திருக்குவளை சமஸ்தான கொத்தடிமை R.S.பாரதிக்கு நாவடக்கம் தேவை - டிஜெ! - Seithipunal
Seithipunal


அதிமுக முன்னாள் அமைச்சர் D ஜெயக்குமார் இன்று விடுத்துள்ள அறிக்கையில், "சேற்றிலே விழுந்து புரளும் பிராணிகள். அங்கும் இங்கும் ஓடி அனைவர் மீதும் தன் உடம்பில் ஒட்டியுள்ள சகதிகளை பூசுவதுபோல், திருக்குவளை சமஸ்தானத்தின், கோபாலபுரம் குடும்பத்தின் கொத்தடிமை ஆர்.எஸ். பாரதி என்ற நாலாந்தரப் பேர்வழி, பேட்டி என்ற பெயரில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக இடைக்காலப் பொதுச்செயலாளரும், தமிழகத்தின் பிரதான எதிர்கட்சித் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான அண்ணன் திரு. எடப்பாடியார் அவர்கள் மீது விஷத்தைக் கக்கி இருக்கிறார்.

தன்னை ஒரு வழக்கறிஞர் என்று கூறிக்கொள்ளும் அவர், மாண்புமிகு நீதியரசர்களைப் பற்றியும், அவர்கள் அப்பதவிகளுக்கு வந்ததே தாங்கள் போட்ட பிச்சை என்றும், ஊடகங்களை 'வேசி ஊடகங்கள்' என்றும் வாய்க் கொழுப்பேறி உளரியவர் தான் இந்த மேதாவி. பாதிக்கப்பட்ட மக்கள் சார்பில் எத்தனை வழக்குகளை நடத்தினார் ? அதன்மூலம் எத்தனை கோடிகளை சம்பாதித்தார் ? இதைப்பற்றி பொதுவெளியில் விவாதம் நடத்த இந்த நாலாந்தரப் பேர்வழி தயாரா? திரு. கருணாநிதியிடம் எடுபிடி வேலை செய்து, ஒருசில பதவிகளைப் பெற்று எப்படி கோடீஸ்வரர் ஆனார் என்பதை அசல் தி.மு.க-வினரை கேட்டாலே தெரியும்.

இந்த விடியா அரசின் 16 மாத கால அவலங்களை தோலுரித்துக் காட்டும் வகையில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக இடைக்காலப் பொதுச்செயலாளர் அண்ணன் திரு. எடப்பாடியார் அவர்களின் அறிவிப்பிற்கிணங்க, கழகத்தின் சார்பில் தமிழகமெங்கும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் எழுச்சியுடன் நடைபெற்றன. இதில், கழக நிர்வாகிகளும், கழகத் தொண்டர்களும், பொதுமக்களும் பெருந்திரளான அளவில் கலந்துகொண்டு, இந்த விடியா திமுக அரசிற்கு தங்களது கடும் கண்டனத்தைத் தெரிவித்தனர்.

தமிழக மக்கள் தன்னெழுச்சியாக அண்ணன் திரு. எடப்பாடியார் அவர்களின் பின்னால் அணி திரண்டதைக் கண்டு மிரண்டுபோன பொம்மை முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள், ஆலந்தூர் அறிவிலியை விட்டு குக்கல் குரல் எழுப்ப வைத்திருக்கிறார்.

எங்கள் தலைவர் திரு. எடப்பாடியார் அவர்கள், தன் உழைப்பால் கிளைக் கழகச் செயலாளர் முதல் படிப்படியாக உயர்ந்து தலைமைப் பொறுப்பிற்கு வந்தவர் என்பதை அனைவரும் நன்கு அறிவர். திருக்குவளை முன்னேற்றக் கழகத் தலைவர் வீட்டில் கொத்தடிமையாய் இருந்து அரசியலில் முன்னுக்கு வரவில்லை. 1996 முதல் 2001 வரை திமுக ஆட்சியில் இவர், நங்கநல்லூர் கூட்டுறவு கட்டிட சங்கத் தலைவராக இருந்த காலகட்டத்தில் நடந்த முறைகேடு வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது என்பதை அவர் மறக்க வேண்டாம்.

