ஓபிஎஸ் வெளியிட்ட பரபரப்பு அறிக்கை... அதிர்ச்சியில் இபிஎஸ் ஆதரவாளர்கள்.!!
ops statement for admk members meeting
அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் பூதாகரமாக வெடித்து வரும் நிலையில், எடப்பாடி பழனிசாமி அணியினர் அதிமுகவிலிருந்து பன்னீர்செல்வத்தை புறக்கணிக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே அதிமுக தலைமை கழகம் என்ற பெயரில் அதிமுக தலைமை நிலைய செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிமுக தலைமை கழக நிர்வாகிகள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க 27ஆம் தேதி திங்கள்கிழமை (இன்று) காலை 10 மணிக்கு தலைமை அலுவலகத்தில் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் மாளிகையில் கூட்ட அரங்கில், தலைமை கழக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் தலைமை கழக நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இது அறிக்கை வெளியிட்டுள்ள ஓ பன்னீர்செல்வம், ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் ஒப்புதலின்றி 27-06-2022 அன்று நடைபெறவுள்ள தலைமைக் கழக நிர்வாகிகள் கூட்டம் சட்டப்படி செல்லத்தக்கதல்ல.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சட்ட, திட்ட விதி 20A(v)-ன்கீழ் கழகத்தின் ஒட்டுமொத்த நிர்வாக பொறுப்புகள் கழக ஒருங்கிணைப்பாளர் மற்றும் கழக இணை ஒருங்கிணைப்பாளருக்கே உள்ளது. அதன்படி, இருவரின் ஒப்புதலைப் பெற்றுத்தான் எந்தவிதமான கூட்டமும் கூட்டப்பட வேண்டும். ஆனால், இருவருடைய ஒப்புதலுமின்றி, கையொப்பம் இல்லாமல், 'கழக தலைமை நிலையச் செயலாளர், தலைமைக் கழகம்' என்ற பெயரில் கழக சட்ட, திட்ட விதிக்கு எதிராக ஓர் அறிவிப்பு வெளியிடப்பட்டு இருக்கிறது.
அந்த அறிவிப்பில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமைக் கழக நிர்வாகிகள் கேட்டுக் கொண்டதற்கிணங்க 27-6-2022 - திங்கட்கிழமை காலை 10 மணிக்கு, தலைமைக் கழகமான புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகை கூட்ட அரங்கில் தலைமைக் கழக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற உள்ளதாகவும், அந்தக் கூட்டத்தில் தலைமைக் கழக நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் நான் எந்தவிதமான ஒப்புதலையும் மேற்படி கூட்டத்திற்கு அளிக்கவில்லை. இப்படிப்பட்ட நிலையில், விதியை மீறி கூட்டப்பட்டுள்ள மேற்படி கூட்டம், கழக சட்டம் மற்றும் விதிகளுக்கு புறம்பானதாகும். கழக சட்டத் திட்டத்திற்கு புறம்பாக கூட்டப்பட்டுள்ள மேற்படி கூட்டத்தில் ஏதேனும் முடிவுகள் எடுக்கப்பட்டால் அது கழக ஒருங்கிணைப்பாளர் மற்றும் கழக இணை ஒருங்கிணைப்பாளர் நிர்வாகத்தில் இருக்கும் கழகத்தையும், கழகத் தொண்டர்களையும் எவ்விதத்திலும் கட்டுப்படுத்தாது என்பதை கழகத் தொண்டர்கள் அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.
English Summary
ops statement for admk members meeting