தமிழ்நாட்டில் அடுத்த மாதம் முதல் மின்சாரக் கட்டணத்தை உயர்த்தக் கூடாது - மருத்துவர் இராமதாஸ்!! - Seithipunal
Seithipunal


தமிழ்நாட்டில் அடுத்த மாதம் முதல் மின்சாரக் கட்டணத்தை உயர்த்தக் கூடாது என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது :-

தமிழ்நாட்டில் கடந்த 2022-ஆம் ஆண்டு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் பிறப்பித்திருக்கும் ஆணையின்படி, வரும் ஜூலை ஒன்றாம் தேதி முதல் வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கான மின்சாரக் கட்டணத்தை உயர்த்த தமிழக அரசின் சார்பில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சி அளிக்கின்றன. மின்சாரக் கட்டணத்தை உயர்த்த தமிழ்நாடு அரசு திட்டமிட்டிருந்தால் அது கண்டிக்கத்தக்கது.

தமிழ்நாட்டில் மின்சாரக் கட்டணத்தை உயர்த்தி 2022-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் பிறப்பித்த ஆணையில், ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதம் ஒன்றாம் தேதியிலிருந்து மின்சாரக் கட்டணம் உயர்த்தப்பட வேண்டும் என்றும், ஒவ்வொரு நிதியாண்டின் ஏப்ரல் மாதத்திற்கான பண வீக்க விகிதம் அல்லது 6 விழுக்காடு இவற்றில் எது குறைவோ அந்த அளவுக்கு மின்கட்டணம் உயர்த்தப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது. அதன்படி நடப்பாண்டின் ஏப்ரல் மாத பணவீக்க அளவான 4.38 விழுக்காடு அளவுக்கு மின்சாரக் கட்டணத்தை உயர்த்த தமிழக அரசு திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது. அதனால் யூனிட்டுக்கு 50 காசுகள் வரை மின்சாரக் கட்டணம் உயரும்.

அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு, வறட்சி காரணமாக வேளாண்மை பாதிப்பு, மக்களின் வருவாய்க் குறைவு உள்ளிட்ட காரணங்களால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மின்சாரக் கட்டணத்தை மீண்டும் உயர்த்தினால் அதை மக்களால் தாங்கிக் கொள்ள முடியாது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் மின்சாரக் கட்டணங்கள் 2.18% உயர்த்தப்பட்டது. அப்போது பொதுமக்களால் அதை தாங்கிக் கொள்ள முடியாது என்பதால், மின் கட்டண உயர்வை அரசே ஏற்றுக் கொள்ளும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். கடந்த ஆண்டை விட நடப்பாண்டில் பொதுமக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் நடப்பாண்டில் மட்டும் மின்சாரக் கட்டண உயர்வை மக்களால் எவ்வாறு தாங்கிக் கொள்ள முடியும்?

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் இழப்பைக் குறைக்க மின்சாரக் கட்டணத்தை உயர்த்துவது தீர்வல்ல. 2022-ஆம் ஆண்டில் ரூ.31,500 கோடிக்கு மின்சாரக் கட்டணத்தை உயர்த்தியும் மின்சார வாரியத்தின் நஷ்டம் குறைவதற்கு பதிலாக அதிகரித்துள்ளது. எனவே, கட்டண உயர்வால் பயன் இல்லை. மின்சார வாரியத்தில் நடக்கும் ஊழல்களைத் தான் தடுக்க வேண்டும். வீடுகள், தொழிற்சாலைகள் ஆகிய இரு தரப்புக்கும் மின்சாரக் கட்டணத்தை உயர்த்தும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என்று இவ்வாறு கூறிவுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Electricity tariff should not be hiked in Tamil Nadu from next month Doctor Ramadoss


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->