பகுதி நேர சிறப்பாசிரியர்களின் கோரிக்கையை ஏற்க மறுப்பது அநீதி - தமிழக அரசுக்கு டாக்டர் இராமதாஸ் கண்டனம்!
PMK Ramadoss Condemn to DMK Govt MK Stalin Teachers issue
பாமக நிறுவனர் மருத்துவரே இராமதாஸ் விடுத்துள்ள அறிக்கையில், "தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித் துறையில் 13 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வரும் பகுதிநேர ஆசிரியர்கள், தங்களுக்கு பணி நிலைப்பு வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு தனித்தனியாக கோரிக்கை மனுக்களை அனுப்பியிருந்த நிலையில், அவை அனைத்தும் தள்ளுபடி செய்யப்படுவதாகவும், அவர்களுக்கு பணி நிலைப்பு வழங்க முடியாது என்றும் தமிழக அரசு அறிவித்திருக்கிறது. பகுதிநேர ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கையைக் கூட ஏற்க தமிழக அரசு மறுப்பது நியாயமற்றதாகும்.
பகுதி நேர ஆசிரியர்களின் முதன்மைக் கோரிக்கை அவர்களுக்கு பணி நிலைப்பு வழங்கப்பட வேண்டும் என்பது தான்.அரசுப் பள்ளிகளில் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஓவியம், கணினி, தையல், உடற்கல்வி உள்ளிட்ட பாடங்களை கற்றுத் தருவதற்காக 2012-ம் ஆண்டில் ரூ.5 ஆயிரம் ஊதியத்தில் அமர்த்தப்பட்ட அவர்களுக்கு, இன்று வரை பணிநிலைப்பு வழங்கப்படவில்லை. கடந்த 13 ஆண்டுகளில் அவர்களுக்கு ரூ.7,500 மட்டுமே ஊதிய உயர்வு வழங்கப்பட்டிருக்கிறது. பாமக-வின் தொடர் வலியுறுத்தல் காரணமாகத்தான் இதுவும் சாத்தியமானது.
பணி நிலைப்பு வேண்டி பத்தாண்டுகளுக்கும் மேலாக பகுதி நேர ஆசிரியர்கள் அறவழியில் போராடி வருகின்றனர். ஆனால், அவர்களின் கோரிக்கைகள் ஏற்கப்படவில்லை. திமுக ஆட்சிக்கு வந்தால் பத்தாண்டுகளுக்கும் மேலாக பணி செய்து வரும் பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிலைப்பு செய்யப்படுவார்கள் என்பது திமுகவின் தேர்தல் அறிக்கையில் 181-ஆம் வாக்குறுதியாக அளிக்கப்பட்டிருந்தது. திமுக ஆட்சிக்கு வந்து நான்காண்டுகள் நிறைவடைய உள்ள நிலையில், அந்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்று தான் பகுதி நேர ஆசிரியர்கள் கோருகின்றனர். அதை நிறைவேற்ற தமிழக அரசு தயங்குவது ஏன்?
தமிழக அரசு வழங்கும் மிகக் குறைந்த ஊதியத்தைப் பெற்றுக் கொண்டு 13 ஆண்டுகளாக பணியாற்றி வரும் பகுதி நேர ஆசிரியர்களின் பலர், வேறு பணிகளுக்கு செல்வதற்கான வயது வரம்பை கடந்து விட்டனர். அதைக் கருத்தில் கொண்டு மனித நேய அடிப்படையிலும், வாக்குறுதியை நிறைவேற்றும் நேர்மையுடனும் அவர்களுக்கு பணி நிலைப்பு வழங்குவது தான் அறமாக இருக்கும்.
பகுதி நேர ஆசிரியர்களுக்கு பணி நிலைப்பு வழங்குவதால் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.450 கோடி மட்டுமே கூடுதலாக செலவாகும். இதனால் 12 ஆயிரம் குடும்பங்கள் அடையும் பயனுடன் ஒப்பிடும் போது இது ஒரு பொருட்டல்ல. எனவே, தமிழக அரசு இந்த கோரிக்கையை கனிவுடன் ஆய்வு செய்து பகுதி நேர ஆசிரியர்களை பணி நிலைப்பு செய்ய வேண்டும்" என்று மருத்துவர் இராமதாஸ் தெரிவித்துள்ளார்.
English Summary
PMK Ramadoss Condemn to DMK Govt MK Stalin Teachers issue