையில் இன்று தமிழக பாஜக தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகப்பிரிவு சென்னை மேற்கு மாவட்ட நிர்வாகிகள் 13 பேர் கூண்டோடு ராஜினாமா செய்து தமிழக பாஜகவிற்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தனர்.
இவர்கள் அனைவரும் சமீபத்தில் அதிமுகவில் இருந்த பாஜக ஐடி விங் மாநில தலைவர் சி.டி.ஆர் நிர்மல்குமார் தலைமையில் பயணிக்க விரும்புவதாகவும் அதில் குறிப்பிட்டு இருந்தனர்.
இந்த நிலையில் இன்று காலை பாஜகவில் இருந்து விலகியதாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் பாஜக மாவட்ட துணை தலைவர் ஆர்.கே சரவணன் என்பவரும் கையெழுத்திட்டு இருந்தார். ஆனால் தன்னை பாஜக மாவட்ட தலைவர் ஒரத்தி அன்பரசு மிரட்டி கையெழுத்து வாங்கியதாக குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் "இன்று காலை சென்னை மேற்கு மாவட்ட பாஜக ஐடி விங் தலைவர் ஒரத்தி அன்பரசு 5 நிமிடங்கள் வந்து செல்லுமாறு என்னை அழைத்தார். அது பேரில் நான் சென்ற பொழுது என்னை கட்டாயப்படுத்தி ராஜினாமா கடிதத்தில் கையெழுத்து வாங்கினார்.
ஆனால் தற்பொழுது சமூக ஊடகங்களில் நான் பாஜகவில் இருந்து வெளியேறியதாக பொய்யான செய்தியை பரப்பி வருகிறார். நான் இன்று வரை பாஜகவில் தான் பயணித்துக் கொண்டிருக்கிறேன். கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் நான் பாஜகவில் பயணிக்கிறேன். நான் என்றும் அண்ணாமலை அவர்களின் பின்னால் பயணிக்க தான் விரும்புகிறேன். தமிழ்நாடு மாநில பாஜக ஐடி விங் தலைவர் நிர்மல்குமார் கட்சியை விட்டுச் சென்றதால் இதுபோன்று செய்கிறார்கள். நான் இப்பொழுதும் பாஜகவில் தான் இருக்கிறேன் பாஜகவில் தான் பயணிப்பேன்" என காணொளி மூலம் விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
English Summary
BJP executive accused he threatened by BJP district president