தொடரும் அத்துமீறல்., இதற்கு மத்திய அரசு முடிவு கட்டவேண்டும் - மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தல்.!
Dr Anbumani Ramadoss Request to Central Govt For Fisherman Issue
தமிழக மீனவர்கள் மேலும் 22 பேர் கைது: சிங்களப் படையினரின் அத்துமீறலை தடுத்து நிறுத்த வேண்டும் என்று, பாமக இளைஞரணி தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள கண்டன செய்தியில், "வங்கக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த நாகை, மயிலாடுதுறை, காரைக்கால் மாவட்டங்களைச் சேர்ந்த 22 மீனவர்களை சிங்களக் கடற்படையினர் நேற்றிரவு கைது செய்துள்ளனர். அவர்களின் படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றன. சிங்களப் படையினரின் இந்த தொடர் அத்துமீறல் கடுமையாக கண்டிக்கத்தக்கது!
இலங்கை கடற்படையினர் கடந்த 3 வாரங்களில் மட்டும் 72 தமிழக மீனவர்களை கைது செய்துள்ளனர். பத்துக்கும் மேற்பட்ட படகுகளை பறிமுதல் செய்திருக்கின்றனர். பெரும்பாலான கைது நடவடிக்கைகள் இந்திய கடல் எல்லையில் நடந்துள்ளன. தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் நோக்குடன் தான் கைது, படகு பறிமுதல் நடக்கிறது!
கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை இலங்கை அரசுடன் பேசி இந்திய வெளியுறவு அமைச்சகம் மீட்கிறது. ஆனால், படகுகளை மீட்க முடியவில்லை. அதனால் நூற்றுக்கணக்கான மீனவர்கள் அவர்களின் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனர். இந்த நிலைக்கு முடிவு கட்ட மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்!
கைது செய்யப்பட்ட 22 மீனவர்கள் உட்பட இலங்கை சிறைகளில் வாடும் 51 தமிழக மீனவர்களும், அவர்களின் படகுகளும் உடனடியாக மீட்கப்பட வேண்டும். இரு நாட்டு வெளியுறவு அமைச்சர்கள் பேச்சில் எடுக்கப்பட்ட முடிவின்படி, இரு தரப்பு மீனவர்கள் இடையே பேச்சுகளை தொடங்கவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
English Summary
Dr Anbumani Ramadoss Request to Central Govt For Fisherman Issue