திராவிட மாடல் ஆட்சியில் தமிழகம் அலங்கோல நரகமாகிக் கொண்டிருக்கிறது - பாஜக கடும் கண்டனம்!
BJP condemn to DMK Govt MK Stalin Amaran movie
திருநெல்வேலியில் அமரன் திரைப்படத்தை திரையிட்டு வருகின்ற அலங்கார் திரையரங்கின் மீது சில பயங்கரவாதிகளால் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்ட சம்பவத்திற்கு, பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்த அவரின் செய்திக்குறிப்பில், "தொடர்ந்து எஸ் டி பி ஐ, தவ்ஹீத் ஜமாஅத் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட அமைப்புகள் இந்த திரைப்படத்தை கண்டித்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்த நிலையில், தற்போது பெட்ரோல் குண்டு வீச்சு என்பது திட்டமிட்ட சதி செயலே என்பது புலனாகிறது.
காவல் துறையினர் பாதுகாப்பு அளிப்பதாக சொல்லப்பட்டாலும் சிறிதும் அச்சமின்றி பயங்கரவாதிகள் குண்டு வீச்சில் ஈடுபட்டுள்ளது தமிழகத்தின் சட்ட ஒழுங்கு நிலையின் சீர்கேட்டினை வெளிச்சம் போட்டு காட்டுகிறது.
தமிழக காவல் துறையால் மத அடிப்படைவாதிகளின் அச்சுறுத்தலை கட்டுப்படுத்த முடியவில்லை என்பதே இதன் மூலம் உறுதியாகிறது. தாங்கள் நினைத்தால் என்ன வேண்டுமானாலும் செய்வோம் என்கின்ற அகந்தையை இந்த பயங்கரவாத சம்பவம் உணர்த்துகிறது.
உடனடியாக இந்த பயங்கரவாத சம்பவத்தில் ஈடுபட்ட பயங்கரவாதிகளை கண்டுபிடித்து தண்டிப்பதன் மூலம் மட்டுமே இனி எதிர்காலத்தில் இது போன்ற அச்சுறுத்துல்களை தடுத்து நிறுத்த முடியும்.
அமைதி பூங்காவாக இருந்த தமிழகம் திராவிட மாடல் ஆட்சியில் அலங்கோல நரகமாகிக் கொண்டிருக்கிறது என்பது தொடர்ந்து நடைபெறும் ரவுடியிசம் மற்றும் சமூக விரோத செயல்கள் நிரூபணமாகிறது" என்று நாராயணன் திருப்பதி விமர்சனம் செய்துள்ளார்.
English Summary
BJP condemn to DMK Govt MK Stalin Amaran movie