தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் வன்னியர்களுக்கு 10.50% உள் இடஒதுக்கீடு வழங்குவது குறித்த அறிவிப்பை வரும் 29ஆம் நாள் விழுப்புரத்தில் நடைபெறவிருக்கும் இட ஒதுக்கீட்டுப் போராட்ட ஈகியர்கள் மணிமண்டப திறப்பு விழாவில் வெளியிட வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு அவர் எழுதிய கடிதத்தில், "தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.50 விழுக்காடு உள் இடஒதுக்கீடு வழங்குவதற்கான சட்டப்பூர்வ பணிகள் தாமதமாகி வரும் நிலையில், அது குறித்த அறிவிப்பை வெளியிடுவதற்கான இயல்பான சூழல் உருவாகியிருப்பதை தங்களுக்கு சுட்டிக்காட்டுவதற்காகவும், அந்த சூழலை பயன்படுத்திக் கொண்டு வன்னியர் 10.50% இட ஒதுக்கீடு குறித்த அறிவிப்பை வெளியிட வேண்டும் என்று வலியுறுத்துவதற்காகவும் தங்களுக்கு இந்தக் கடிதத்தை எழுதுகிறேன்.
தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலை வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 20% இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி 1980ஆம் ஆண்டில் தொடங்கி, தொடர்ந்து பத்தாண்டுகள் நடைபெற்ற போராட்டத்தின் ஒரு கட்டமாக 1987ஆம் ஆண்டு செப்டம்பர் 17ஆம் நாள் முதல் வன்னியர் சங்கத்தின் சார்பில் நடத்தப்பட்ட ஒரு வார கால தொடர் சாலை மறியல் போராட்டத்தில் காவல்துறையினரால் துப்பாக்கியால் சுடப்பட்டும், கொடூரமாக தாக்கப்பட்டும் 21 பேர் உயிர்த் தியாகம் செய்தனர்.
அவர்களின் ஈடு இணையற்ற, உன்னத தியாகத்தைப் போற்றும் நோக்குடன் விழுப்புரத்தில் அமைக்கப்பட்டுள்ள சமூகநீதிப் போராளிகள் மணிமண்டபத்தின் திறப்பு விழா வரும் 29ஆம் நாள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. அந்த விழாவில் தாங்கள் பங்கேற்று சமூகநீதிப் போராளிகள் மணிமண்டபத்தை திறந்து வைக்கவிருப்பதாக அறிந்தேன்.
சமூகநீதிப் போராளிகளின் மணிமண்டபத்தை திறந்து வைக்கவிருக்கும் தங்களுக்கு அவர்கள் செய்த தியாகம் என்ன? அந்த தியாகத்திற்கான நோக்கம் என்ன? என்பது நன்கு தெரிந்திருக்கும். அதை நான் சொல்லி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய தேவை இருக்காது என நம்புகிறேன்.
அதைத் தொடர்ந்து வன்னியர்கள் உள்ளிட்ட 108 சாதியினரை மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினராக அறிவித்து வன்னியர்களுக்கு அரைகுறை சமூகநீதி வழங்கப்பட்டது, அதைத் தொடர்ந்து பா.ம.க. நடத்திய போராட்டங்களின் காரணமாக கடந்த அதிமுக ஆட்சியில் வன்னியர்களுக்கு 10.50% உள்இடஒதுக்கீடு வழங்கப்பட்டது, அந்த இடஒதுக்கீடு செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை வழங்கியத் தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசும், நானும் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க எந்தத் தடையும் இல்லை; உரிய தரவுகளைத் திரட்டி வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று தீர்ப்பளித்ததையும் தமிழக முதலமைச்சராகிய தாங்கள் மறந்திருக்க மாட்டீர்கள் என்றும் நம்புகிறேன்.
இட ஒதுக்கீட்டுப் போராட்ட ஈகியர்கள் இன்னுயிர் ஈர்ந்து 37 ஆண்டுகள் நிறைவடைந்து விட்ட நிலையில், அவர்கள் எந்த நோக்கத்திற்காக உயிர்த்தியாகம் செய்தார்களோ, அந்த நோக்கம் இன்னும் நிறைவேற்றப்படவில்லை என்பது எவ்வளவு பெரிய சமூக அநீதி? உயிர்த்தியாகம் செய்த ஈகியர்களுக்கு அது எவ்வளவு பெரிய அவமரியாதை? என்பது அனைவரும் நன்கு அறிந்தது தான்.
