தமிழக அரசு கொண்டுவந்த சட்டத்திருத்தம்., முதல் ஆளாக வரவேற்ற மருத்துவர் இராமதாஸ்.! - Seithipunal
Seithipunal


தமிழக அரசின் அனைத்து பொதுத்துறை நிறுவனங்களுக்குமான ஆள்தேர்வு பணிகளை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமே இனி மேற்கொள்ளும் என்று தமிழக அரசு அறிவித்திருக்கிறது. அதற்கான சட்டத்திருத்தம் தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதனை வரவேற்றுள்ள பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் அவர்கள், தமிழக அரசின் அனைத்து பணிகளுக்கும் நேர்முகத்தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையையும் தமிழக அரசுக்கு முன்வைத்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டில் அரசு போக்குவரத்துக் கழகங்கள், மின்வாரியம் ஆகியவற்றில் தான் அதிக எண்ணிக்கையில்  தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர். ஆவின், குடிநீர் வடிகால் வாரியம் போன்ற பொதுத்துறை நிறுவனங்களிலும்  அதிக பணியிடங்கள் உள்ளன. 

தமிழ்நாட்டில் அனைத்து பொதுத்துறை நிறுவனங்களுக்கும் வேலைவாய்ப்பக பதிவு மூப்பின் அடிப்படையில் தான் நியமனங்கள் செய்யப்பட வேண்டும் என்பது தான் பாட்டாளி மக்கள் கட்சியின் நிலைப்பாடு ஆகும். அது தான் ஊழல் இல்லாத, வெளிப்படையான ஆள்தேர்வுக்கு வழிவகுக்கும்.

ஆனால், கடந்த 2000 -ஆவது ஆண்டுக்குப் பிறகு அனைத்து பொதுத்துறை நிறுவன நியமனங்களுக்கும் எழுத்துத் தேர்வு, நேர்காணல் ஆகியவை திட்டமிட்டு திணிக்கப்பட்டன. அவை பணியாளர் நியமனங்களில் தகுதி, திறமைக்கு முன்னுரிமை அளித்து, வெளிப்படைத் தன்மையை ஏற்படுத்துவதற்கு பதிலாக முறைகேடுகளும், ஊழலும் பெருகுவதற்குத் தான் வழிவகுத்தன. 

பொதுத்துறை நிறுவனங்களில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி கோடிக்கணக்கில் மோசடி செய்ததாக முன்னாள், இந்நாள் அமைச்சர்கள் மீது மோசடி வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. பொதுத்துறை நிறுவனங்களின் ஆள் தேர்வு முறையில் ஓட்டைகள் இருப்பது  தான் முறைகேடுகள் நடப்பதற்கும், மோசடிகள் செய்யப்படுவதற்கும் காரணம் ஆகும். 

அனைத்து பொதுத்துறை  நிறுவனங்களுக்கும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் போட்டித் தேர்வுகளை நடத்தி பணியாளர்களை தேர்வு செய்வது நியமனங்களில் ஊழலைத் தடுக்க உதவும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.

அதேநேரத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் செயல்பாடுகளில் சீர்திருத்தங்களையும், மாற்றங்களையும் மேற்கொள்ளாமல் பணியாளர் நியமனங்களில் ஊழலை ஒழிக்க முடியாது. மின்சார வாரியமாக இருந்தாலும், அரசு போக்குவரத்துக் கழகங்களாக இருந்தாலும் ஓட்டுனர், நடத்துவர், வயர் மேன் உள்ளிட்ட அடிப்படை பணிகளில் தொடங்கி பொறியாளர் பணி வரை அனைத்து பணிகளுக்கும் நடத்தப்படும் நேர்காணல்கள் தான் ஊழலின் ஊற்றுக்கண்ணாக திகழ்கின்றன. 

பொதுத்துறை நிறுவன பணியாளர்களை அரசுப் பணியாளர் தேர்வாணையமே தேர்ந்தெடுத்தாலும் கூட, அங்கும் நேர்காணல்கள் நடத்தப்பட்டால் முறைகேடுகளையும் ஊழலையும் தடுக்க முடியாது என்பது பா.ம.க.வின் திடமான கருத்து.

பொதுத்துறை நிறுவனப் பணிகள் மட்டுமின்றி, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நடத்தப்படும் முதல் தொகுதி மற்றும் இரண்டாம் தொகுதி பணிகள் உள்ளிட்ட மற்ற பணிகளுக்கான ஆள்தேர்விலும் நேர்காணல்கள் ரத்து செய்யப்பட்டால் மட்டுமே, பணி நியமனங்களில் ஊழலையும், முறைகேட்டையும் ஒழிக்க முடியும். 

மத்திய அரசுப் பணிகளை பொறுத்தவரை குரூப் ஏ, குரூப் பி அரசிதழ் பதிவு பணிகள் தவிர மற்ற அனைத்து பணிகளுக்கும் நேர்காணல் முறை ரத்து செய்யப்பட்டு விட்டது. 

ஆந்திர மாநிலம் அதை விட அடுத்தக்கட்டத்திற்கு சென்று மாவட்ட துணை ஆட்சியர், காவல்துறை துணை கண்காணிப்பாளர் உள்ளிட்ட முதல் தொகுதி பணிகளுக்குக் கூட நேர்காணலை ரத்து செய்து விட்டது. ஆந்திராவைப் பொறுத்தவரை அரசு பணிகளுக்கு நேர்காணல் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டு விட்டது.

தமிழ்நாட்டிலும் அதே நிலையை ஏற்படுத்தினால் மட்டும் தான் அரசு பணி நியமனங்களில் ஊழலையும், முறைகேட்டையும் ஒழிக்க முடியும். அப்போது தான் தமிழகத்தின் கிராமப்புற, ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கும் முதல் தொகுதி பணிகளுக்கு செல்ல முடியும். இதைக் கருத்தில் கொண்டு தமிழ்நாட்டில் அனைத்து அரசு பணிகளுக்கும் நேர்காணலை ரத்து செய்ய முதல்வர் ஆணையிட வேண்டும்.

பொதுத்துறை நிறுவனங்களுக்கான ஆள்தேர்வுகளையும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமே  மேற்கொள்ளும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கேற்ற வகையில் தேர்வாணையம் வலுப்படுத்தப் பட வேண்டும். 

ஆனால், ஆணையத்திற்கு தலைவர், 14 உறுப்பினர்கள் என மொத்தம் 15 பேர் இருக்க வேண்டும். ஆனால், இப்போது தலைவருடன் 6 உறுப்பினர்கள் மட்டுமே உள்ளனர். 8 உறுப்பினர் பணிகள் காலியாக உள்ளன. அவற்றை உடனடியாக நிரப்பி ஆணையத்தை வலுப்படுத்த வேண்டும். அதேபோல் ஆணையத்தின் பணியாளர்கள் எண்ணிக்கையையும் தமிழக அரசு கணிசமாக அதிகரிக்க  வேண்டும்.

தமிழ்நாட்டில் அனைத்து பணிகளுக்கும் நேர்காணல்கள் ரத்து, அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் உறுப்பினர் பதவிகளை நிரப்புதல், மனிதவளத்தை அதிகரித்தல், அனைத்து நிலைகளிலும் வெளிப்படைத் தன்மையை உறுதி செய்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேற்கொண்டால்  அவர் பாராட்டுக்குரியவராக இருப்பார்; ஊழல் இல்லாத அரசு பணி நியமனங்கள் என்ற கனவும் நனவாகும்." என்று மருத்துவர் இராமதாஸ் தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DrRamadoss Say About TNGovt Job Interview Issue


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->