சேது சமுத்திர திட்டத்திற்கு தனி தீர்மானம்... சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் தாக்கல் செய்தார்..!!
CM Stalin tabled separate resolution for Sethu Samudra Project
தமிழகத்தின் தூத்துக்குடி, ராமநாதபுரம் உள்ளிட்ட தென் மாவட்ட பகுதிகள் வளம்பெறவும், வர்த்தகம் பெருகவும் அப்போதைய தமிழக முதல்வர் கருணாநிதியின் கனவு திட்டமான சேது சமுத்திர திட்டத்தை தற்போதைய பாஜக அரசு கிடப்பில் போட்டுள்ளது. அதே போன்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணி சாமியால் இலங்கை மற்றும் ராமேஸ்வரம் இடையே உள்ள ராமர் பாலம் எனும் மணல் திட்டுக்கள் பாதிக்கும் என இந்த திட்டத்திற்கு தடையாக இருந்து வருகிறார். மேலும் ராமர் பாலத்தை தேசிய புராதான சின்னமாக அறிவிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார்.
இந்த நிலையில் மத்திய பாஜக அரசு கிடப்பில் போட்டுள்ள சேது சமுத்திர திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டுமென தமிழக சட்டப்பேரவையில் தனி தீர்மானத்தை முதல்வர் மு.க ஸ்டாலின் தாக்கல் செய்தார். அப்போது பேசிய அவர் "கடந்த 1967ல் ஆட்சிக்கு வந்த பேரறிஞர் அண்ணா சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தினார். அதன் பின்னர் அமைந்த பாஜக ஆட்சியில் தான் சேது சமுத்திரத் திட்டத்திற்கான பாதை எது என தீர்மானிக்கப்பட்டது.
அதன் பின்னர் கடந்த 2004 ஆம் ஆண்டு காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு அமைந்த போது திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு சேது சமுத்திர திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. அதன் பின்னர் அரசியல் காரணங்களுக்காக சேது சமுத்திர திட்டத்திற்கு பாஜக முட்டுக்கட்டை போட்டுள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆரம்பத்தில் இத்திட்டத்திற்கு ஆதரவளித்த நிலையில் திடீரென தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு எதிர்த்தார்.
சேது சமுத்திர திட்டத்தில் நிறைவேற்றப்படாததற்கான அரசியல் காரணங்களை சொல்ல விரும்பவில்லை. சேது சமுத்திர திட்டம் நிறைவேற்றப்பட்டால் நேரடியாகவும் மறைமுகமாகவும் தமிழகத்தில் 50 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். சேது சமுத்திர திட்டத்திற்கான மாற்று பாதை கண்டறிந்தும் பாஜக அரசு நிறைவேற்ற வில்லை. மத்திய அரசு சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றாமல் இருப்பது தமிழக வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடுவதாக தமிழக அரசு எண்ணுகிறது" என தனி தீர்மானம் தாக்கல் செய்த பொழுது முதல்வர் மு.க ஸ்டாலின் பேசியுள்ளார்.
English Summary
CM Stalin tabled separate resolution for Sethu Samudra Project