சென்னை மாநகராட்சி பள்ளி மாணவர்களிடையே ஆய்வு ஒன்றை நடத்தியது.அந்த ஆய்வில், சென்னை மாநகராட்சி பள்ளிகளில் படிக்கும் மாணவர்களில், 26.1 சதவீதம் பேருக்கு மட்டுமே, சரளமாக ஆங்கிலம் படிக்கத் தெரிவதாக, அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
இதன் காரணமாக தமிழக அரசு, பள்ளி மாணவர்களுக்கு, ஆங்கில பாடத்திற்கு சிறப்பு வகுப்புகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சியில் கல்வித் துறையின் கீழ் 32 மேல்நிலை; 38 உயர்நிலை; 98 நடுநிலை; 119 தொடக்கப் பள்ளிகள் என, 281 பள்ளிகள் செயல்படுகின்றன. இந்த பள்ளிகளில், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். பொதுத் தேர்வுகளில், 10 ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களின் தேர்ச்சி விகிதம் குறைவாக உள்ளது.
குறிப்பாக, மாணவர்கள் ஆங்கிலம், கணிதம் உள்ளிட்ட பாடங்களில், அதிகமாக தோல்வியடைந்து வருகின்றனர். எனவே, சென்னை மாநகராட்சி பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களின் ஆங்கில மொழி வாசிப்புத் திறன் எப்படி உள்ளது என, சமீபத்தில் மாநகராட்சி ஆய்வு ஒன்றை நடத்தியது.
இந்த ஆய்வில், ஆறாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை படிக்கும் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்களில், 26.1 சதவீதம் மாணவர்களுக்கு மட்டுமே, ஆங்கில மொழி பாடப் புத்தகங்களை சரளமாக படிக்கத் தெரிகிறது. மேலும், குறிப்பிட்ட மாணவர்களால் மட்டுமே ஆங்கிலம் பேசவும், புரிந்து கொள்ளவும் முடிகிறது.
மற்ற மாணவர்களால், ஆங்கில மொழி புத்தகங்களைப் பார்த்து கூட படிக்க முடியாத நிலை இருப்பதாக, ஆய்வில் தெரிய வந்துள்ளது. இதைத் தொடர்ந்து, சென்னை மாநகராட்சி பள்ளி மாணவர்களிடம் ஆங்கில மொழி கல்வியை அதிகரிக்கும் வகையில், நடவடிக்கை எடுத்து வருகிறது.
இது குறித்து, சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்ததாவது, சென்னை மாநகராட்சி பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் கல்வி திறனை அதிகரிக்க, பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி, தரமான உட்கட்டமைப்பு வசதிகள், நுாலகம், விளையாட்டு அரங்கம் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அதேநேரம் பள்ளி மாணவர்களிடையே வருகைப்பதிவு குறைதலும் அதிகரித்துள்ளது.
இதனால், மாணவர்களின் கற்றல் திறன் மற்றும் தேர்ச்சியும் பாதிக்கப்படுகிறது. மேலும், ஆங்கில மொழி பாடத்தில் மாணவர்கள் படிக்கும் திறன் குறைவாக உள்ளது. இவற்றை சரிசெய்ய, மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி, தன்னார்வலர்களின் மூலமாக மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு ஆங்கிலம் கற்றுத் தரவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனால், அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும், சென்னை மாநகராட்சி பரிந்துரை அளித்துள்ளது. அந்த பரிந்துரையில்,
* சென்னை மாநகராட்சி பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெறும் வகையில், தினசரி வீட்டுப் பாடம் கொடுக்க வேண்டும்
* மாணவர்கள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் 90 சதவீதம் வருகைப் பதிவை வைத்திருக்க வேண்டும். வருகைப் பதிவு குறைந்தால், சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை
ஆசிரியர் தான் பொறுப்பேற்க வேண்டும்
* வாரந்தோறும் நடைபெறும் தேர்வு அடிப்படையில், ஒவ்வொரு ஆசிரியரும் ஆண்டுக்கு 85 சதவீதம் மாதிரி தேர்வு நடத்தி, தேர்ச்சியை உறுதி செய்ய வேண்டும்
* பள்ளிகளின் உட்கட்டமைப்பு, தேவையான வசதிகள் குறித்து, மாநகராட்சியிடம் கேட்டுப் பெற வேண்டும்; ஆய்வுக் கூட்டத்திலும் தெரிவிக்கலாம்
* பள்ளி வாரியாக பெற்றோர் - ஆசிரியர் கூட்டம் நடத்துவதுடன், அதில் மாணவர்களின் விடைத்தாளைக் கொண்டு ஆராய வேண்டும். அவற்றை வீடியோ பதிவாக பதிவு செய்ய வேண்டும்
* பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் சீருடைகள், அனைத்து மாணவர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும்
* ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை உள்ள மாணவர்கள், பள்ளிகளில் உள்ள நுாலகங்களில் எடுத்த பாடப்புத்தகம் என்ற அடிப்படையில் ஆய்வு செய்ய வேண்டும். அனைத்து மாணவர்களும் நுாலகங்களை பயன்படுத்தும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சென்னை மாநகராட்சி பள்ளிகளின் செயல்பாடு குறித்து, மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி தலைமையில், சமீபத்தில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இந்த ஆலோசனைக்கு கூட்டத்தில், அலகு தேர்வில் பங்கேற்ற 10 ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களில், 2,715 மாணவர்கள் தேர்வு எழுதாமல், விடுப்பு எடுத்தது தெரிய வந்தது.
சென்னை மாநகராட்சி பள்ளிகளில் 7,428 பேர் 10 ம் வகுப்பு படிக்கின்றனர். அதில், பள்ளிகள் துவங்கியபோது நடந்த முதல் அலகு தேர்வில், 6,719 மாணவர்கள் பங்கேற்றனர். 709 மாணவர்கள் விடுப்பு எடுத்துள்ளனர். இவர்களில் 63.28 சதவீதம் பேர் தான் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதேபோல் பிளஸ் 2 மாணவர்களில், 6,779 உள்ளனர். இவர்களில், 4,773 மாணவர்கள் முதல் அலகு தேர்வில் பங்கேற்று, 3,205 பேர் என, 60.66 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 2,006 மாணவர்கள் விடுப்பு எடுத்துள்ளனர்.
பிளஸ் 2 மாணவர்களை பொறுத்தவரையில், பிளஸ் 1 தேர்வில் தேர்ச்சி பெறாத பாடத் திட்டங்களுக்கான தேர்வும், முதல் அலகு தேர்வில் நடந்த அதே நாளில் வந்ததால், பெரும்பாலான மாணவர்கள், அத்தேர்வில் பங்கேற்றது தெரிந்தது. ஆனால், 10 ம் வகுப்பு மாணவர்கள் தேர்வில் பங்கேற்காதது மற்றும் தேர்ச்சி விகிதம் குறைவாக பதிவான பள்ளிகள் குறித்து, இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.