ஏப்ரல் 06-ஆம் தேதி மதுரையில் பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து கறுப்பு கொடி போராட்டம்: மே 17 இயக்கம் அழைப்பு..! - Seithipunal
Seithipunal


தமிழகம் வருகை தரவுள்ள பிரதமர் மோடிக்கு எதிராக ஏப்ரல் 06-ந் தேதி மதுரையில் மே 17 இயக்கம் சார்பில் கறுப்பு கொடி காட்டும் போராட்டம் நடைபெறும் என அதன் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது;

மூன்று முக்கிய நிகழ்வுகள் நடந்தேறியுள்ளது. வக்பு திருத்த மசோதா, குடியேற்ற மசோதா, கச்சத்தீவு மீட்பு தீர்மானம். முதலிரண்டும் பாஜக அரசு எதேச்சதிகார போக்குடன் கொண்டுவந்த சட்ட மசோதாக்கள். இசுலாமியரை அழித்தொழிக்க வேண்டுமென்பதை கொள்கையாக வைத்திருக்கும் பாஜக் இசுலாமியர் வழிபாட்டு தளங்களின் சொத்துகளை முடக்குவதற்கும், ஆக்கிரமித்துக் கொள்வதற்கும் கொண்டுவரப்பட்ட அராஜக சட்டமே வக்பு மசோதா. 

இசுலாமிய மத நிறுவனங்களின் சொத்துகள் மீதான உரிமையை தம் விருப்பப்படி எடுத்துக்கொள்ளும் வகையில் அதிகார வர்க்கத்திற்கு அதிகாரம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதுபோன்ற சட்டநெருக்கடிகள் ஈ.ஷா போன்ற போலி சாமியார் மீதெல்லாம் கொண்டு வரப்படுவதில்லை.  இசுலாமியர்கள் மீதான தாக்குதலை  மேலும் தீவிரப்படுத்தும் போக்கு இது.

 அடுத்ததாக குடியேற்ற மசோதா, அடிப்படையில் ஏதலிகளாக-அகதிகளாக இந்தியாவிற்குள் வருகிறவர்களை நிரந்தர குற்றவாளி பட்டியலில் வைப்பதற்காக கொண்டுவரப்படும் சட்ட மசோதா. இவ்வாறாக வர வெளிநாட்டவர் மீது எவ்வித வரையறையும் இன்றி வழக்கு பதிவு செய்யவும், குற்றவாளிகளாக்கவும் செய்யும் வகையில் மசோதா தயாரிக்கப்படுள்ளது. 

இதனடிப்படையில் ஈ.ழ அகதிகளாக வருபவர்கள் குற்றவாளிகளாக பல ஆண்டு சிறையில் வாடும் வகையில் சட்டமியற்றப்பட்டுள்ளது. தம் மீதான குற்றச்சாட்டு பொய்யென நிரூபித்து வழக்கிலிருந்து விடுதலை பெறவேண்டுமெனும் வகையில் இச்சட்டம் சொல்வது மிக மோசமான சட்டநடைமுறை. இது ஒரு வகையில் 'உபா' வழக்கிற்கு நிகரானது.

தமிழ்நாடு சட்டசபை ஏகமனதாக 'கச்சத்தீவு' மீட்புத் தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது. இராமேஸ்வரத்திற்கு மோடி வருகின்ற காலத்தில் இந்தத் தீர்மானம் அரசியல் முக்கியத்துவமானது. எனினும் தமிழ்நாட்டின் சட்டசபை தீர்மானங்கள் கருத்துருவாக்கத் தீர்மானங்களே. 

இவற்றை கழிவறை காகிதமாகக்கூட இந்திய ஏகாதிபத்தியம் மதித்ததில்லை. கச்சத்தீவை மீட்க நமக்கு வரலாற்று ரீதியான உரிமை உண்டு. மேலும் ஈழ மற்றும் தமிழக மீனவர்களுக்கு பொதுவான கடலே நமது மன்னார் கடல். கச்சத்தீவும் தமிழர்களுக்கான நிலப்பரப்பு. ஈழ தமிழர்கள் இதை சொந்தம் கொண்டாட இயலாமல், கச்சத்தீவிற்கு அன்னியமான சிங்களம் இத்தீவை தனது ஆதிக்கத்தில் வைத்துள்ளது. 

அதேபோல ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக ஆண்டு அனுபவித்த தமிழ்நாட்டு மீனவருக்கு சொந்தமான கச்சத்தீவை தமிழரிடம் ஒப்புதல் பெறாமல் தமிழர் எதிரிகளிடத்தில் ஒப்படைத்தது இந்திய ஏகாதிபத்தியம். தமிழின எதிர்ப்பில் கட்சி பாகுபாடற்று இந்திய தேசிய கட்சிகள் செயல்படுபவை. தமிழர்களுக்கு சொந்தமான நிலத்தின் மீதான உரிமையை  தமிழரல்லாத இரு அரசுகள் முடிவு செய்கின்றன. 

ஈழ தமிழர்களால் உரிமை கோர முடியாத அரசியல் அதிகாரமற்ற நிலை. தமிழ்நாட்டிலோ வெற்றுக்காகித தீர்மானத்தை மட்டுமே நிறைவேற்றிக்கொள்ளும் அடையாள அதிகார உரிமை. தமிழர்கள் கட்சி அரசியலை தூக்கியெறிந்துவிட்டு இனமாக ஒன்றுபட்டு எழுந்து நிற்கும் போது மட்டுமே நம் உரிமைகள் மீட்கப்படும்.

இவையனத்திலும் தமிழரின் எதிரியாக நிற்பது மோடி அரசே. ஆகவே இதை எதிர்த்து மே17 இயக்கம் கருப்புக்கொடி போராட்டத்தை அறிவித்திருக்கிறது. கட்சி கடந்து நாம் கைகோர்க்காமல் உரிமை வெல்ல இயலாது. சட்டசபை தீர்மானங்கள் வெல்லவேண்டுமெனில், தமிழர்கள் வீதியில் களமிறங்க வேண்டும். 

ஏப்ரல் 6ம் தேதி காலையில் மோடியின் வருகைக்கு எதிராக மதுரையில் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்துகிறோம். சுயமரியாதை உணர்வுகொண்ட அனைவரும் பங்கேற்க வாருங்கள்;; என்று அவர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Black flag protest against Prime Minister Modi in Madurai on April 6th May 17 Movement Thirumurugan Gandhi


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->