#நீட் || வரும் 8 ஆம் தேதி சிறப்பு சட்டப்பேரவை கூட்டம் - சபாநாயகர் அப்பாவு.!
NEET TN ASSEMBLY FEB
நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியதை அடுத்து, வருகிற 8ம் தேதி சட்டமன்ற சிறப்புக் கூட்டம் நடைபெறும் என பேரவைத் தலைவர் அப்பாவு அறிவிப்பு.
தமிழகத்தில் 2017-ம் ஆண்டு முதல் மருத்துவ படிப்புக்கு நீட் தேர்வுகள் மூலம் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகிறார்கள். இந்த நீட் தேர்வால் கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படுவதாக கூறி, தமிழகத்தில் மட்டும் நீட் தேர்வு முறைக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று கடந்த அதிமுக ஆட்சியின்போது சட்ட மசோதா ஏற்றப்பட்டு, ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. ஆனால் அவர் ஒப்புதல் வழங்கவில்லை.
இதனிடையே, அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5 சதவீத இட ஒதுக்கீடு முறையை அப்போதைய முதலமைச்சர் எடபடிக் பழனிச்சாமி கொண்டு வந்தார்.
இந்த நிலையில், கடந்த வருடம் நடைபெற்ற சட்டமன்ற பொது தேர்தலில் திமுக ஆட்சிக்கு வந்தால் 'முதல் கையெழுத்து நீட் தேர்வு ரத்து', ரத்து செய்வதற்கான ரகசியங்கள் தெரியும் என்று, திமுக தலைவர் மு க ஸ்டாலின் அவரின் மகன் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டனர்.
பின்னர் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றிய திமுக அரசு கடந்த 9 மாதங்கள் ஆகிய நிலையில் நீட் தேர்வை ரத்து செய்வதற்கான சட்டப் போராட்டத்தை கையில் எடுத்துள்ளது.
அதன்படி, கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு தமிழக சட்டப்பேரவையில் தமிழகத்தில் நீட் தேர்வுக்கான விலக்கை பெறுவதற்கான சட்ட மசோதா ஒன்றை ஒருமனதாக நிறைவேற்றியது. இந்த மசோதா ஆளுநரின் ஒப்புதல் அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், அந்த மசோதாவை தமிழக அரசுக்கே ஆளுநர் திருப்பி அனுப்பினார்.
இதனையடுத்து இன்று நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில், சட்டப்பேரவையை கூட்டி மீண்டும் நீட் விலக்கு மசோதாவை நிறைவேற்ற முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நீட் விலக்கு மசோதாவை மீண்டும் நிறைவேற்றும் வகையில், வரும் 8ஆம் தேதி சிறப்பு சட்டமன்றக் கூட்டம் நடைபெறும் என்று சபாநாயகர் அப்பாவு சற்றுமுன் அறிவித்துள்ளார்.
சட்டமன்ற சிறப்புக் கூட்டத்தில் நீட் விலக்கு குறித்து தீர்மானம் நிறைவேற்றி, குடியரசுத் தலைவருக்கு அனுப்ப முடிவு எடுக்கப்படும் என்றும் அப்பாவு தெரிவித்துள்ளார்.