"முன்னாள் அண்ணா தி.மு.க அமைச்சர்களின் வீடுகளைப் பார், அரண்மனை போல் உள்ளது" என்றெல்லாம் பிதற்றியுள்ளார். இவரும், இவருடைய தலைவரும், அவர்களது குடும்பத்தினரும், திமுக முன்னாள், இந்நாள் அமைச்சர் பெருமக்களும் குடிசையிலா வாழ்கிறார்கள்? திமுக-வைச் சேர்ந்த முன்னாள் மற்றும் இந்நாள் அமைச்சர்கள் வசிக்கும் வீடுகளையும், கிலோ மீட்டர் கணக்காக நீண்ட காம்பவுண்ட் சுவர்களைக் கொண்ட, அவர்கள் நடத்தும் கல்லூரிகளையும் தமிழக மக்கள் நன்கறிவார்கள்.

எங்கள் கழக நிர்வாகிகள் எல்லாம் அரசியலில் பதவிக்கு வருவதற்கு முன்பே, முறையாக விவசாயம் செய்தும், தொழில் நடத்தியும், வரி செலுத்தும் வசதி பெற்றவர்கள் என்று மார்தட்டிச் சொல்ல முடியும். பல்லாயிரம் கோடி ரூபாய்களை சேர்த்து வைத்துள்ள இவரது தலைவர் திரு. மு.க. ஸ்டாலினும், அவரது குடும்பத்தாரும் பதவிகளில் இல்லாதபோது, என்ன தொழில் செய்து சம்பாதித்தார்கள் ? பதவிக்கு வந்த பின் செய்யும் தொழில் என்ன என்பதை வெளிப்படையாக சொல்லத் தயாரா?

மக்களை வாட்டி வதைக்கும் வீட்டு வரி உயர்வு, மின் கட்டண உயர்வு போன்றவை மத்திய அரசு உத்தரவிட்டதால் தான் செய்தோம் என்று பூசி மழுப்புகிறார்கள். “நீதான் வீராதி வீரன், சூராதி சூரன், சூரபத்மன் பேரன் என்று மார்தட்டும் நபரை தலைவராக பெற்றிருக்கிறேன் என்கிறாயே!" மக்கள் நலனுக்காக வரிகளையும், கட்டணங்களையும் உயர்த்தாமல், மக்கள் சுமையைக் குறைக்கச் சொல்ல வேண்டியது தானே? 

எங்கள் தலைவர் அண்ணன் எடப்பாடியார் அவர்கள், கண்டன ஆர்பாட்டத்தில் எடுத்து வைத்த ஒவ்வொரு குற்றச்சாட்டும் ஆதாரபூர்வமானவை. இந்த 16 மாதங்களில் நடந்துள்ள கொலை, கொள்ளை, கற்பழிப்பு, போதை பொருள் புழக்கம், ஊழல் உட்பட பல்வேறு சமூக விரோதச் செயல்களை பட்டியலிட்டார்.

அதற்கு முறையாக பதில் சொல்ல வக்கற்ற, வகையற்ற, சின்ன புத்தி சின்னசாமியாக வலம் வரும் பாரதி, பொத்தாம் பொதுவாக சொல்கிறார் என்று மழுப்புகிறார். பத்தாண்டு கழக ஆட்சியில் நடந்த கொலை, கொள்ளை பற்றி கணக்கெடுக்கலாமா? என்று இரவு மயக்கம் தெரியாமல் உளறுகிறார்.

விடியா திமுக அரசு பொறுப்பேற்ற 16 மாதங்களில் குற்றங்கள் பெருகியுள்ளது என்பதே உண்மை. கழக ஆட்சியில் நாங்கள், குற்றங்கள் நிகழாமல் இருப்பதற்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டதன் விளைவாக, தமிழகம் அமைதிப் பூங்காவாய் திகழ்ந்தது.

ஆனால், இந்த விடியா அரசின் ஆட்சியாளர்கள் குற்றவாளிகளோடு கைகோர்த்து செயல்படுவது உள்ளம் கை நெல்லிக்கனி. ஆளுங்கட்சியினரே கஞ்சா கடத்துவதும், கஞ்சா விற்பதும், மணல் கடத்துவதும், சட்டம்-ஒழுங்கு சீர்கேட்டில் ஈடுபடுவதும் என்ற நிலை ஏற்பட்டுள்ளதால் காவல் துறையினர் செய்வதறியாது கை பிசைந்து நிற்கின்றனர்.