தமிழ்நாட்டின் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில், பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 20% இட ஒதுக்கீட்டில், வன்னியர்களுக்கு 10.50% இட ஒதுக்கீடு வழங்கலாம் என்று கடந்த 2022ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் நாள் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதன்பின் இன்றுடன் 970 நாட்கள் நிறைவடைந்து விட்டன. ஆனால், வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதற்கான ஆக்கப்பூர்வ நடவடிக்கைகள் எதுவும் தங்கள் ஆட்சியில் மேற்கொள்ளப்படவில்லை.
வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்குவதற்காகவே தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் மாற்றி அமைக்கப் படுவதாக கூறினீர்கள். வன்னியர்களுக்கான உள் இடஒதுக்கீடு குறித்து ஆய்வு செய்து 3 மாதங்களில் அறிக்கை தாக்கல் செய்யும்படி தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு 2023ஆம் ஆண்டு ஜனவரி 12ஆம் நாள் ஆணை பிறப்பிக்கப்பட்டது.
ஆனால், அதன்பின் 23 மாதங்கள் ஆகியும் வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு குறித்து பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் எந்த அறிக்கையும் தாக்கல் செய்யவில்லை. சமூகநீதியில் அக்கறை கொண்டிருப்பதாக கூறிக் கொள்ளும் தாங்களும் வன்னியர்களுக்கு சமூகநீதி கிடைப்பதை உறுதி செய்ய எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இடைப்பட்ட காலத்தில் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் தலைமையிலான குழுவினர் 08.04.2022ஆம் நாள் தங்களை தலைமைச் செயலகத்தில் சந்தித்து வன்னியர் இட ஒதுக்கீட்டுச் சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
அது குறித்த எனது கடிதத்தையும் தங்களிடம் வழங்கினர் தொடர்ந்து 04.07.2022, 10.09.2022, 17.02.2023, 30.04.2023, 10.05.2023 ஆகிய நாள்களில் தங்களுக்கு கடிதங்களை எழுதியிருக்கிறேன். அதன் தொடர்ச்சியாக 09.10.2023ஆம் நாள் இது தொடர்பான எனது கடிதத்துடன் பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தலைமையிலான குழுவினர் தங்களை சந்தித்து வன்னியர் இட ஒதுக்கீட்டு கோரிக்கையை வலியுறுத்தினார்கள்.
குறைந்தது 10 முறையாவது தங்களை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு வன்னியர் இட ஒதுக்கீட்டு சட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறேன். அத்துடன் நிற்காமல் 28.12.2024ஆம் நாள் நான் உங்களை தலைமைச் செயலகத்தில் சந்தித்து வன்னியர் இட ஒதுக்கீட்டு கோரிக்கையை வலியுறுத்தினேன்.
பாட்டாளி மக்கள் கட்சியின் கவுரவத் தலைவர் ஜி.கே.மணி, தொடர்வண்டித்துறையின் முன்னாள் இணை அமைச்சர்கள் அரங்க. வேலு, ஏ.கே. மூர்த்தி , வழக்கறிஞர் க.பாலு உள்ளிட்ட பா.ம.க. நிர்வாகிகள் இதுவரை 50க்கும் மேற்பட்ட முறை தங்களின் செயலாளர்களையும், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அதிகாரிகளையும் சந்தித்து பேசியிருப்பார்கள்.
ஆனால், அதனடிப்படையில் வன்னியர்கள் உள் இட ஒதுக்கீட்டுக்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனும் போது, வன்னியர்களுக்கு சமூகநீதியை வென்றெடுப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட அனைத்து முயற்சிகளும் விழலுக்கு இழைத்த நீராக வீணாகி விட்டதோ என்ற வேதனையும், ஏமாற்றமும் தான் எங்களுக்கு விஞ்சுகிறது.
