#BigBreaking || முதல் பழங்குடியின குடியரசுத் தலைவர் வேட்பாளர் திரவுபதி முர்முவுக்கு பா.ம.க ஆதரவு! - Seithipunal
Seithipunal


குடியரசுத் தலைவர் தேர்தல்: முதல் பழங்குடியின ஜனாதிபதி வேட்பாளர் திருமதி திரவுபதி முர்முவுக்கு பா.ம.க ஆதரவு அளிப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதுகுறித்து வெளியான அந்த அறிவிப்பில், "பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்களை மாண்புமிகு மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் இராஜ்நாத்சிங் அவர்களும், பாரதிய ஜனதாக் கட்சியின் தலைவர் திரு. ஜே.பி. நட்டா அவர்களும் நேற்று மாலை தொடர்பு கொண்டு, குடியரசுத் தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளராக ஜார்க்கண்ட் மாநில முன்னாள் ஆளுனராகிய திருமதி. திரவுபதி முர்மு அவர்களை களமிறக்க முடிவு செய்திருப்பதாக தெரிவித்தனர். அவருக்கு பாட்டாளி மக்கள் கட்சி  ஆதரவளிக்க வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக் கொண்டனர்.

இந்தக் கோரிக்கை குறித்து பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள், பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் மற்றும் உயர்நிலைக் குழு உறுப்பினர்களுடன் இன்று காலை  கலந்தாய்வு நடத்தினார். குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் திருமதி. திரவுபதி முர்மு அவர்கள், ஒரிசா மாநிலத்தைச் சேர்ந்த பழங்குடியின பெண்மணி ஆவார். மிகவும் சாதாரண குடும்பத்தில் பிறந்த அவர், பல தடைகளை முறியடித்து பொதுவாழ்வில் முன்னேறியவர். ஜார்க்கண்ட் ஆளுனராக 6 ஆண்டுகளுக்கு மேல் சிறப்பாக பணியாற்றியவர் என்ற பெருமையும் அவருக்கு உண்டு.

திருமதி. திரவுபதி முர்மு அவர்கள் தேர்தலில் வெற்றி பெற்று குடியரசுத் தலைவராக பொறுப்பேற்கும்போது  அந்தப் பதவியை அலங்கரிக்கும் முதலாவது பழங்குடியினராகவும், இரண்டாவது பெண்மணியாகவும் இருப்பார். பழங்குடியினர் ஒருவரை குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுப்பது அந்த இனத்திற்கு அளிக்கப்படும் அங்கீகாரம் என்பதாலும், செய்யப்படும் பெருமை என்பதாலும் குடியரசுத் தலைவர் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரும், சட்டப்பேரவை உறுப்பினர்களும் திருமதி திரவுபதி முர்முவை ஆதரிப்பது என்று பாட்டாளி மக்கள் கட்சியின் உயர்நிலைக் குழு கூட்டத்தில் ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது.

இந்தியக் குடியரசின் 72 ஆண்டு கால வரலாற்றில் பழங்குடியின பெண்மணி ஒருவரை முதன்முறையாக  குடியரசுத் தலைவராக்க ஆதரவளிப்பதில் பாட்டாளி மக்கள் கட்சி மகிழ்ச்சியும், பெருமிதமும் அடைகிறது" என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

PMK Support to precedent candidate Draupadi Murmu


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->