சென்னை அண்ணா சாலை 15 ஏக்கர் பரப்பளவு நிலம், ஆயிரம் கோடி! அபகரிக்க முயற்சியா? சீமான் பரபரப்பு அறிக்கை!
NTK Seeman Condemn to DMK Govt MK Stalin Anna salai
சென்னை அண்ணா சாலையில் உள்ள ‘மதரஸா ஏ ஆஸம்’ பள்ளிக்கூட நிலத்தைக் கல்வி நிறுவனங்கள் நடத்த மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாலே சீமான் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்த அவரின் அறிக்கையில், "300 ஆண்டுகளுக்கு முன் ஆற்காடு நவாப் அவர்களால் இசுலாமியப் பெருமக்களின் கல்வி மேம்பாட்டிற்காக சென்னை அண்ணா சாலை அருகில் 15 ஏக்கர் பரப்பளவு நிலம் தானமாக வழங்கப்பட்டது. 1761 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட 250 ஆண்டுகள் பழமையான மதரஸா ஏ ஆஸம் பள்ளிக்கூடம், ஆற்காடு நவாப் வழங்கிய இடத்தில் 1849 ஆம் ஆண்டு முதல் கடந்த 175 ஆண்டுகளாகச் செயல்பட்டு வருகிறது.
பாரசீக - ஐரோப்பியக் கட்டிடக் கலைகளைத் தழுவி உருவாக்கப்பட்ட இப்பள்ளி சென்னை மாநகரின் அடையாளங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. 1919 ஆம் ஆண்டு இவ்விடத்தில் 5 ஏக்கர் பரப்பளவில் தொடங்கப்பட்ட முஹம்மதன் கலைக்கல்லூரி, விடுதலைக்குப் பிறகு அரசு காயிதே மில்லத் பெண்கள் கல்லூரியாக தமிழ்நாடு அரசால் மாற்றம் செய்யப்பட்டது. அதன் காரணமாக அக்கல்லூரியில் இசுலாமிய சமூக மாணவிகளுக்கு சிறப்பு இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று அன்றைய தமிழ்நாடு முதல்வர் ஐயா கருணாநிதி அவர்கள் அளித்த உறுதிமொழியும் பின்னர் காற்றில் பறக்கவிடப்பட்டது.
அத்தகைய புகழ்வாய்ந்த மதரஸா ஏ ஆஸம் பள்ளிக்கூடம் இசுலாமிய மாணவர்கள் மட்டுமின்றி அனைத்து சமூக மாணவர்களும் பயிலும் கல்விக்கூடமாக திகழ்ந்தது. ஏறத்தாழ 4000 மாணவர்கள் கல்வி பயின்ற நிலையில், தற்போது வெறும் 300 மாணவர்கள் மட்டுமே பயின்று பயிலும் அளவுக்கு பள்ளி பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது திட்டமிட்ட சதியோ என்ற சந்தேகம் எழுகிறது. சென்னையின் அதிமுக்கிய பகுதியில் 15 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ள பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள இப்பள்ளிக்கூட இடம் நெடுங்காலமாக ஆட்சியாளர்கள் கண்களை உறுத்திவருவதே பள்ளி பராமாரிப்பின்றி சீர்கெட காரணமாகும்.
கடந்த 08.12.17 அன்று அதிமுக ஆட்சியில் சிதிலமடைந்த இப்பள்ளிக் கட்டிடங்களை இடித்து அகற்றிவிட்டு, அங்கே வேறு பயன்பாட்டிற்கான கட்டிடங்கள் கட்ட நடந்த முயற்சியை அனைத்து இசுலாமியப் பெருமக்களும், அமைப்புகளும் ஒன்றுகூடி நள்ளிரவில் போராட்டம் நடத்தித் தடுத்து நிறுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், தற்போது மீண்டும் திமுக ஆட்சியில் இப்பள்ளியில் மாணவர் சேர்க்கை குறைவாக உள்ளது என்று காரணம் கூறி இவ்விடத்தை வேறு திட்டங்களுக்கு பயன்படுத்துவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அதன்படி, தமிழ்நாடு அரசின் விளையாட்டுத்துறை இப்பள்ளி வளாகத்தை ஆக்கிரமித்துப் புதிதாக விளையாட்டு அரங்கம் மற்றும் உடற்பயிற்சி கூடம் கட்டியுள்ள நிலையில், அப்பள்ளி மாணவர்கள் அவற்றைப் பயன்படுத்த கட்டணம் செலுத்த வேண்டும் என்பது மாதிரியான சமூக நீதி? விளையாட்டு அரங்கு கட்ட வேறு எங்கும் இடம் இல்லையா?
தமிழகத்தில் மற்ற பள்ளிகளுக்குக் கட்டிடம் கட்ட தேவையான நிதி ஒதுக்கும்போது, விடுதலைக்கு முன்பிருந்தே செயல்படும் 250 ஆண்டுகாலப் பழமையான இப்பள்ளிக்கு மட்டும் நிதி ஒதுக்காதது ஏன்? பள்ளிக்கட்டிடம் கட்ட நிதி இல்லை என்றால் பள்ளி இடத்தில் வேறு கட்டிடம் கட்ட மட்டும் நிதி எங்கிருந்து வருகிறது? இசுலாமியப் பெருமக்களின் கல்வி மேம்பாட்டிற்காக உருவாக்கப்பட்ட ஒரு பழம்பெரும் பள்ளியைத் திட்டமிட்டு பாழ்படச் செய்வது எவ்வகையில் நியாயமாகும்?
இதிலிருந்தே அரசின் நோக்கம், இந்தப் பள்ளியை மேம்படுத்துவது இல்லை. மாறாக ஆட்சியாளர்களின் கண்களை உறுத்திக் கொண்டே இருக்கும் பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள இடத்தை எப்படியாவது அபகரித்துவிட முயல்வது இசுலாமிய மக்களுக்குச் செய்கின்ற பச்சைத்துரோகமாகும்.
தமிழ்நாடு அரசு மற்ற கல்வி நிறுவனங்கள் மீது காட்டும் அக்கறையில் சிறிதளவாவது, இசுலாமியப் பெருமக்கள் அடர்த்தியாக வாழும் பகுதியில் அமைந்துள்ள மதரஸா ஏ ஆஸம் பள்ளிக்கூடத்தின் மீது காட்டி இருந்தால் கூட இப்பள்ளிக்கூடத்தை மேலும் சிறப்பாக வளர்த்தெடுத்திருக்க முடியும்.
ஆகவே, சென்னை அண்ணா சாலை அருகே அமைந்துள்ள மதரஸா ஏ ஆஸம் பள்ளிக்கூட நிலத்தில் கல்வி நிலையங்கள் மட்டுமே அமைத்திட வேண்டுமெனவும், ஏற்கனவே உள்ள பள்ளிக்கூடத்தை சீரமைத்து, தேவையான உட்கட்டமைப்பு வசதிகள் செய்து இசுலாமியப் பெருமக்களின் கல்வி மேம்பாட்டிற்கு பயன்படுத்த வேண்டும்" என சீமான் வலியுறுத்தியுள்ளார்.
English Summary
NTK Seeman Condemn to DMK Govt MK Stalin Anna salai