செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைக்குமா? சென்னை உயர்நீதிமன்றத்தில் நாளை தீர்ப்பு!!
MadrasHC pronounce verdict on Senthil Balaji bail tomorrow
சட்டவிரோத பண பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ் ஜூன் மாதம் 14ஆம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி தற்போது நீதிமன்ற காவலில் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரணை நடத்திய நிலையில் அவர் மீதான குற்றச்சாட்டு குறித்து 3000 பக்கங்கள் கொண்ட சாட்சியங்கள் மற்றும் ஆவணங்கள் விசாரணை நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது.
இதற்கிடையே அமைச்சர் செந்தில் பாலாஜி சார்பில் சென்னை முதன்மை நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில் அதனை நீதிபதி அல்லி தள்ளுபடி செய்தார். இதனைத் தொடர்ந்து சென்னை உயர் நீதிமன்றத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி சார்பில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனு மீதான விசாரணை நடைபெற்று முடிந்த நிலையில் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் செந்தில் பாலாஜியின் ஜாமீன் வழக்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் செந்தில் பாலாஜியின் ஜாமீன் வழக்கு மீது நாளை சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது.
செந்தில் பாலாஜியின் தரப்பு மற்றும் அமலாக்கத்துறையின் தரப்பு வாதங்கள் நிறைவடைந்த நிலையில் நாளை காலை 10:30 மணிக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் தீர்ப்பு அளிக்கிறார். செந்தில் பாலாஜி தரப்பில் மருத்துவ உதவிகள் தேவைப்படுவதால் அவருக்கு ஜாமின் வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.
ஆனால் செந்தில் பாலாஜியை ஜாமீனில் விடுவித்தால் அவர் சாட்சியங்களை கலைத்து விடுவார் என அமலாக்கத்துறை தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் தான் நாளை அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் வழக்கு மீது சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைக்குமா? கிடைக்காதா? என திமுக உடன் பிறப்புகள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
English Summary
MadrasHC pronounce verdict on Senthil Balaji bail tomorrow