ஆளும் கட்சியோடு சேர்ந்து கூட்டணி கட்சிகள் வைத்த ஆப்பு - விவரிக்கும் மக்கள் நீதி மய்யம்.! - Seithipunal
Seithipunal


மக்கள் நீதி மய்யம் தொழிலாளர் நல அணி மாநில செயலாளர் சு.ஆ.பொன்னுசாமி விடுத்துள்ள அறிக்கையில், "2001-2006 அதிமுக ஆட்சிக்காலத்தில் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அவர்கள் 3 ஆண்டுகளாக இருந்த பழைய ஊதிய ஒப்பந்த காலத்தை 5 ஆண்டு களாக மாற்றியமைத்து தொழிலாளர்கள் விரோத போக்கினை கடைபிடித்தார். 

2006-ல் ஆட்சிக்கு வந்த திராவிட முன்னேற்ற கழகம் பல்வேறு தொழிற் சங்கங்களின் கோரிக்கையை ஏற்று அப்போது முதல்வராக இருந்த கலைஞர் அவர்கள் ஊதிய ஒப்பந்த காலத்தை மீண்டும் 3 ஆண்டுகளாக மாற்றி போக்குவரத்து கழக தொழிலாளர்கள் வயிற்றில் பால் வார்த்தார். 

அதனடிப்படையில் நடைமுறையில் இருந்து வந்த 3ஆண்டுகால 14-வது ஊதியக்குழு ஒப்பந்தம் 01.09.2019-ல் காலாவதியாகப் போன நிலையில் கொரோனா கால ஊரடங்கை காரணமாக வைத்து அதிமுக அரசு பேச்சுவார்த்தையை தள்ளிப் போட்டு போக்குவரத்துக் கழக தொழிலாளர்களுக்கு மாதம் 1000-ம் ரூபாய் இடைக்கால நிவாரணமாக வழங்கியது. 

மீண்டும் ஆட்சிக்கு வந்த திமுக அரசு அதிமுக கடைபிடித்து வந்த நடைமுறைகளை பின்பற்றி வந்த நிலையில் போக்குவரத்து கழக தொழிற் சங்கங்களின் போராட்டங்களுக்குப் பிறகு போக்குவரத்து துறை அமைச்சர் தலைமையில் கடந்த சில தினங்களுக்கு முன் நடைபெற்ற 14-வது ஊதிய குழு ஒப்பந்தத்தின் 7-ம் கட்ட பேச்சுவார்த்தையின் போது 3 ஆண்டுகள் என்றிருந்த ஊதியக்குழு ஒப்பந்த காலத்தை அரசின் நிதிச்சுமையை காரணம் காட்டி 4 ஆண்டுகளாக மாற்றியிருப்பதும், தொழிலாளர்கள் 25% ஊதிய உயர்வு கேட்ட நிலையில் வெறும் 5% ஊதிய உயர்வு மட்டுமே வழங்க முடிவு செய்திருப்பதும் நியாயமற்றது மட்டுமின்றி போக்குவரத்து கழக தொழிலாளர்களை வஞ்சிக்கும் செயலாகும். 

போக்குவரத்து கழக தொழிலாளர்களின் வயிற்றில் தந்தை பால் வார்த்திருந்த நிலையில் அதற்கு எதிர்மாறாக தமையன் நெருப்பு வார்த்திருப்பதையும், அதற்கு ஆளுங்கட்சியோடு கூட்டணி வைத்துள்ள ஆதரவு கட்சிகளின் தொழிற்சங்கங்கள் துணை போயிருப்பதையும் மக்கள் நீதி மய்யம் நம்மவர் தொழிற்சங்க பேரவை வன்மையாகக் கண்டிக்கிறது.

அதுமட்டுமின்றி அரசின் அனைத்துத் துறை ஊழியர்களுக்கும் ஓய்வுபெற்ற அன்றே ஓய்வுகால பலன்கள் அனைத்தும் வழங்கப்பட்டு வரும் போது கடந்த 2020 மே மாதத்திற்குப்பின் மரணமடைந்த, விருப்ப ஓய்வில் சென்ற, ஓய்வுபெற்ற போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு இதுவரை ஓய்வுகால பலன்கள் எதுவும் வழங்கப்படவில்லை இவை குறித்து 14-வது ஊதியகுழு ஒப்பந்த பேச்சுவார்த்தையில் போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதிச்சுமையை காரணம் காட்டி பேச மறுத்திருப்பது தொழிலாளர்களின் உரிமைகளை பறிக்கும் செயலாகும். 

எனவே போக்குவரத்து கழக தொழிலாளர்களுக்கு 3ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதிய ஒப்பந்தம் என்கிற உரிமையை தந்தை கொடுத்தார், தனயன் அதை கெடுத்தார் என்கிற பழிச்சொல்லுக்கு இன்றைய முதல்வர் அவர்கள் ஆளாகிடாமல் ஊதிய ஒப்பந்த காலத்தை மீண்டும் 3ஆண்டுகளாக குறைக்க வேண்டும். 

சுமார் 85ஆயிரம் தொழிலாளர்களுக்கு கடந்த 2015ம் ஆண்டுக்கு பிறகு உயர்த்தி வழங்கப்படாமல் இருக்கும் அகவிலைப்படியை உயர்த்தியும், போக்குவரத்து கழக தொழிலாளர்களுக்கு அரசு ஊழியர்களுக்கு வழங்குவது போன்று ஓய்வூதியகால பலன்களை வழங்கிடவும்  உத்தரவிட வேண்டும் என மக்கள் நீதி மய்யம் நம்மவர் தொழிற்சங்க பேரவை சார்பாக தமிழக அரசை வலியுறுத்துகிறோம்." 

இவ்வாறு அந்த அறிக்கையில் சு.ஆ.பொன்னுசாமி தெரிவித்துள்ளார். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

MNM Say About Govt bus Staff Salary Issue DMK And Alliance Party


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->