போலி சாதி சான்றிதழ் விவகாரம்.. தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் கிடுக்கு பிடி..!!
ChennaiHC orders TNgovt form rules to prevent fake certificate
சென்னை உயர்நீதிமன்றத்தில் சொக்கலிங்கம் என்பவர் குருமன் சமுதாயத்திற்கு பழங்குடியினர் என சாதி சான்றிதழ் வழங்குவது தொடர்பாக நீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையில் விதிகளை வகுக்க கோரி தமிழக அரசிடம் அளிக்கப்பட்ட மனுவை பரிசீலனை செய்ய உத்தரவிட வேண்டும் என வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு உயர் நீதிமன்ற நீதிபதிகள் சுப்பிரமணியன், குமரேஷ் பாபு ஆகியோர் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் "உயர்நீதிமன்ற நீதிபதிகள் பிறப்பித்துள்ள உத்தரவில் பட்டியல் இனத்தவர் அல்லது பழங்குடியினர் சாதி சான்றிதழ் வழங்குவது தொடர்பாக உச்சநீதிமன்றம் ஏற்கனவே விதிகளை வகுத்துள்ளது. அதன் அடிப்படையில் மாநில அளவில் சாதி சான்றிதழ் சரி பார்க்கும் குழு அமைக்க வேண்டும். அதேபோன்று போலி சான்றிதழ்கள் தொடர்பான புகார்கள் குறித்து விசாரிக்க கண்காணிப்பு பிரிவு ஏற்படுத்த வேண்டும்.
அதேபோன்று போலிச் சான்றிதழ் கோரி விண்ணப்பித்தால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது வழக்கு தொடரவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதே போன்று சாதி சான்றிதழ் கோரி விண்ணப்பிக்கும் நபர்களின் மனுவை வைத்து மட்டும் வழங்கக்கூடாது பெற்றோர் மற்றும் உடன் பிறந்தவர்களுக்கு ஏற்கனவே சாதி சான்றிதழ் வழங்கப்பட்டிருந்தால் அதன் அடிப்படையில் விண்ணப்பதாரர்களுக்கு சாதித்து சான்றிதழ் வழங்க வேண்டும்.
சாதி சான்றிதழ் கோரும் உண்மையான விண்ணப்பதாரர்கள் எந்தவித இடையூறும் இல்லாமல் சான்றிதழ் பெரும் விதமாகவும் போலி சான்றிதழ் பெறுவதை தடுக்கும் விதமாகவும் உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றங்களின் ஆணைப்படி 8 வாரங்களுக்குள் தமிழக அரசு விதிகளை வகுக்க வேண்டும். அதேபோன்று போலிச் சான்றிதழ்களை தடுக்கும் விதமாக சட்டம் இயற்ற வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தும் இதுவரை தமிழக அரசு சட்டம் இயற்றவில்லை. எனவே நீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில் சாதி சான்றிதழ் வழங்கக்கூடிய அதிகாரிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்" என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
English Summary
ChennaiHC orders TNgovt form rules to prevent fake certificate