சூடுபிடித்த மகாராஷ்டிரா சட்டசபை தேர்தல்!...கடைசி நாளில் 7,995 பேர் வேட்பு மனு தாக்கல்!
Heated maharashtra assembly elections 7995 candidates filed on the last day
மகாராஷ்டிரா மாநிலத்தில் மொத்தம் உள்ள 288 சட்டமன்ற தொகுதிகளுக்கு அடுத்த மாதம் 20-ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என்று, தேர்தல் ஆணையம் அறிவித்ததை தொடர்ந்து, அங்கு அரசியல் கட்சியினரிடையே தேர்தல் களம் அனல் பறந்து வருகிறது.
மேலும், பல்வேறு அரசியல் கட்சியினர் தாங்கள் போட்டியிடும் தொகுதிகளை அறிவிப்பதிலும், தொகுதி பங்கீட்டினை முடிவு செய்யும் பணிகளிலும் தீவிரமாக களம் இறங்கினர்.
இதற்கிடையே, ஆளும் பாஜக, சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் (அஜித் பவார்) ஆகிய கட்சிகளின் மகாயுதி கூட்டணிக்கும், காங்கிரஸ், சிவ சேனா (உத்தவ் தாக்கரே), தேசிய வாத காங்கிரஸ் (சரத் பவார்) கட்சிகளின் மகா விகாஸ் அகாடி கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது.
இதில், தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தையில் கடும் இழுபறி நிலவியது. வேட்பு மனு தாக்கல் நேற்றுடன் முடிவடைந்தது. முன்னதாக இரு கூட்டணியிலும் தொகுதி பங்கீட்டை இறுதி செய்ய விடிய, விடிய கட்சி தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல் வெளியானது.
இந்த நிலையில் கடைசி நாளான நேற்று வேட்பாளர்கள் போட்டி போட்டு கொண்டு வேட்பு மனு தாக்கல் செய்தனர். நேற்று இரவு வரை மாநிலம் முழுவதும் மொத்தம் 7 ஆயிரத்து 995 பேர் வேட்பு மனு தாக்கல் செய்ததாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ள நிலையில், வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை இன்று நடைபெறுகிறது.
English Summary
Heated maharashtra assembly elections 7995 candidates filed on the last day