மக்களைக் கசக்கிப் பிழிகின்ற இந்திய ஒன்றிய பாஜக அரசு - சீமான் கணடனம்.! - Seithipunal
Seithipunal


மக்களைக் கசக்கிப் பிழிகின்ற எரிபொருள் மற்றும் எரிகாற்று உருளை விலை உயர்வினை இந்திய ஒன்றிய பாஜக அரசு உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும் என்று, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள அறிக்கையில், "வரலாறு காணாத வகையில் வாகன எரிபொருள்களின் விலை பன்மடங்கு உயர்ந்து புதிய உச்சத்தை எட்டியுள்ளதோடு, எரிவாயு உருளையின் விலையும் தொடர்ந்து உயர்ந்து வருவது ஏழை, எளிய அடித்தட்டு மக்களை வாட்டிவதைக்கும் ஒன்றிய பாஜக அரசினுடைய கொடுங்கோன்மையின் உச்சமாகும். மக்களைப் பொருளாதார நெருக்கடிக்குள்ளாகி வாட்டிவதைக்கும் மோடி அரசின் எதேச்சதிகாரச் செயல் வன்மையான கண்டனத்திற்குரியது.

மத்தியில் ஆளும் பாஜக அரசின் தவறான பொருளாதாரக் கொள்கையினால் பணவீக்கம், தொழில் முடக்கம் ஏற்பட்டு விலைவாசி கடுமையாக உயர்ந்து மக்கள் தத்தளித்து வரும் நிலையில் தற்போது எரிபொருள் மற்றும் எரிகாற்று உருளை விலையை மீண்டும் உயர்த்தியிருப்பது நாட்டு மக்களை மேலும் வறுமையின் பிடியில் தள்ளுகின்ற கொடுஞ்செயலாகும். எரிபொருள் மற்றும் எரிகாற்று உருளைகளின் விலையைக் கண்மூடித்தனமாக அதிகரிப்பதென்பது மக்கள் நலனுக்குப் புறம்பான அரசப்பயங்கரவாதமாகும்.

ஏற்கனவே, சுங்கக்கட்டணக் கொள்ளையால் பாதிக்கப்பட்ட பொதுமக்களையும், சரக்கு வாகன உரிமையாளர்களையும் இது வெகுவாகப் பாதிக்கும். சுமையை ஏற்றிச்செல்லும் பொருள்களின் வாடகைச் செலவு உயர்ந்து விற்பனைச்சந்தையில் அத்தியாவசியப் பொருட்களின் விலை மேலும் அதிகரிக்கவே இது வழிவகுக்கும். இதனால் நடுத்தர, ஏழை மக்கள் மேலும் மேலும் இன்னலுக்கு ஆளாவார்கள்.

நேற்று வரை 915 ரூபாய் என்ற உச்ச அளவிலிருந்த எரி காற்று உருளை ஒன்றின் விலை தற்போது மேலும் 50 ரூபாய் அதிகரித்து 965 ரூபாய் எனக் கட்டுக்கடங்காத அளவில் அதிகரித்துள்ளது. அதேபோல் வாகன எரிபொருள்கள் விலை 102 ரூபாய் என்ற புதிய உச்சத்தை எட்டியுள்ளது. இதன் மூலம் ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்கள் எரிபொருள் மற்றும் எரிவாயு உருளைகளைப் பயன்படுத்த முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

எரிகாற்று உருளை பயன்படுத்தும் குடும்பங்களுக்கு மண்ணெண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படமாட்டாது என அரசு அறிவித்துள்ள நிலையில், தற்போது எரிவாயு உருளையும் வாங்க முடியாமல், அத்தியாவசிய பொருட்களும் கிடைக்கப்பெறாமல் எளிய மக்கள் திண்டாடும் நிலைக்கு ஆளாகியுள்ளனர். நாட்டின் பொருளாதாரத்தை மீட்க எவ்வித நடவடிக்கையையும் முடுக்கிவிடாத இந்திய ஒன்றிய அரசு, மக்கள் தலைமீது வரிச் சுமையை ஏற்றி வைப்பது எவ்வகையிலும் ஏற்புடையதல்ல.

ஆகவே, இந்திய ஒன்றிய அரசு எண்ணெய் நிறுவனங்களிடமிருந்து எரிபொருள் விலை நிர்ணய அதிகாரத்தை மீளப்பெறுவதோடு, எரிபொருள்களின் மீதான வரியையும் உடனடியாகக் குறைக்க வேண்டும். மேலும், தமிழ்நாட்டை ஆளும் திமுக அரசு தனது தேர்தல் வாக்குறுதியில் எரிகாற்று உருளைகளுக்கு ரூ100 மானியம் வழங்கப்படும் எனவும் அளித்த உறுதிமொழியை நிறைவேற்றும் வகையில், விலை உயர்வால் மக்கள் பெரும் இக்கட்டிற்கு ஆளாகியுள்ள தற்போதைய துயர காலத்தைக் கருத்தில் கொண்டு உடனடியாகச் செயல்படுத்த வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்"

இவ்வாறு அந்த அறிக்கையில் சீமான் தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

seeman say about gas cylinder issue


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->