ஒரு வாரத்தில் 40 பேர், ஓராண்டில் 569 பேர் சிறைபிடிப்பு - நிரந்தரத் தீர்வு எப்போது? - அன்புமணி இராமதாஸ்!
PMK Anbumani Ramadoss Condemn to TN an Central govt
வங்கக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த இராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் 8 பேரை அவர்களின் விசைப்படகுகளுடன் இலங்கைக் கடற்படை கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறது.
தமிழக மீனவர்கள் பாரம்பரியமாக மீன்பிடித்து வரும் பகுதிகளில் மீன் பிடிக்கும் போது அவர்களை சிங்களக் கடற்படை அத்துமீறி கைது செய்வது கண்டிக்கத்தக்கது; அதை எந்த வகையிலும் மத்திய அரசு அனுமதிக்கக் கூடாது என்று பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்த அவரின் அறிக்கையில், "கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 40 தமிழக மீனவர்களை சிங்களக் கடற்படை கைது செய்திருக்கிறது. கடந்த 2-ஆம் தேதி 18 மீனவர்களும், 4-ஆம் தேதி 14 மீனவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்கள் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து இராமேஸ்வரத்தில் மீனவர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் நேற்று கூட கடுமையான போராட்டம் நடத்தியிருக்கும் நிலையில், மேலும் 8 மீனவர்களை சிங்களக் கடற்படை கைது செய்திருக்கிறது என்றால், அது இந்தியாவின் இறையாண்மைக்கு விடப்பட்ட சவால் ஆகும்.
2024-ஆம் ஆண்டில் மட்டும் தமிழக மீனவர்கள் 569 பேரை சிங்களக் கடற்படை கைது செய்துள்ளது. தமிழக மீனவர்களுக்கு சொந்தமான 73 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை திருப்பி வழங்க வேண்டும் என்ற இந்தியாவின் கோரிக்கையை நிறைவேற்ற இலங்கை அரசு மறுத்து வருகிறது.
அதுமட்டுமின்றி, கடந்த சில ஆண்டுகளில் இல்லாத வகையில் 96 மீனவர்களுக்கு 6 மாதங்கள் முதல் இரு ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்பட்டும், அபராதம் விதிக்கப்பட்டும் சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கின்றனர். இதை நாடாளுமன்ற மாநிலங்களவையில் நான் எழுப்பிய வினாவுக்கு அளித்த பதிலிலும் மத்திய அரசு உறுதி செய்திருக்கிறது. ஆனாலும், அவர்களை மீட்டெடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இலங்கைக் கடற்படையால் நேற்று கைது செய்யப்பட்ட 8 மீனவர்கள் உள்ளிட்ட அங்குள்ள சிறைகளில் வாடும் அனைத்து மீனவர்களையும் உடனடியாக மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கும் மேலாக மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண மத்திய, மாநில அரசுகள் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்" என்று அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
English Summary
PMK Anbumani Ramadoss Condemn to TN an Central govt