இந்த ஆட்சியின் அவலங்களை நாங்கள் சொல்லும் அதே நேரம், பல மாவட்டங்களில் மனசாட்சியுள்ள தி.மு.க. தொண்டர்களே வெளிச்சம் போட்டுக் காட்டி வருகிறார்கள். "உயர உயரப் பறந்தாலும், ஊர்க் குருவி பருந்தாகாது!".

விதிவசத்தால் அரசியல் வெளிச்சம் பெற்ற இந்த நாலாந்தரப் பேர்வழி, கோடநாடு கொலை, கொள்ளை, வழக்கு என்றெல்லாம் பூச்சாண்டி காட்டுகிறார். இந்த சலசலப்புக்கெல்லாம் மிரள்பவர்கள் நாங்கள் அல்ல. குற்றவாளிகளைக் கைது செய்து சிறையில் அடைத்தது அம்மாவின் அரசு. குற்றவாளிகளுக்கு ஜாமின் எடுத்தது திமுக வழக்கறிஞர்கள்; ஜாமின்தாரர்களாக இருந்தது திமுக நிர்வாகிகள்.

அண்ணாநகர் ரமேஷ், 2G வழக்கு சாதிக்பாட்சா போன்றவர்களின் முடிவைப் பார்த்த மக்களுக்குத் தெரியும், யார் கொலைகாரப் பாவிகள் என்று? இந்த கொலைகாரர்கள் சட்டத்தின் பிடியில் இருந்து தற்காலிகமாக தப்பி இருக்கலாம். காலம் தரும் தண்டனையில் இருந்து தப்பிக்க முடியாது.

தங்கள் மீதுள்ள வழக்குகளை சந்திக்க திராணி இல்லாமல் சட்டத்தின் சந்து பொந்துகளில் பதுங்கும் தி.மு.க மந்திரிகளைப் போல் நாங்கள் அல்ல. எங்கள் மடியில் கனமில்லை; வழியில் பயமில்லை. எந்த வழக்கையும் சந்தித்து வெற்றி பெறும் நேர்மைத் திறன் எங்களிடம் உண்டு.

எங்கள் தலைவர் அண்ணன் திரு. எடப்பாடியாரின் ஆதாரப்பூர்வமான குற்றச்சாட்டுகளுக்கு முறையாக பதில் சொல்ல வக்கில்லாத, வகையில்லாத, துண்டுச் சீட்டு மாமுனி தலைவன், ஒரு கூலிக்கு மாரடைப்பவரை ஏவி விட்டிருக்கிறார். அந்த வாயை எப்படி அடைப்பது என்று எங்களுக்குத் தெரியும்.

இந்த விடியா அரசுக்கு எதிராத உண்மைகளை எடுத்து வைப்பவர்களை புழுதி வாரித் தூற்றி களங்கப்படுத்தி, மிரட்டி, வாயடைக்க வைக்கலாம் என்று நினைத்தால் அது பகல் கனவாகவே முடியும்.

“யாகாவா ராயினும் நாகாக்கா காவாக்கால் சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு"
- என்ற குறளை ஆர். எஸ். பாரதிக்கு ஞாபகபடுத்துகிறேன்' - கருத்து மோதலைத் தவிர்த்து, தனிமனித தாக்குதலை பாரதி போன்றவர்கள் தொடர்ந்தால், "குட்டி குரைத்து, தாய் தலையில் விடிந்த கதையாகிவிடும். 

ஆகவே நீங்கள், ஆக்கப்பூர்வமான பணிகளில் ஈடுபடுவதை விட்டுவிட்டு, மக்கள் பிரச்சினைக்காகப் போராடும் எங்களை அடக்க நினைக்க வேண்டாம். நாங்களும் தரம் தாழ்ந்தால், திருக்குவளை குடும்பத்தில் ஒருவர்கூட மிஞ்சமாட்டார்கள் என்று எச்சரிக்கிறேன். மக்கள் பிரச்சினைக்காக போராடும் எங்களை அடக்க நினைப்பதை விட்டுவிட்டு, ஆக்கபூர்வமான பணிகளில் ஈடுபட வேண்டும்" என்று, ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

D Jayakumar say about RS Bharathi Speech


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->