வன்னியர்களின் இட ஒதுக்கீட்டுக்காக ஆக்கப்பூர்வ முயற்சிகள் எதுவும் மேற்கொள்ளப்படாத நிலையில் தான், அதற்காக போராடி உயிர்த்தியாகம் செய்த 21 தியாகிகளுக்கு, அவர்கள் மறைந்து 37 ஆண்டுகளுக்குப் பிறகு மணி மண்டபத்தை திறக்க முடிவு செய்திருக்கிறீர்கள்.
சமூகநீதியைக் காப்பதில் அவர்கள் செய்த தியாகம் அளப்பரியது. அவர்கள் செய்த தியாகத்திற்கு அரசின் சார்பில் அங்கீகாரம் அளிக்கப்படுவது அவசியம் தான். ஆனால், அதை விட முக்கியமானது அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவது தான். துப்பாக்கி குண்டுகளை மார்பில் வாங்கிய பிறகும் அவர்களிட்ட வீர முழக்கங்கள் எனது செவிகளில் இன்றும் ஒலித்துக் கொண்டு தான் இருக்கின்றன.
‘‘உயிரைக் கொடுத்தாவது இட ஒதுக்கீட்டைப் பெறுவோம்’’ என்பது தான் அவர்கள் எழுப்பிய முழக்கங்கள். அவர்களின் உயிரை அதிகார வர்க்கம் பறித்துக் கொண்டது; ஆனால், அவர்கள் கேட்ட இட ஒதுக்கீட்டை மட்டும் இன்று வரை அதிகாரவர்க்கம் வழங்கவில்லை.
சமூகநீதிக்காக ஆட்சி நடத்துவதாக பெருமிதப்பட்டு வரும் நீங்கள், இட ஒதுக்கீட்டுப் போராளிகள் எதற்காக உயிர்த்தியாகம் செய்தார்களோ, அதை மதித்து வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கியிருக்க வேண்டும். அது தான் அவர்களுக்கு நீங்கள் செய்யும் உண்மையான மரியாதையாக இருந்திருக்கும். ஆ
னால், அதை செய்யாமல் மணிமண்டபத்தை மட்டும் திறக்கும் தங்கள் அரசின் நடவடிக்கை சமூகநீதியின் அடையாளம் அல்ல. இது அவர்களின் ஆன்மாவை அமைதிப்படுத்தாது.
வன்னியர் இட ஒதுக்கீடு வழங்குவதில் தேவையில்லாமல் செய்யப்படும் கால தாமதம் வன்னிய மக்களிடமும், இளைஞர்களிடமும் பெரும் ஏமாற்றத்தையும், கோபத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. கல்வியிலும், வேலைவாய்ப்புகளிலும் வன்னியர்களுக்கு கிடைக்க வேண்டிய நியாயமான இட ஒதுக்கீட்டை அரசு வழங்க மறுப்பது நியாயமாக இருக்காது.
வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்காததன் மூலம் தமிழக அரசு இழைத்திருக்கும் அநீதியை தியாகிகளுக்கான மணிமண்டபம் கட்டுவதன் மூலம் மூடி மறைத்து விடலாம் என்று நீங்கள் கருதினால், அது நிச்சயமாக நடக்காது.
வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்க சட்டம் தடையாக இல்லை, விதிகள் தடையாக இல்லை, உச்சநீதிமன்றம் தடையாக இல்லை. ஆட்சியாளர்களின் மனத்தடை மட்டும் தான் பெரும் தடையாக இருக்கிறது. அதை அகற்றினால் அடுத்த நிமிடமே வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க முடியும்.
எனவே, அந்தத் தடையை அகற்றி விட்டு, தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.50% உள் இட ஒதுக்கீடு வழங்குவதற்கான சட்டத்தை இயற்றும் அறிவிப்பை வரும் 29ஆம் நாள் விழுப்புரத்தில் இட ஒதுக்கீட்டுப் போராட்ட ஈகியர்களின் மணிமண்டப திறப்பு விழாவில் தாங்கள் வெளியிட வேண்டும்.
வன்னியர்கள் உள் இட ஒதுக்கீடு குறித்த பரிந்துரை அறிக்கையை தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திடமிருந்து உடனடியாகப் பெற்று, அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் சட்டப்பேரவைக் கூட்டத்தில் வன்னியர்கள் உள் இட ஒதுக்கீட்டுச் சட்டத்தை நிறைவேற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்" என்று மருத்துவர் இராமதாஸ் தெரிவித்துள்ளார்.