#BREAKING:: திமுகவுக்கு புதிய சிக்கல்.. "உடன்பிறப்புகளாய் இணைவோம்" திட்டத்திற்கு ஆப்பு.. களத்தில் இறங்கும் தேர்தல் ஆணையம்..!!
Election Commission recommended inquiry on DMK collecting voter details
திமுக சார்பில் "உடன்பிறப்பாய் இணைவோம்" என்ற திட்டத்தின் மூலம் தமிழக முழுவதும் புதிதாக ஒரு கோடி உறுப்பினர்கள் சேர்க்கை நடத்த திட்டமிட்டு அதற்கான பிரத்தியேக இணையதளமும் துவங்கப்பட்டது. இந்த இணையதளம் வாயிலாக எவ்வாறு திமுக உறுப்பினராக இணைவது குறித்தான வீடியோவை திமுகவின் அதிகாரப்பூர்வ ஐடி விங் ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டது. இந்த பதிவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.
அந்த வீடியோவில் "உடன்பிறப்பாய் இணைவோம் என்ற இணையதளத்தில் உள்ளே நுழைந்தவுடன் உறுப்பினராக இணைய விரும்புவோர் தங்களின் வாக்காளர் அடையாள அட்டை எண்ணை பதிவிட்ட உடன் வாக்காளரின் பெயர் கொடுக்கப்பட்டுள்ள படிவத்தில் தானாக நிரம்பிவிடும்" என குறிப்பிடப்பட்டிருந்தது.
தமிழகத்தில் உள்ள அனைத்து வாக்காளர் விவரங்களும் மாவட்டத் தேர்தல் அதிகாரிகளாக செயல்படும் மாவட்ட ஆட்சியரின் கட்டுப்பாட்டில் இருந்து வரும் நிலையில் திமுக இணையதளத்தில் வாக்காளரின் பெயர் தானாக பதிவாகுவது அதிர்வலையை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் கடந்த ஏப்ரல் 10ம் தேதி அதிமுகவைச் சேர்ந்த சி.டி.ஆர் நிர்மல் குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் பல்வேறு சந்தேகங்களையும் கேள்விகளையும் எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் தனது பதிவில் "மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மட்டும் பாதுகாக்கப்படும் வாக்காளர்களின் விவரம் திமுக உறுப்பினர் சேர்க்க இணையதளத்தில் எப்படி இணைக்கப்பட்டுள்ளது" என தேர்தல் ஆணையத்தை குறிப்பிட்டு கேள்வி எழுப்பி இருந்தார்.
மேலும் "கடந்த வருடம் கர்நாடகாவில் வாக்காளர் தகவல்கள் திருடப்பட்டதாக அந்த தகவல் மூலம் பெரிய அளவில் வாக்காளர்கள் நீக்கப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டது. திமுக உறுப்பினர் சேர்க்கை என்ற பெயரில் வாக்காளர் அடையாள விவரங்களை சேகரிப்பது எதற்கு..? என கேள்வி எழுப்பியுள்ளார். இந்த விவகாரம் தமிழக அரசியலில் பெரும் புயலை கிளப்பியது.
இந்த விவகாரம் தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் தற்பொழுது திமுக மீது நடவடிக்கை எடுக்கும்படி பரிந்துரை வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து அதிமுக நிர்வாகி சி.டி.ஆர் நிர்மல் குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் "திமுக உறுப்பினர் சேர்க்கை இணையதளத்தில் வாக்காளர் அட்டை விவரங்கள் சேகரிப்பது குறித்தும் இத்தகவல் மூலம் வாக்காளர் பட்டியல் திருத்தத்தின் பொழுது முறைகேடு நடக்க வாய்ப்பு உள்ளது என நான் இந்திய தேர்தல் ஆணையரிடம் அளித்த புகாரை கருத்தில் கொண்டு மேல் நடவடிக்கை பரிந்துரைத்துள்ளது தேர்தல் ஆணையம்" என பதிவிட்டுள்ளார். இதன் மூலம் திமுக மீது இந்திய தேர்தல் ஆணையம் பரிந்துரையின் படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
Election Commission recommended inquiry on DMK collecting voter details