வீடு வீடாக 20 பேருடன் செல்லலாம்! தேர்தல் ஆணையம் புதிய அறிவிப்பு.!
Election Commission New Rules
நகர்புற உள்ளாட்சி தேர்தலில் 20 பேருடன் வீடுவீடாக சென்று தேர்தல் பரப்புரை மேற்கொள்ள மாநில தேர்தல் ஆணையம் அனுமதி அளித்து புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான தேர்தல் நடத்தை விதிகளை மாற்றியமைத்து மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அந்த அறிவிப்பின்படி, இரவு 8 மணி முதல் காலை 8 மணி வரை பரப்புரை கூட்டங்களுக்கு அனுமதி கிடையாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுவரொட்டிகள், கொடிகள், பதாகைகள், சிலைகள் அல்லது வேறு ஏதேனும் பிரச்சாரப் பொருள்கள் எடுத்துச் சென்று பரப்புரை மேற்கொள்ள அனுமதி இல்லை என்றும், மத சார்புடைய சின்னங்களை பயன்படுத்தியோ அல்லது சமூகம் மற்றும் சாதி அடிப்படையான உணர்வுகளை பயன்படுத்தியோ வாக்குசேகரிக்க கூடாது என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் மதம் அல்லது மொழியின் அடிப்படையில் வெறுப்புணர்வு, மன இறுக்கம் உள்ளிட்டவற்றை ஏற்படுத்தும் விதமாகவோ அல்லது அதிகப்படுத்தும் விதமாகவோ செயல்பட கூடாது என்றும், பிறவேட்பாளர்களின் தனிப்பட்ட குணம், நடத்தை உள்ளிட்டவற்றை அவகளின் வெற்றி வாய்ப்பினை பாதிக்கும் நோக்கில் விமர்சிக்கக் கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிறவேட்பாளர்களின் கூட்டங்கள் மற்றும் பரப்புரைகளுக்கு இடையூறு ஏற்படும் விதத்தில் செயல்படுதல் கூடாது என்றும், வேட்பாளர்கள் தன்னுடன் அதிகபட்சமாக 20 ஆதரவாளர்களுடன் வீடு வீடாக சென்று பரப்புரை மேற்கொள்ள அனுமதி அளிக்கப்படுவதாகவும், வேட்பாளர்கள் தங்களின் பிரசாரத்திற்கு அச்சிடப்பட்ட அறிவிப்புகளைப் பயன்படுத்தலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பரப்புரை பொதுக்கூட்டங்களை பொறுத்தவரை, உள்ளரங்கமாக இருந்தால் 50 சதவீத பார்வையாளர்களுடனும், திறந்தவெளி அரங்கமாக இருந்தால் 30 சதவீத பார்வையாளர்களுடனும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலரின் அனுமதி பெற்று பரப்புரைக் கூட்டங்களை நடத்திக் கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எவ்வளவு பெரிய அரங்கமாக இருந்தாலும் அதிகபட்சமாக 500 பேர் வரை மட்டும் தான் இருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் தேர்தல் பரப்புரைக்கு பயன்படுத்தப்படும் வாகனங்களின் விவரங்களை சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரி, உதவி தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் தெரிவித்து முன் அனுமதி பெற வேண்டும் எனவும், வேட்பாளர் அல்லது முகவருக்கு ஒரு வாகனத்திற்கு மட்டுமே பிரசாரத்திற்கு அனுமதி வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதலில் வருபவருக்கே முன்னுரிமை என்ற அடிப்ப்டையில், பிரசாரம் மேற்கொள்ள தடையில்லா சான்று வழங்கி அனுமதி அளிக்கப்படும் என்றும், கொரோனா தொற்று பரவல் காரணமாக பாதயாத்திரை, சைக்கிள் மற்றும் வாகன பேரணிக்கு வரும் 11- ஆம் தேதி வரை அனுமதி இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் நட்சத்திர பேச்சாளர்கள் எண்ணிக்கை 40 -லிருந்து 30 ஆக குறைக்கப்பட்டுள்ளதாகவும், அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளின் நட்சத்திர பேச்சாளர்களின் எண்ணிக்கை 20-லிருந்து 15 ஆக குறைக்கப்பட்டுள்ளதாகவும் மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
English Summary
Election Commission New Rules