மத்தளம் போல் இரண்டு பக்கமும் அடி வாங்கும் அண்ணாமலை, ஸ்டாலினை மிஞ்சுவாரா?
Annamalai has issued a statement expressing regret to the journalists for the action of the bjp volunteers
தலைவன் எவ்வழியோ தொண்டனும் அவ்வழியே என நிரூபிக்கும் தமிழக பாஜக!
நேற்று அமெரிக்காவிலிருந்து சென்னை திரும்பிய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு வரவேற்பு கொடுக்கும் நிகழ்ச்சி சென்னை பாஜக தலைமை அலுவலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சியில் செய்தி சேகரிக்க பத்திரிகையாளர்களுக்கு அழைப்பு அனுப்பப்பட்டதை தொடர்ந்து பத்திரிகையாளர்கள் அங்கு சென்றுள்ளனர்.
பாஜக அலுவலக வாயிலில் பத்திரிகையாளர்கள் நின்று கொண்டிருந்தபோது அங்கு வந்திருந்த ஒரு பெண் மயங்கி கீழே விழுந்துள்ளார். உடனே அவரைச் சுற்றி கூட்டம் கூடவே அங்கு என்ன நடக்கிறது என்பதை அறிவதற்காக செய்தியாளர்களும், ஒளிப்பதிவாளர்களும் சென்றுள்ளனர். உடனே அங்கிருந்த பாஜக தொண்டர்கள் செய்தியாளர்களை தடுத்து நிறுத்தி, கேமராவை தள்ளியதுடன், ஒளிப்பதிவாளர்களையும் பிடித்து தள்ளியுள்ளனர். மேலும், மிகவும் தகாத வார்த்தைகளில் பத்திரிகையாளர்களை திட்டியதாக தெரிய வருகிறது. அதுமட்டுமில்லாமல் "டீ, பிஸ்கட் சாப்பிடத் தானே இங்கே வருகிறீர்கள், அதை சாப்பிட்டுவிட்டு செல்லுங்கள்” என்று தரக்குறைவாக பத்திரிக்கையாளர்களை பாஜகவின் தாமரை சொந்தங்கள் பேசி உள்ளனர்.
பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா செல்லும் இடமெல்லாம் பத்திரிகையாளர்களை கேவலமாக பேசுவதை வழக்கமாக கொண்டுள்ளார். நேற்று சத்யம் திரைங்கரங்கள் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பு இதற்கு உதாரணம். செய்தியாளர் ஒருவரை கிறிஸ்தவரா என கேட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பத்திரிகையாளர்களை பணம் வாங்கிக்கொள்ளுங்கள் என்று வெளிப்படையாக செய்தியாளர் சந்திப்பில் கூறினார். இவ்வாறு, பாஜகவின் தலைவர்கள் தொடங்கி தொண்டர்கள் வரை, பத்திரிகையாளர்களை கண்டாலே எரிந்து விழுவதும். கேள்வி கேட்டால் ஆண்ட்டி இந்தியன் என சொல்வதை வழக்கமாக வைத்துள்ளனர்.
இந்த நிலையில் நேற்று நடைபெற்ற நிகழ்வுக்கு வருத்தம் தெரிவித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அடக்கம் அமரருள் உய்க்கும் என்ற திருவள்ளுவரின் குரலை மேற்கோள்காட்டி தனது தாமரை சொந்தங்களை அடங்கி இருக்குமாறு வலியுறுத்தியுள்ளார். இந்தத் திருக்குறளை மேல் காட்டும் அண்ணாமலையே இதற்கு முன்பு செய்தியாளர்களை தரைக்குழுவாக பேசியதால் மன்னிப்பு கேட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தலைவன் எவ்வழியோ தொண்டனும் அவ்வழியே என்பது போல் நேற்று கமலாலயத்தில் பாஜகவின் தாமரை சொந்தங்கள் நடந்து கொண்டது ஒரு உதாரணம்.
ஏற்கனவே அமெரிக்காவில் பேசியதற்கு எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்கு ஆளாகியுள்ள அண்ணாமலை. தற்பொழுது தொண்டர்களின் செயலுக்காக பத்திரிகையாளர்களிடம் வருத்தம் தெரிவித்து அறிக்கை விட்டுள்ளார். மத்தளத்திற்கு இரண்டு பக்கமும் அடி என்பது போல் தற்பொழுது எதிர்க்கட்சிகளின் விமர்சனத்தாலும் தொண்டர்களின் செயலாலும் அண்ணாமலைக்கு இரண்டு பக்கமும் அடி விழுகிறது. இப்படியே சென்றால் திமுக தலைவர் ஸ்டாலினை மிஞ்சி விடுவாரோ என இணையதளவாசிகள் கிண்டல் அடிக்கின்றனர்.
English Summary
Annamalai has issued a statement expressing regret to the journalists for the action of the bjp volunteers